Monday, August 30, 2010

திணை மயக்கம் - மீள்பார்வை

திணை மயக்கம் - மீள்பார்வை

தொல்காப்பிய பொருளதிகாரம் தமிழ் இலக்கியக் கொள்கைகளையும் அதன் பிற சிறப்புக்கூறுகளையும் ஆராய்ந்து அறிவதற்கு ஒரு சிறந்த இலக்கண நூலாகத் திகழ்கிறது. உலகில் உள்ள எல்லா மொழிகளிலும் அம்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள மக்களின் நாகரிகத்தைக் காட்டும் பொருள் இலக்கணம் இல்லை. அந்த பொருள் இலக்கணத்தைக் கொண்டிருப்பது தமிழ்மொழியின் தனிச்சிறப்பாகும். பொருளதிகாரத்தின் ஒன்பது இயல்களுள் முதலாவதாகப் பகுக்கப்பட்ட அகத்திணையியலில் நூற்பாக்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ள திணைமயக்கம் பற்றி ஆராயும் நோக்கில் இக்கட்டுரை அமைகிறது.

திணையும் - பொருளும்
திணை என்பதனை இளம்பூரணர் பொருள் மற்றும் இடம் என அர்த்தப்படுத்துகிறார். நச்சினார்க்கினியர் திணை என்பதை ஒழுக்கம் என்கிறார். மேலும், தமிழ்ச்சான்றோர்கள் திணையினை அகத்திணை,புறத்திணை என்று இருவகையாகப் பிரித்துக் காட்டுவர். அகப்பொருள் பற்றிய இலக்கணத்தை வரையறுத்துக் கூறும் தொல்காப்பியர்.
“ கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்
முற்படக் கிளந்த எழுதிணை என்ப”
(தொல்.அகத்.நூ.947)
என்கிறார். கைக்கிளை, நடுவண் ஐந்திணை, பெருந்திணை என்பனவற்றுள் நடுவண் ஐந்திணையை மட்டும் மூன்று பொருள்களாகப் பிரித்துக்காட்டுவர். தொல்காப்பியர் உலகிலுள்ள பொருள்களை முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்று வகைப்படுத்தி,
“ முதல்கரு உரிப்பொருள் என்ற மூன்றே
நுவலுங்காலை முறை சிறந்தனவே
பாடலுட் பயின்றவை நாடுங்காலை”
(தொல்.அகத்.நூ.949)
என இலக்கணப்படுத்துகிறார்.

திணைமயக்கம்
திணைமயக்கம் என்பது ஒரு திணைக்குரிய முதல், கரு, உரிப்பொருள் மூன்றும் தமக்குரிய திணையில் மட்டும் வருவதல்லாமல் பிற திணையிலும் மயங்கி வருவதாகும்.
தொல்காப்பியர் பொருளதிகார அகத்திணையியலில் திணைமயக்கம் பற்றி,
“திணைமயக் குறுதலுங் கடிநிலை இலவே
நிலன் மயங்குதல் இல்லென மொழிப
புலனன் குணர்ந்த புலமையோரே”
(தொல்.அகத்.நூ.958)
“எந்நிலம் மருங்கிற் பூவும் புள்ளும்
அந்நிலம் பொழுதொடு வாராயினும்
வந்த நிலத்தின் பயத்தவாகும்”
(தொல்.அகத்.நூ.965)
“உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே”
(தொல்.அகத்.நூ.959)
என்னும் மூன்று சூத்திரங்களின் வழி குறிப்பிடுகிறார். திணைமயக்கம் பற்றி உரையாசிரியர்களுக்குள்ளும் (பிற சான்றோர்களிடமும்) கருத்து வேறுபாடுகள் நிகழ்ந்திருக்கின்றன.

இளம்பூரணர்

திணைமயக்கம் பற்றி இளம்பூரணர், ஒரு திணைக்குரிய முதற்பொருள், மற்றொரு திணைக்குரிய முதற்பொருளுடன் மயங்கிவரும் என்றும் ஆனால் நிலம் வேறொருதிணையில் மயங்காது என்றும் முதற்பொருளில் காலம் மயங்கும் என்றும் குறிப்பிடுவார்.
உரிப்பொருள் தவிர்த்து முதற்பொருளும் கருப்பொருளும் பிற திணைகளோடு மயங்கிவரும் என்பார். விதிவிலக்காகப் பெரும்பான்மை மயங்காமையும் வரும் எனச் சுட்டுவார்.
முதற்பொருளில் காலம் மயங்கும் எனவும் கருப்பொருளில் பூவும் புள்ளுமாகிய பறவையும் பிற திணையில் மயங்கியும் மயங்காமையும் வரும் என்றும் இவ்வாறு கருப்பொருள் மயங்கிவருவது திணைமயக்கம் அன்று என்று ஆனால், உரிப்பொருள் மயங்கி வருதல் இல்லை. உரிப்பொருள் மயங்கிவருதல் கலி முதலாகிய சான்றோர் செய்யுள்களில் கண்டுகொள்க என இளம்பூரணர் குறிப்பிடுவது சற்று முரணாக உள்ளது.
“ ஒண்செங் கழுநீர் கண்போல் ஆயிதழ்
ஊ போகிய சூழ்செய் மாலையன்
பக்கம் சேர்த்திய செச்சைக் கண்ணியன்
குயமண் டாகம் செஞ்சாந்து நீவி”
(அகநானூறு.பாடல்.48)
என்ற பாடலில் மருதநிலத்திற்குக் கருப்பொருளாகிய கழுநீரும், குறிஞ்சிக்குரிய வெட்சிப்பூவை அணிந்த தலைவன் என்று பதிவு செய்யப்பட்டுள்ளதால் கருப்பொருள் மயங்கிவந்துள்ளதை அறியலாம்.

நச்சினார்க்கினியர்

ஒரு நிலத்தின்கண் இரண்டு உரிப்பொருள் மயங்கிவரும் என்றும் நிலம் இரண்டு மயங்காது காலம் இரண்டும் மயங்கிவரும் என்று குறிப்பிடுவார்.
‘திணை மயக்குறுதல் கடிநிலை இலவே’ என்பதில் திணை என்பது மூன்று பொருளையும் குறித்தே வரும் என்பதால் முதல், கரு, உரிப்பொருள் பிற நிலத்திலும் மயங்கி வரும் என்பார்.
எழுதிணை நிகழ்ச்சியாகிய நால்வகை நிலத்தும் பயின்று வந்த பூவும், பறவையும் தத்தமக்கு உரியனவாகக் கூறிய நிலத்தொடும் காலத்தொடும் நடவாமற் பிற நிலத்தொடுங் காலத்தொடும் நடப்பினும் அவை வந்தநிலத்திற்குக் கருப்பொருளாம்.வினைசெய் இடத்தின் நிலத்தின் என்பதனால் நிலத்தின் பயத்தவாமெனப் பொழுதினையும் நிலமென்றே கூறுகிறார்.
உரிப்பொருள் அல்லன என்பதை உரிப்பொருள் என்று சொல்லப்பெறும் ஐந்திணையும், உரிப்பொருள் அல்லாத கைக்கிளையும் பெருந்திணையும் நான்கு நிலத்தும் மயங்கிவரும் என்றும் இந்நிலத்தின் இவ்வொழுக்கம் என வரையறுப்பது நாடகவழக்கின் பாற்படும் என்பார். மேலும், உரிப்பொருளாக மாறிவந்த பாலையும் நால்வகை நிலத்தின் கண்ணும் மயங்கிவரும் என்றும் கூறுவார். இன்றும் பிற சான்றோர் செய்யுள்களுள் உரிப்பொருள் மயங்கியும் காலம் மயங்கியும் வரும் என்பார். நச்சினார்க்கினியர் உரை வகுக்கிறபோது சூத்திரத்திற்குப் பொருத்தமான சங்கப்பாடல்களையே உதாரணப்படுத்துகிறார்.
“ மாமேலே னென்று மடல்புணையா நீந்துவேன்
தேமொழி மாத ருறாஅ துறீஇய
காமக் கடலகப் பட்டு”
(கலித்தொகை.செய்.136)
என்ற நெய்தல் நிலப்பாடலில் பெருந்திணைக்குரிய மடலேறுதல் என்ற ஒழுக்கமுறைமை பயின்று வந்துள்ளதை அறியலாம்.

நம்பியகப்பொருள்

தொல்காப்பியப் பொருளதிகாரத்தை மூலநூலாகக் கொண்டு பிற்காலத்து எழுந்த இலக்கண நூல்கள் சிலவற்றுள் நம்பியகப்பொருள் ஒன்று. நம்பியகப்பொருள் இயற்கைப்புணர்ச்சியில் தொடங்கி திணைமயக்கத்தில் முடிவடைகிறது. இவ்விலக்கண நூல்,
“முத்திறப் பொருளும் தத்தம் திணையொடு
மரபின் வாராது மயங்கலும் உரிய”
(நம்பியகப்பொருள்.பொது.நூ.251)
என முதல்,கரு,உரிப்பொருள் மூன்றும் தன்நிலத்தில் திணையோடு கூடிய இலக்கண முறைப்படி வாராமல் பிறதிணையோடு மயங்கியும் வரும் என்று திணைமயக்கம் பற்றிக் குறிப்பிடுகிறது.
“அஃது என்னையெனின் பெரும்பொருளகத்து உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே என்பதனாலும் உரிப்பொருள் சூத்திரத்துள் தேருங்காலை என்று குறிப்பிடுவதால் உரிப்பொருளும் மயங்கும்” என நம்பியகப்பொருள் குறிப்பிடுகிறது.
இந்நூலில் திணைமயக்கம் பற்றிய நூற்பாவிற்குச் சான்றாக உரிப்பொருள் மயங்கி வந்த பாடல்கள் நிறைய தரப்படுகின்றன.

திணைமயக்கம் பற்றிய பிற கருத்துகள்

உரிப்பொருள் என்பது ஐந்து திணைகளுக்கும் உரிமையான பொருள் ஆகும். முதற்பொருளைக் காட்டிலும் கருப்பொருள் சிறந்தது. கருப்பொருளைக் காட்டிலும் உரிப்பொருள் சிறந்ததென்பதை,
“முதல்கரு உரிப்பொருள் என்ற மூன்றே
நுவலுங்காலை முறைசிறந் தனவே
பாடலுட் பயின்றவை நாடுங்காலை”
(தொல்.அகத்.நூ.949)
என்ற அகத்திணையியல் நூற்பா தௌ்ளத் தெளிவாகப் புலப்படுத்துகிறது.
“அன்றில் ஒரு தரம் கத்தும்பொழுது பொறாள் என் ஒரு வல்லியே” என்ற வரிகளின் மூலமாகப் பறவைகளுக்கும் உரிப்பொருள் உண்டு என உணரமுடிகிறது. பெண் அன்றில் ஒருமுறை கத்தியும் ஆண் அன்றில் வரவில்லை என்றால் இறந்துபடும் எனப் பாலைத்திணையின் பிரிதல் ஒழுக்கத்தினைச் சுட்டுவதால் உரிப்பொருளின் முக்கியத்துவத்தை உணரமுடிகிறது. ஆகவே, உரிப்பொருளைக் கொண்டே அத்திணையினை நன்றாகப் புரிந்து கொள்ளமுடியும் என்ற கருத்து நிலவுகிறது.
“முதலொடு புணர்ந்த யாழோர் மேன
தவலருஞ் சிறப்பின் ஐந்நிலம் பெறுமே”
(தொல்.கள.நூ.1052)
என்ற களவியல் நூற்பாவிற்கு உரைவகுத்த உரையாசிரியர்கள் பெருத்த வேறுபாடுகளுடன் உரை எழுதியுள்ளனர். இந்நூற்பாவிற்கான நேருரை, நிலமும் பொழுதுமாகிய முதற்பொருளோடு பொருந்திய களவு மணம், கெடுதல் இல்லாத சிறப்புடைய ஐந்து நிலங்களிலும் பயின்று வரும் என்பதாகும். எனவே,யாழோர் மேன,குறிஞ்சி,களவுமணம் என்பது ஒரு பொருளைத் தந்து நிற்கும்.
குறிஞ்சிக்குரிய புணர்தல் மற்ற நான்கு நிலங்களிலும் நிகழும். இளம்பூரணர் அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கில் ‘காமக்கூட்டம்’ என்றதனால் எல்லா நிலத்தும் காமக்கூட்டம் நிகழப்பெறும் எனத் தெளிவாகப் பதிவு செய்கிறார்.
திணைமயக்கத்தில் முதற்பொருளாகிய நிலம் மட்டும் மயங்காது மற்ற பொழுது, கரு, உரி ஆகிய மூன்றும் எந்த நிலத்துக்கும் மயங்கும் ‘நிலனொருங்கு மயங்குதல் இன்றென மொழிப’ என்ற நூற்பாவில் ‘மொழிப’ எனப் பிறர் மேல் வைத்துச் சொன்னதன் காரணமாக நிலங்கள் மயங்குவது உண்டு என்பது தொல்காப்பிய கருத்துமாகும்.
“நாடா கொன்றோ காடா கொன்றோ
ஆவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர; ஆடவர்;
அவ்வழி நல்லை வாழிய நிலனே”
(புறநானூறு.பாடல்.187 )
என்ற புறநானூற்றுப் பாடல் நாடும், காடும், குழியும், மேடும் ஆக நடந்து நடந்து சென்று அந்நிலம் மயங்கி மாற்றமடைந்த தன்மையை ஔவையார் தனது பயண அனுபவத்தின் வழி கவிதையாக வெளிப்படுத்துகிறார். ஆகவே, உரிப்பொருள் முழுவதுமாக மயங்கும், கருப்பொருள் பெரும்பான்மையும் நிலம் சிறுபான்மையும் மயங்கும் என அறிந்து கொள்ள முடிகிறது.
“இலக்கியத்தில் தலையாய கவிதை தோன்றும் பொழுது சிலநேரங்களில் இலக்கணக் கட்டுபாடுகளை மீறியும் கவிதைகள் வெளிவரலாயிற்று. இதனை, நன்கு தெரிந்த தமிழர், தன் மரபை மாற்றிக்கொள்ளத் துணிந்து, அங்ஙனமே மாற்றிக்கொண்டான். மரபு என்பதே சான்றோர் செய்த ஒன்றுதானோ அவர்களாகப் பார்த்து அதைமாற்றினால் அதனால் நேரும் இழுக்கு ஒன்றும் இல்லையன்றோ”
“கவிதை ஆக்கும் கலைஞனை விடச் சிறந்தோர் யார் இருக்க இயலும் கவிதையை ஆக்கவும் அழிக்கவும்? எனவே, நாளாவட்டத்தில் ஒரு திணைப்பொருளை மற்றொரு திணையில் கூறும் இயல்பு தோன்றியவுடன் ‘திணை மயக்கம்’ என்ற ஒன்றை மனிதன் வகுத்தான் எனவும் இம்முறையில் இலக்கணமும் ‘உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே’ என்று வரையறை செய்தது” என அ.ச.ஞானசம்பந்தன் குறிப்பிடுவார். ஐந்திணை ஒழுக்கம் சிறப்புரிமை பெற்ற நிலத்தில் நிகழ்வதே சிறப்பு. இதனையே, இளம்பூரணரும் எல்லா நிலத்தும் எல்லா ஒழுக்கமும் நிகழுமாயினும் இந்நிலத்து இவ்வொழுக்கமே நிகழும் எனக்கூறுவது சிறப்பு என்கிறார்.
மூன்று பொருள்களும் பிறநிலத்து மயங்கி வருதலும் உண்டு இதனால் குற்றமில்லை. புலனெறி வழக்கின்படி ஒழுக்கம் சிறப்பு நிலையில் இருந்து பொதுநிலைக்கு வருதல் சிறப்பு கருதியே ஆகும். எனவே, நிலம் நிலையானது. பொழுது பொதுவானது. ஒழுக்கம் இயங்கும் தன்மையுடையது. கருப்பொருளும் நிலம் பொழுதுக்கேற்ப இயைந்து வருவதும் சிறப்பாகும் என்று காப்பியர் நெறி என்னும் நூல் விளக்கும்.


நிறைவுரை

திணைபற்றியும் திணைமயக்கம் பற்றியும் உரையாசிரியர்கள் பலர் கருத்து வேறுபாடுடன் உரை எழுதியுள்ளனர். தொல்காப்பியர் சூத்திரம் மட்டுமே எழுதி வைத்தாரொழிய உரை எழுதவில்லை. தொல்காப்பியர் வாழ்ந்த காலகட்டத்தில் உரைகள் தேவையில்லாமல் இருந்திருக்கலாம். ஒரு தலைமுறை மாற்றம் ஏற்படுகிறபோது இலக்கிய வடிவங்களும் கருத்தியலும் சிந்தனையும் மாறுவதுபோல் உரை எழுதும் வழக்கமும் பிற்காலத்தில் ஏற்பட்டிருக்கலாம். பிற்காலத்துத் தோன்றிய உரையாசிரியர்கள் தங்கள் காலத்து வழக்குகளை மையமாகக் கொண்டு உரை வகுத்திருக்கின்றனர்.
ஒரு நிலத்தில் உள்ள சிறப்புப்பொருளாகிய உரிப்பொருள் மயங்குவது மரபாகாது என்று இளம்பூரணரும் சிறுபான்மை மயங்குவதால் குற்றமில்லை என நச்சினார்க்கினியரும் குறிப்பிடுவர். இளம்பூரணர், நச்சினார்க்கினியர் மட்டுமல்லாது பிற உரையாசிரியர்கள் திணைமயக்கம் பற்றி வெளிப்படுத்தியக் கருத்துக்களை ஆய்விற்கு உட்படுத்த வேண்டும்.
தொல்காப்பியர் ‘இலக்கியம் கண்டதற்கு இலக்கணம்’ எனக் குறிப்பிடுகிறார். இக்கருத்தியல் அவர் காலத்தில் நிலவிய இலக்கியங்களுக்கா? அல்லது பிற்காலத்துத் தோன்றிய இலக்கியங்களுக்கா? என்ற கேள்வி எழுகிறது. ஏனென்றால் பெரும்பான்மையான சங்கப்பாடல்களில் முதல், கரு, உரிப்பொருள்கள் பிறநிலத்து மயங்கிவந்து இலக்கணப் பிறழ்ச்சியுடன் காணப்படுகின்றன. தொல்காப்பிய இலக்கண, இலக்கியக் கொள்கைகளைச் சங்கப்பாடல்களுடன் ஒப்பிடும்போது சில பாடல்கள் பொருந்தியும், பொருந்தாமையும் அமைந்திருக்கின்றன. இவ்வாறு, இலக்கண, இலக்கியக் கொள்கைகளுக்குக் கட்டுக்கடங்காத பாடல்கள் ஆய்வுக்குரியதாக இருக்கின்றன.
தொல்காப்பியத்திற்குப் பிறகு தோன்றிய பிற்காலத்து இலக்கண நூல்கள் திணைமயக்கம் என்ற இலக்கணப் பிறழ்வினைப் பெருவாரியான நூற்பாக்களில் பதிவு செய்யவில்லை. ஆகவே, திணைமயக்கம் என்ற கருத்தியல் விவாதத்திற்கும் ஆய்வுக்குரியதுமாகும்.

Wednesday, August 11, 2010

அம்மாவின் சேலை

அம்மாவின் சேலை

அப்பா உன்னை அடித்த

முதல்நாளில்
பயந்து போகும்படியான
இருளில் கூட
யார் யாரையோ திட்டிக்கொண்டு
நடந்திருக்கிறாய்..
அந்த ஒற்றையடிப் பாதையில்
உன் அம்மா வீட்டைநோக்கி
அப்பாவின் பெயர்
சொல்லவே கூச்சப்படுகின்ற
உன்னிடம்
வெறுத்துப் பேசிய நாட்களை விட
அன்பாகப் பேசிய
குறைந்த நாட்களை எண்ணி
புரித்துப் போயிருக்கிறாய்…
அப்பாவிற்காக
உறவுகளைக் கூட
பகையாக்கியிருக்கிறாய்…
உறைந்து போய்விட்ட
உன் கண்ணீர்த் துளிகளை
அடுப்படியும்
தொலைக்காட்சிப் பெட்டியும் மட்டுமே
அடிக்கடி ஞாபகப்படுத்துகிறது…
பிள்ளைகளின் கேள்விகளுக்கு
எப்போதாவது மட்டுமே
பதிலளித்திருக்கிறாய்…
மௌனம் கலைக்காமல்
உயிரற்ற உடலாக
உன்னால் மட்டுமே எப்படி
வாழ்ந்து கொண்டிருக்க முடிகிறது…
வீடு முழுவதும்
யாரும் கேட்கப்படாமலேயே
உன்னுடைய உரையாடல்கள்
இலக்கியமாகப்
பதிவு செய்யப்பட்டிருக்கிறது…
உடைபடாத ஆமையின்
கூட்டைப் போலவே
உனது வலிகளும்
ஆறாத ரணங்களும்
ஆனால்
இன்னும் யாரும்
தொட முடியாத தூரத்தில்
வைத்திருக்கிறாய்
அப்பாவையும்
அவர் முதன்முதல்
கொடுத்த புடவையையும்….

யாராவது நனைவார்களென.......

யாராவது நனைவார்களென....

மழை பெய்துகொண்டிருக்கிறது
யாராவது நனைவார்களென…
பறவைகள் கூட
கூடு விட்டு வெளிவந்து
சில்லிடும் குளிரில்
சிறகு விரித்து நனைகின்றன..
மர இலைகளில் விழும்
நீர்த்துளியின் சப்தம்
ஆழ்ந்த மௌன மொழியைக்
கற்றுத்தருகிறது…
சன்னல் கம்பிகளுக்கிடையே
பார்க்கப்படுகின்ற
மழைநீர் காகிதக்கப்பல்களைத்
தாங்காமலேயே பயணம் செய்கிறது
பார்த்துக் கொண்டிருக்கும்போதே
திடுமென நின்றுவிட்டது
நான் நேசித்த மழை
தானே பேசிக்கொண்டிருந்தால்
மழைதான் என் செய்யும்
காத்துக்கொண்டிருக்கிறேன்..
என்றாவது ஒருநாள் மழை பெய்யும்
யாராவது நனைவார்களென….

Sunday, August 8, 2010

நேசித்தல்

நேசித்தல்…

நிசப்தமாகச் சென்று வருகிறேன்
உனக்காக நான் சேகரித்த நினைவுகளை
இங்கேயே விட்டுச் செல்ல
விருப்பமில்லை…
கைகளில் சுமைகள்
இயல்பாகவே வந்துவிடுகின்றன
பயணம் பற்றிய
நேரக் குறிப்புகள்
உடல் முழுவதும பரவிக்கிடக்கின்றது
காரணமில்லாமல் நிண்டபேச்சு
பெருத்த வலிகளோடு நிறைவடைகிறது…
எனக்கான வழிநெடுகிலும்
எத்தனை மனிதர;கள் பறவைகள்
நிலங்கள் மொழிகள்
ஆரவாரமுடைய வெளிகளில்
நிசப்தாமாகச் சென்றுவருகிறேன்
யாரிடமாவது
சொல்லிக்கொண்டிருக்க வேண்டும்
திவிர நேசித்தலுக்கான களம்
மனம்தான் என்று…..

தமிழ் இணையம் கருத்தரங்கம்

தமிழ் இணையம் வளர்ச்சியும் வாய்ப்பும்

திருப்பத்தூர் தூயநெஞ்சக் கல்லூரி தமிழ் முதுகலைத் துறையில் ஒவ்வொரு மாதமும் களம் ஆய்வுக் கூட்டம் நடைபெறும். இந்த மாதம் 11.08.2010 ஆம் நாளன்று (புதன் கிழமை) பிற்பகல் 2.00 மணி முதல் 4.00 மணி வரை களம் கூட்டம் நடைபெற இருக்கிறது. “தமிழ் இணையம் வளர்ச்சியும் வாய்ப்பும்” என்ற தலைப்பில் செம்மொழி இளம் அறிஞர் முனைவர்.மு.இளங்கோவன் சிறப்புரையாற்ற இருக்கிறார். நான் அப்பெருமகனாரை அறிமுகம் செய்ய இருக்கிறேன். இக்கருத்தரங்கில் கலந்துகொள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
தமிழ் ஓலைச்சுவடிகளில் மட்டுமல்லாது கணிப்பொறியிலும் ஏறியிருக்கிறது. மெல்லத் தமிழ் இனிச் சாகும் என்று இந்த பேதை உரைத்தான் என்று பாரதி கோபக்கனலை எழுப்புவான். ஆனால் பாரதிதான் தமிழ் சாகும் என்று கூறினான் என இன்னும் தவறாகவே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் தமிழ் அறிவு ஜீவிகள். ஆனால் இன்று தமிழின் வளர்ச்சியை கணிப்பொறியின் வழியாகவும் இணையத்தின் வழியாகவும் நம்மால் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. இது போன்ற இணையக் கருத்தரங்கை முனைவர் மு.இளங்கோவன் ஐயா அவர்கள் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி,கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் நடத்தி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அன்னாரின் தமிழ்ப்பணி பாராட்டுக்குரியது.