Saturday, January 2, 2016

படைப்புகள்

பள்ளிப் பிராயம்
பி.பாலசுப்பிரமணியன்
வாழ்க்கை குறித்த நேசித்தலையும் தீராத காதலையும் கல்வி பயிலும் காலங்களே நமக்கு உணர்த்துகின்றன. குறிப்பாக, பள்ளியில் பயிலும் காலத்தை நினைவுபடுத்தலென்பது அசாத்தியமானதேயாகும். பள்ளியில்
துறுதுறுவென்று ஓடிக்கொண்டும் படித்துக் கொண்டும் விளையாடிக் கொண்டும் வெகுளித்தனமாக இருக்கும் மாணவனைப் பிடிக்காத ஆசிரியர்கள் இருப்பார்களா என்ன? அத்தகைய மாணவர்களால் மட்டுமே பள்ளியின் நினைவுகள் உயிர் வாழ்கின்றன. கருவேல மரங்கள் நிறைந்த சிவகங்கை மாவட்டம் பழையனூரில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்ற காலகட்டத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன். பழையனூர் வானம் பார்த்த பூமி. வையையில் தண்ணீர் வந்தால் மட்டுமே ஊரில் விவசாயம் நடக்கும். இல்லையென்றால் பருத்தியும் மிளகாய்த் தோட்டமும் மட்டுமே அம்மக்களின் வாழ்வாதாரம்.
வறுமைக்கு ஆட்பட்ட வீடுகளிலிருந்து பள்ளிக்கு வரும் மாணவர்கள் ஒரு சிலரே ஆவர். மதிய உணவிற்காகவே மட்டுமே பல மாணவர்கள் பள்ளிக்கு வருவார்கள்.  பள்ளி வாழ்க்கையில் எப்போதும் எனக்கு நினைவுக்கு வருபவர்கள் தமிழாசிரியர்களேயாவர். உயர்நிலைத் தமிழாசிரியர் ஐயா நெல்லைத் தமிழுக்குச் சொந்தக்காரர். மிக நீண்ட உயரமானவர். எப்போதும் கையில் பிரம்புடன் காலை 9 மணி முதல் 4.30 மணி வரை சுற்றிக்கொண்டேயிருப்பார். அவரது பெயர் நினைவில் இல்லை. அவரது தமிழுக்கு நாங்கள் அடிமை. பல நாட்கள் அவரைப் போல “என்னம்லே.. என்ன சொல்லுதியா..” என்று நெல்லைத் தமிழில் பேசிப் பார்த்திருக்கிறோம். தமிழில் நீதி நூல்களை மனப்பாடம் செய்யவும், அடிப்படைத் தமிழ் இலக்கணத்தைக் கற்றுக் கொடுத்தவரும் அவரே. மாணவர்களைக் கண்டித்தும் பாராட்டியும் அன்பு காட்டியும் வளர்த்தவர் அவரே.
முதுநிலைத் தமிழாசிரியர் கேசவன் ஐயா அவர்கள் மாணவனுக்கான பண்புகளைக் கற்றுக் கொடுத்தவர். யாரிடம் எப்படிப் பேச வேண்டும்? பழக வேண்டும் என்பதை அவரது செயல்பாட்டின் வழி அறிந்து கொண்டேன். அவருடைய ஆசிரிய அனுபவத்தில் இதுவரை மாணவர்களைத் திட்டியோ? அடித்தோ? கடிந்து பேசியோ? நான் பார்த்ததில்லை. இவரைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் எனக்கு தி.ஜானகிராமனின் “முள் முடி” என்ற சிறுகதை அலை பாயும். இன்று பள்ளிகளில் எடுத்ததெற்கெல்லாம் கோபமடையும் ஆசிரியர்களைப் பார்த்திருக்கிறேன். வகுப்பறைகள் வன்முறைகளை வளர்க்கும் இடங்களாகவும் மாறியிருக்கின்றன. குறிப்பாக, கேசவன் ஐயாவைப் பிடித்ததற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, பல நாட்கள் எங்களது பள்ளியில் மூடியிருந்த நூலகத்தைத் திறந்து விட்டு அதனைச் செயல்படச் செய்தது. அங்குதான், எங்களுக்கு அம்புலிமாமா என்ற இதழ் கிடைத்தது. அங்கிருந்துதான் புனைவுலகத்தை, வாசிப்பின் ருசியை அறிந்து கொண்டோம்.
எத்தனையோ  அரசுப்பள்ளிகளில் நூலகங்கள் இன்றும் செயல்படாமல் இருக்கின்றன. ஆசிரியர்களே வாசிக்கத் தயாராக இல்லாதபோது மாணவர்களை எப்படி வாசிக்க வைக்க முடியும். ஆப்ரகாம் லிங்கன் தனது மகனின் ஆசிரியருக்கு எழுதிய கடிதத்தில் “என் மகனுக்கு வாசிப்பின் ருசியைக் கற்றுக்கொடுங்கள்” என்றார். அந்த ஒற்றைச் செயலே  மாணவனுக்கு வகுப்பறைக்கு வெளியே இருக்கும் புறவுலகைக் கற்றுத்தரும் என்றார் லிங்கன். எவ்வளவு உன்னதமான வரி இது. எங்களது கேசவன் ஐயாவின் முகத்தை, இன்றும் நான் வாசிக்கும் ஒவ்வொரு புத்தகத்தின் பக்கத்திலும் காண்கிறேன். ஒருமுறை அவரிடம் தற்செயலாக உங்களது ஆசிரியப் பணிக்கு அரசாங்கம் எவ்வளவு ஊதியம் தருகிறது என்றேன். அப்போது, அவர் 25,000 ஆயிரம் ரூபாய்(ஒரு 15 வருடங்களுக்கு முன்பு) என்றார். இவ்வளவு பணமா? என வாய் பிளந்த போது, உடனே அவர் “தம்பி.. நான் வாங்குற பணத்துல மாதம் 5,000 ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கிப் படிக்கிறேன். அதனால்தான், வகுப்பறையில் ஒவ்வொரு நாளும் உங்களுக்குப் புதிய புதிய செய்திகளைச் சொல்கிறேன். வீட்டில் ஒரு நூலகம் வைத்திருக்கிறேன். வாசிப்பால் மட்டுந்தான் வகுப்பறையை சுவாரசியமாக வைத்திருக்கமுடியும். அரசாங்கம் ஆசிரியர்களுக்கு இவ்வளவு சம்பளம் கொடுப்பதற்குக் காரணம் கிடைக்கிற ஊதியத்துல ஒரு பகுதியை நூல்கள் வாங்கிப் படிக்கிறதுக்குத்தான். நீங்க எதாவது புதிய புத்தகம் படிக்க விரும்பினால் என்னுடைய நூலகத்தில் புத்தகம் எடுத்துப் படிக்கலாம் என்று வீட்டு நூலகம் பற்றிய புரிதலையும் கற்றுத் தந்த தந்தை அவரேயாவார்.
கேசவன் ஐயா பள்ளி முடிந்து மாலை வேளைகளிலும் பாடம் குறித்த எங்களது சந்தேகங்களுக்கு விளக்கமளிப்பார். அப்போது டியூசன் என்பதேயில்லை. இன்று பள்ளி ஆசிரியர்களே அவர்களது பிள்ளைகளையே வேறொரு டியூசனுக்குப் பாடம் படிக்க அனுப்பும் அவலநிலையும் நிலவுகிறது.
தமிழகத்தில் பள்ளிகளை விட இன்று டியூசன்தான் அதிகம் என்று நினைக்கிறேன். டியூசன் கலாச்சாரம் கடந்த 5 ஆண்டுகளில்தான் பல்கிப்பெருகிக் குட்டிப்போட்டிருக்கின்றன. நாங்க பள்ளியில் படிக்கிற காலத்துல இப்படி ஒரு விசயத்தைக் கேள்விப்பட்டது கூடக் கிடையாது. தனியார் பள்ளிகளில் இடம் கிடைக்க அடிச்சுக்கிறது மாதிரி இன்றைக்கு டியூசனுக்கு இடம் கிடைக்கப் போட்டியிடுகிற சூழலை நினைத்தால் மனதிற்கு வருத்தமளிக்கிறது. இன்னும் கொஞ்ச காலங்களில் தாய் கர்ப்பமானவுடனேயே பள்ளிக்கு விண்ணப்பிக்கும் நெருக்கடியை இந்தியக் கல்விச்சூழல் பெறும் என நம்புகிறேன். பிளே ஸ்கூல் தொடங்கி உயர்நிலை, மேல்நிலை, கல்லூரி, ஐ.டி, எம்என்சி கம்பெனி, கல்யாண மண்டபம், மருத்துவமனை, உணவு விடுதி, திரையரங்கம், சுடுகாடு என ஒரே சுற்றுச்சுவருக்குள்ளே(காம்பவுண்டுக்குள்) வாழ்க்கை முடிந்துவிடும் நிலை மிக அருகாமையில் உள்ளது. இவையெல்லாம் ஒரே பேமென்டில் நிறைவடையும் எனக் கணிக்கத் தோன்றுகிறது.
டியூசனுக்கு வேலையில்லாமல் பள்ளிகளிலேயே பாடத்தை முடித்துவிடும் ஆசிரியர்கள் ஒரு காலத்தில் இருந்தார்கள். இப்பொழுது பள்ளிகளில் பாடம் எடுக்காமல் டியூசனில் பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் அதிகரித்து விட்டார்கள்.
கேசவன் ஐயா எங்களுக்குக் கற்றுக் கொடுத்த மற்றொன்று ஆண் – பெண் பாலின உறவு குறித்தப் புரிதலேயாகும். ஆண், பெண்களைப் பிரித்து உட்கார வைக்காமல் கலந்து உட்கார வைத்துப் பள்ளியில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியவர். இதற்குப் பல எதிர்ப்புக் கிளம்பியது. அவரது துணிந்த செயல் எங்களை வியப்படையச் செய்தது. தமிழ்ச் சினிமாவில் அடையாளப்படுத்தப்படும் பள்ளி குறித்த பிம்பம் அடிமட்டமானது. குறிப்பாக, மாணவ, மாணவி குறித்த உறவு மிக கேவலமாகச் சித்தரிக்கப்படுவது அவமானகரமானதாகும். பசங்க, பள்ளிக்கூடம், சாட்டை போன்ற படங்கள் பாராட்டப்பட்ட அளவிற்கு அப்படங்களில் காட்டப்பட்டுள்ள மாணவ, மாணவி உறவு தவறான சிந்தனைகளையே ஏற்படுத்தியது எனலாம். களவாணி மாதிரியான திரைப்படங்கள் இளம் பள்ளி மாணவிகளை வேலை ஏதுமின்றிச் சுற்றியலையும் இளைஞனைக் காதலிக்கச் செய்து படிப்பை அதோடு நின்றுவிடுவதாகக் காட்டுவது இன்னும் கொடுமை. எத்தனை காலம்தான் இது போன்ற படங்களைப் பார்த்துத் தொலைய வேண்டியிருக்குமோ? தெரியவில்லை. நல்ல வேளை கேசவன் ஐயா இப்போது பணி நிறைவு பெற்றுவிட்டார். தமிழ்ச் சினிமாக்களைப் பார்க்கிறாரா? என்று தெரியவில்லை.
எங்களது ஐயா இன்னொரு நல்ல காரியத்தையும் செய்தார். பத்தாம், பன்னிரண்டாம் படிக்கும் மாணவிகளை எங்களது பகுதியில் கோவை, ஈரோடு, திருப்பூர் பகுதிக்கு மில் வேலைக்கு அனுப்புவார்கள். அப்பா குடிகாரராக இருந்தால் குடும்பத்தின் பொருளாதாரம் சீர்குலைந்து போகும். ஒரு வீட்டில் நான்கைந்து பெண் பிள்ளைகள் இருந்தால் எப்படிக் கரையேற்றுவது எனப் புலம்பி அவர்களை மில் வேலைக்கு அனுப்புவார்கள். அவர்களை வேலைக்குக் கூட்டிச் செல்லும் ஏஜெண்டுக்குக் கமிசன் வேறு. அந்தப் பிள்ளைகளை 3 வருடங்களுக்குக் குத்தகை எடுத்துக் கொள்வார்கள். பணி முடிந்தவுடன் மூன்று அல்லது நான்கு பவுனுக்குத் தங்கநகை கொடுப்பார்கள். இதற்கிடையில் அவர்கள் சொந்த ஊருக்கு எப்பையாவது ஒருமுறைதான் வரமுடியும். அதுவும் பண்டிகை நாட்கள் அல்லது வீட்டில் துக்க நாட்கள் மட்டும்தான் அனுமதி. பணி திரும்பி வரும் பெண்கள் சிலர் மனநோய்க்கு ஆட்பட்டு வாழ்க்கையைத் தொலைத்தவர்களுமுண்டு. ஆக, எங்களது தமிழ் ஐயா அதற்கு எதிராகக் குரல் கொடுத்தவர். பல பெண்களை மில்லிலிருந்து மீட்டு வந்து அவரது சொந்தச் செலவில் படிக்க வைத்தவர். இன்றும் அவர் எங்களுக்கு ஆதர்சம்.
ஆங்கில இலக்கியம் மீது பேராசையைத் தூண்டியவர் எங்களது ஆங்கில ஆசிரியர் பாப்புலால் ஆவார். பாடத்தின் தன்மை ஆசிரியரைப் பொறுத்தது என்பதை அப்போதுதான் அறிந்துகொண்டேன். ஆசிரியர் பிடித்தால் பாடம் பிடிக்கும் என்பதுதான் கல்வி உளவியல். ஆசிரியர் பிடித்துப் போனால் கடினமான பாடம் கூட எளிமையாகத் தெரியும். பிடிக்கவில்லையென்றால் எளிமையான பாடம் கூட மிகக் கடினமாகிவிடும் என்பதைக் கற்றுக் கொடுத்தவர் ஆங்கில ஆசிரியர் பாப்புலால்தான். அவர் நடத்தும் ஆங்கிலக் கவிதையை நாங்கள் ஒரு திரைப்படம் போல் தான் பார்ப்போம். கவிதையை நடத்தும்போது படைப்பாளியின் கற்பனையை உணர வைத்து அதற்கொரு உருவம் கொடுப்பார். எனது சொந்த ஊருக்குப் போகும்போதெல்லாம் பால்யகாலப் பள்ளி நண்பர்களிடம் இப்போதும் இவர் பாடம் நடத்தும் முறையைச் சொல்லிச் சிலாகித்துப் பேசுவோம். இவரால் கல்லூரியில் ஆங்கிலம் படிக்கவும் விண்ணப்பம் செய்திருந்தேன்.
முதுகலையில் வேதியியல் ஆசிரியர் இராவணன் மறக்கமுடியாத நல்ல மனிதர். இதுவரை நாங்கள், அவர் புத்தகம் எடுத்துப் பார்த்ததில்லை. வரும்போதே கையில் சாக்பீசுடன் வருவார். வேதியியலை இலக்கிய வகுப்பு போல் நடத்துவார். மணி ஒலிக்கும் சென்று விடுவார். அறிவியலை இவரிடம்தான் கற்க வேண்டும் என்றெல்லாம் பேசியிருக்கிறோம். இவர்மேல் இருந்த மரியாதையால் வேதியியல்தான் எடுத்துப் படிப்பேன் என்று என் அப்பாவிடம் சண்டையிட்டிருக்கிறேன். ஆனால், காலம் என்னைக் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயிலும் ஆசிரியனாக்கியிருக்கிறது.
பள்ளியில் படிக்கிற காலத்தில்தான் ஆசியர்கள் மாணவர்களுக்கு ஒரு நல்ல பெற்றோராகவும் அண்ணனாகவும் தோழராகவும் தெரிகிறார்கள். “ஆசிரியர்களைப் பார்த்தால் மாணவர்களுக்குப் பயம் வரக்கூடாது, மரியாதை வர வேண்டும்” என்று எங்களது ஐயா அடிக்கடி சொல்வார். அதைத்தான் இன்றும் என் மாணவர்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கின்றேன்.
அங்கன்வாடி தொடங்கி இன்று நான் ஆசிரியனாக பணிக்குச் சேர்ந்தது வரை எத்தனையோ ஆசிரியர்களைச் சந்தித்திருக்கின்றேன். அவர்களிடம் பாடம் பயின்றிருக்கின்றேன். சில ஆசிரியர்கள் போல் இருக்க வேண்டும். சில ஆசிரியர்கள் போல் இருக்கக் கூடாது என்று கருதியிருக்கின்றேன். ஆக, ஒவ்வொரு ஆசிரியர்களும் நமக்குப் பாடம். சில நேரங்களில் ஆசிரியர்கள் மாணவர்களாகவும் மாணவர்கள் ஆசிரியர்களாகவும் இருக்கிறார்கள். கல்வி புதிது புதிதாகக் கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கும்தானே…! அதனால்தான், நான், என்னுடைய ஆசிரியர்களிடமிருந்தும் மாணவர்களிடமிருந்தும்… நல்ல நூல்களிடமிருந்தும்.. வாழ்க்கை தரும் உன்னதமான அனுபவங்களிடமிருந்தும்…. இன்றும் கற்றுக் கொண்டிருக்கின்றேன்.


No comments:

Post a Comment