Monday, July 12, 2010

புரிசை கண்ணப்பத் தம்பிரான் தெருக்கூத்துப் பள்ளி

புரிசை கண்ணப்பத் தம்பிரான் தெருக்கூத்துப் பள்ளி
தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இசைநாடகக்கலை சிறப்பான கலையாக அந்தப்பகுதிகளில் வாழுகின்ற மக்களால் கருதப்பட்டு வருவதைப்போல வடஆர்க்காடு மாவட்டங்களில் தெருக்கூத்து மிக உன்னதமான பாரம்பரியக் கலையாக அப்பகுதிமக்களால் போற்றப்பட்டு வருகிறது.
தெருக்கூத்து திரௌபதியம்மன் கோயிலுடன் தொடர்புடைய கலையாக இருந்து வருகிறது. குறிப்பாக, புரிசை கிராமம் தெருக்கூத்துக் கலையையும், கலைஞர்களையும் வாழவைத்துக் கொண்டிருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் ஒரு தெருக்கூத்துக் கலைஞனாக வாழ்வது என்பது சாதாரண காரியமல்ல. வெகுசன ஊடகத்தின் அதீத வளர்ச்சியால் இது போன்ற எண்ணற்ற மரபுக்கலைகள் அழிந்துவிடக்கூடும் என்கிறார்ள் அறிவுஜீவிகள். ஆனால் தெருக்கூத்து சடங்குகளோடு கூடிய கலை என்றாலும், தற்கால வாழ்க்கை நெருக்கடிகளுக்கேற்ப தன்னுடைய உள்ளடக்கக் கருத்துக்களை மாற்றிக் கொள்கிறது நமது தமிழ் இலக்கியத்தைப் போல. இளைய தலைமுறைகள் தங்களது ரசனையை மாற்றிக்கொண்டால் நிச்சயமாகத் தமிழகத்தின் பாரம்பரிய மரபுக் கலைகள் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும்.
அத்தகைய பெருமை பொருந்திய தெருக்கூத்துக் கலையைக் கற்றுக்கொள்ளும் ஆர்வத்துடன் மூன்று மாதங்கள் பயிற்சி பெற்றேன். நமது பாரம்பரியக் கலைகளை நாம் கற்றுக்கொள்ளாமல் வேறு யார் கற்றுக்கொள்ள முன் வருவார்கள். நான் இக்கலையைக் கற்றுக்கொள்வதற்குக் காரணம் என்னுடைய மாணவர்கள் ஆர்வத்தோடு தெருக்கூத்துக் கலையைப் பயில ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காகவேயாகும்.
புரிசை கண்ணப்பத் தம்பிரான் அவர்களின் மகன் கண்ணப்ப சம்பந்தன் எங்களுக்குப் பயிற்சியளித்து “அனுமன் தூது” என்ற தெருக்கூத்தை அரங்கேற்றம் செய்தார். ஏப்ரல் 17-ந் தேதி சனிக்கிழமை இரவு 9-மணியளவில் “அனுமன் தூது” என்ற தெருக்கூத்து அரங்கேற்றம் செய்யப்பட்டது. இக்கூத்தில் நான் ‘அங்கதன்’ வேடமிட்டு நடித்தேன்.
இப்புகழ் பெற்ற புரிசை மண்ணில் தெருக்கூத்துப் பயின்று நடித்ததை எண்ணிப் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
வாழ்க கலை! வாழட்டும் கலைஞன்!

எனக்குப் பிடித்த கவிதை

வாசிப்பு........

நானொன்றும் நாதசுரம் வாசிக்கவோ
புல்லாங்குழல் வாசிக்கவோ பிரியப்படவில்லை
நூல்வாசிக்கும் ஆசைமட்டும் நாள்தோறும் வளர்கிறது.
கதை கட்டுரை எதுவாயிருப்பினும் மகிழ்ச்சி
சற்றும் முன்தின்ற பசும்புல்லை
ஆசுவாசமாய் அசைபோடும் பசுவைப்போல்
படித்ததை நினைக்க நினைக்க
ஆனந்தம் பிறக்கிறது
நூல் ஒரு விநோதம், படைத்தவன் படைத்ததைச் சொல்லும்
சொல்லாததையும் சொல்லும்
வாசிப்பு
புறத்தில் மறப்பு அகத்தில் விழிப்பு
வாசிப்பு
தனிமைத்தவம் தாய்மடி வானமழை, ஆழ்கடல்,
ஊன்றுகோல், ஞானதீபம், தேவகானம்,
தலைதொட்டு ஆசீர்வதிக்கும் தும்பிக்கை
வாசலுக்கு வெளியே விரியும் நீலவானம்
என் விருப்பத்திற்குரிய வேப்பமரம்
ஒருகையில் தேநீர், இன்னொரு கையில் புத்தகம்
இதைவிடவா ஒரு வாழ்க்கை.
- பொன்மணி வைரமுத்து.