Saturday, January 2, 2016

படைப்புகள்

எதிர்வினை
(27.12.2015 ஞாயிறன்று தமிழ் இந்து நாளிதழில் ஏழாம் பக்கத்தில் “எழுத்தாளர் வலியை ஆய்வாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்: ஜோ டி குருஸ் ஆதங்கம்” என்ற தலைப்பில் வந்த சிறு செய்திக்கு எதிர்வினையாக எழுதப்படும் கட்டுரை.)
எழுத்தாளர்களுக்கு அறம் வேண்டும்
“எழுத்தாளரின் உள்வலி என்ன தெரியுமா?” என்று கோவை கே.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் உரையாற்றியிருக்கிறார் எழுத்தாளர் ஜோ டி குருஸ். அவர்களிடம் திரும்ப, “எழுத்தாளர்கள் ஆய்வாளர்களுக்குக் கொடுக்கும் கொடூரங்கள் எத்தனை?” எனக்கேட்கத் தோன்றுகிறது. நாவலின் பெயர் கூடத் தெரியாமல் ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்கிறார்கள் என்று அவர் பேசியது என்னைப் போன்ற ஆய்வாளர்களுக்கு மனவருத்தத்தை அளிக்கிறது. என்னுடைய முனைவர் பட்ட ஆய்வின் ஒரு பகுதியாக அவருடைய “ஆழி சூழ் உலகு” புதினத்தை ஆய்வு செய்தேன். எனது நெறியாளர் எழுத்தாளரின் நேர்காணல் பின்னிணைப்பில் இருந்தால் நன்றாக இருக்கும் எனக்கருதினார். நானும் ஜோ டி குருஸ் அவர்களை அலைபேசியில் தொடர்பு கொண்டு, அவரைச் சந்தித்து நேர்காணல் செய்ய பலமுறை வாய்ப்புக் கேட்டேன். அவர் அப்புறம் பேசுங்கள்.. அப்புறம் பேசுங்கள்.. எனச் சொல்லிவிட்டு, இரண்டு நாட்களுக்குப் பிறகு, என்னுடைய மின்னஞ்சலில் நேர்காணலுக்கான வினாக்களை அனுப்புங்கள் நான் பதில் எழுதி அனுப்புகிறேன் என்றார். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவருக்குரிய வேலைப்பளுவிலும் எழுதி அனுப்புகிறேன் என்கிறாரே என்று ஆதங்கப்பட்டேன். எழுத்தாளரை தொந்தரவு செய்கிறோமோ என மனம் வருந்தினேன். அவருடைய மின்னஞ்சலுக்கு வினாக்கள் அனுப்பிய பிறகு, அவரிடமிருந்து எந்தப் பதிலுமில்லை. அலைபேசியில் அழைத்தும் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. இரண்டு மாதங்கள் அவருடைய நேர்காணல் ஒன்றிற்கு மட்டும் ஆய்வேட்டைச் சமர்ப்பிக்காமல் காத்திருந்தேன். என்னுடைய நெறியாளரின் நெருக்குதல் காரணமாக ஆய்வேட்டைச் சமர்ப்பிக்க வேண்டியக் கட்டாயத்தில் அவருக்கு மீண்டும் மின்னஞ்சலில், “ஐயா மன்னிக்கவும் உங்களது வேலைப்பளுவில் தொந்தரவு செய்துவிட்டேன். சிற்றிதழ்களில் வெளிவந்த உங்களது நேர்காணலைப் பின்னிணைப்பில் இணைத்துக் கொள்கிறேன்” எனக்கூறி அவரிடமிருந்து ஒப்புதலை எதிர்பார்த்தேன். அதற்கும் பதில் வரவில்லை. அந்த நேர்காணலைப் பின்னிணைப்பில் இணைத்து, நன்றி எழுத்தாளர் ஜோ டி குருஸ் என எழுதியிருந்தேன். அவ்வாறு பின்னிணைப்பில் இணைத்த நேர்காணலைச் சொல்வதற்காகவும் அவரைத் தொடர்பு கொண்டேன். அதற்கும் எழுத்தாளரிடமிருந்து பதிலில்லை. இது எனது வாசிப்பிலிருந்து கிடைத்த ஆய்வாளருக்கான அறம். அதை நான் ஒரு போதும் மீற முயற்சிக்கவில்லை.
எழுத்தாளரின் செயலுக்குப் பிறகு “ஆழி சூழ் உலகு” நாவலை ஆய்வின் ஒரு பகுதியாக எடுத்ததற்கு மிக வருந்தினேன். அதன்பிறகு, யாருக்கும் எழுத்தாளர் படைப்புகளை ஆய்வு நிகழ்த்தப் பரிந்துரைக்கவில்லை. இந்த நிகழ்விற்குப் பின் ஓர் எழுத்தாளர் மீது ஆய்வாளருக்கு என்ன மனநிலை தோன்றும்?. குறிப்பாக, மேடையில் எழுத்தாளர் குருஸ், எழுத்தாளரின் உள்வலி தெரியுமா? என ஆய்வாளர்களைப் பேசியதாகத் தமிழ் இந்துவில் படித்த செய்தியைக்கேட்டு எனக்கு மனஉளைச்சலாக இருந்தது. இரவெல்லாம் தூக்கம் வரவில்லை. எழுத்தாளரின் செயல்பாட்டை இதுவரைக்கும் யாரிடமும் கூறியதில்லை. இப்போது மனம் திறக்கிறேன். இவ்வாறு வெளிப்படுத்தியது எழுத்தாளரின் மனதைக் காயப்படுத்துவதற்காக அல்ல. எழுத்தாளரை சுயபரிசோதனை செய்வதற்காக மட்டுமேயாகும்.
நாவலின் பெயர் தெரியாமல் ஆய்வு செய்ய முனையும் ஆய்வாளர்கள் குறித்துப் பொதுவான மேடைகளில் பேசுகின்ற எழுத்தாளர், அவரால் பாதிக்கப்பட்ட ஆய்வாளர்களின் கதையையும் சொல்ல வேண்டுமென்பதே எழுத்தாளரின் அறம்.
உங்களது பேச்சிற்குப் பிறகு, ஆய்வாளனாகச் சில கேள்விகளைக் கேட்கத் தோன்றுகிறது.
·         உங்களது படைப்பில் ஆய்வு எங்கு இருக்கிறது..?
·         மீனவர்களின் வாழ்வியலைப் புனைகதையாக்கியதால் மீனவச் சமூகத்தில் மாற்றம் நிகழ்ந்திருக்கிறதா..?
·         சமகாலத்தில் மீனவர்கள் புற்றுநோய்க்கு ஆளாகியிருப்பதை எழுதுவார்களா..?
·         தினந்தினமும் அன்றாட வாழ்வியல் தேவைகளுக்காக அல்லாடிக் கொண்டிருக்கும் செய்திகள் படைப்பில் வருமா..?
·         மீனவர்கள் தமிழகக் கடல் எல்லைக்குள் மீன் பிடித்தாலும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகச் சிங்கள இராணுப் படையினர் வலைகளை அறுத்தெறிந்தும் அவர்களைத் துன்புறுத்தியும் அனுப்பி வைக்கின்றனர்..? எழுத்தாளருக்கு விருது கொடுத்த அரசு மட்டும் கைகட்டி வேடிக்கை  பார்த்துக் கொண்டிருக்கும்? மீனவர்கள் பற்றிய புனைகதைகள் மட்டும் பெருகிக் கொண்டிருக்கின்றன..? வாழ்வியலில் எந்த மாற்றமும் இல்லை?
·         உங்களது படைப்புகளை மீனவர்கள் வாசித்திருப்பார்களா..?
·         மீனவர்களின் வாழ்க்கையைப் புனைகதையாக்கியதற்காகச் சாகித்ய அகாதெமி விருது, திருக்குறளை உலகெங்கும் பரப்பியதற்காக மத்திய அரசின் உயரிய விருது பெற்று மாற்றமடைந்திருக்கிறீர்கள்..? அவர்களது வாழ்க்கை..?
இன்னும்… பல கேள்விகள் அறம் சார்ந்த ஆய்வாளர்களிடம் ஒளிந்து கிடைக்கிறது எழுத்தாளர் அவர்களே. ஒரு படைப்பாளரைச் சமூகத்திற்கு அடையாளப்படுத்தும் பணியைச் செய்பவர்கள் வாசிப்பாளர் மட்டுமல்ல ஆய்வாளர்களும் திறனாய்வாளர்களும் தேர்ந்த விமர்சகர்களுமேயாவர்.
நீங்கள் நியாயமான ஆய்வாளர்ளையும் வாசிப்பாளர்களையும் விமர்சகர்களையும் நேரிடையாகச் சந்திக்கவில்லை என்று நினைக்கிறேன்.
எழுத்தாளரிடம் கூற விளைவது,
தமிழகத்தில் தமிழ் இலக்கியம் சார்ந்த சமகால ஆய்வுப்போக்கு குறித்த அரசியல் உங்களுத் தெரியவில்லை. இன்று தமிழகப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் வெறும் பேருக்கு நிகழ்ந்து கொண்டிருக்கிற தேசிய, பன்னாட்டுக் கருத்தரங்கங்களின் ஆய்வுக்கோவைகளைத் தயவுகூர்ந்து வாங்கிப் படியுங்கள் அதன் அர்த்தம் உங்களுக்குப் புரிந்துவிடும். கட்டுரைகள் என்ற பெயரில் வெட்டி ஒட்டிச் சேர்க்கின்ற வேலைகள் மட்டுமே நடந்து கொண்டிருக்கின்றன.
யு.ஜி.சி, செம்மொழி மத்திய நிறுவனங்களின் உதவித்தொகையுடன் நடைபெறுகின்ற கருத்தரங்குகள் நல்ல ஆய்வாளர்களை உருவாக்கியிருக்கிறதா? என்பதும் கேள்விக்குறிதான். இக்கருத்தரங்குகளில் கட்டுரை வாசிப்பவர்கள் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளருக்கு நண்பராகவோ, உறவினராகவோ இருப்பார். இங்கு ஆய்வு குறித்த வினாக்கள் கேட்க மாணவர்களுக்கு வாய்ப்பளிப்பதில்லை.
தற்போது புதிய வியாபார உத்தி ஒன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சில குறிப்பிட்ட பதிப்பகங்கள் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளை இணைத்துக்கொண்டு நடத்தும் கருத்தரங்குகள். மற்றொரு கேலிக்கூத்து.
தமிழகத்தில் தேர்ந்த வாசிப்பாளர்களும் ஆய்வாளர்களும் திறனாய்வாளர்களும் கட்டுரையாளர்களும் எழுத்தாளர்களும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பணி வாய்ப்புக் கேட்டுக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்களது பொருளாதாரப் பிரச்சனையால் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. தாங்கள் மேடையில் பேசிய அரைகுறை ஆய்வாளர்களே பணியமர்த்தப்படுகின்றனர். ஆக, சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளும் கருத்தரங்குகளில் அறச் சிந்தனைகள் தலைப்படட்டும்.
ஆய்வாளர்கள் யார்? அவர்களுக்கான வாழ்வியல் சிக்கல் என்ன? அவரது நெருக்கடி யாது? என்ன என்பதை அறியாமல் யாரோ ஓர் ஆய்வாளர் உங்களிடம் நாவலின் பெயர் தெரியாமல் பேசி விட்டார் எனப் பொத்தம் பொதுவாகக் கூறி ஒட்டுமொத்த ஆய்வாளர்களை இழிவுபடுத்துவது எந்தவிதத்தில் அறம்…?

பி.பாலசுப்பிரமணியன், தொடர்புக்கு: uyirneyan@gmail.com



No comments:

Post a Comment