Sunday, December 12, 2010

திருப்பணிமாலை நூல் வெளியீட்டு விழா

அமெரிக்க நாசா விண்வெளிக் கழகத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றுகிற பொள்ளாச்சி நா.கணேசன் அவர்கள் எனது நெறியாளர் முனைவர் கு.ஞானசம்பந்தன் அவர்களிடம் திருப்பணிமாலை என்ற நூலை பற்றி அறிமுகம் செய்து, அந்நூலை ஆய்வு நிகழ்த்தக் கூறினார். மேலும், இவ்வாய்வு நூலாக வெளிவர வேண்டும் எனக் கருதி அதற்காக ஐயாயிரம் பணத்தையும் கொடுத்தனுப்பினார். எனது நெறியாளர் அந்நூலைப் பற்றி வியந்து கூறி என்னையே இந்நூல் பற்றி ஆய்வு செய்யுமாறு கூறினார். நான் திருப்பணிமாலை நூலைப் படித்துப் பார்த்தேன் எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. பிறகு இந்நூலின் வேறு பிரதி எங்காவது கிடைக்குமா என்று மதுரை நகரம் முழுக்கத் தேடி அலைந்தேன். மதுரையில் இருக்கிற மிக அற்புதமான நூலகம் நான்காம் சங்கம் என அழைக்கப்படுகிற செந்தமிழ்க் கல்லூரி நூலகத்தில் திருப்பணிமாலை நூல் கிடைத்தது. இந்நூலகத்தைப் பற்றி உங்களுக்கு நிச்சயமாகக் கூறியாக வேண்டும். மிகப்பழமையான நூலகம் குறைந்தது ஐம்பதாயிரத்திற்கும் மேலான நூல்கள் உள்ளன. மரபு இலக்கியங்கள் தொடங்கி நவீன இலக்கியங்கள் வரை ஏராளமான நூல்கள் பரந்து கிடக்கின்றன. நூலகர் முருகேசன் புன்சிரிப்போடு மாணவர்களுக்குத் தேவையான புத்தகங்களை எடுத்துத் தருவார். இவரைப் போன்ற நூலகர்களைப் பார்ப்பது மிக அரிது. நூலின் பெயர், ஆசிரியர் பெயர் மற்றும் நூல் எண்ணைக் குறிப்பிட்டால் போதுமானது உடனே முருகேசன் நம்மை இருக்கையில் அமர வைத்துவிட்டு நூலைக் கொண்டு வந்து தருவார். வாருங்கள் என் ஆய்வுக்குச் செல்லுவோம். இவ்வாறு திருப்பணிமாலை மூல நூல் பிரதி மிகப் பழமையாக இருந்தது. நூலின் தாளைத் தொட்டால் கிழிந்துவிடும் அளவிற்கு இருந்தது. அப்பிரதியை நகல் எடுத்து ஆய்வுக்குப் பயன்படுத்தினேன். இந்நூலின் மற்றொரு பிரதியை மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் காணமுடிந்தது. ஒரு வழியாக நூலை வாசித்து எனது கள ஆய்வினைத் தொடங்கினேன். ஆய்வு வெற்றிகரமாக முடிந்து எனக்கு இளநிலை ஆய்வுப் பட்டத்தினைப் பெற்றுத் தந்தது.
முனைவர் தொ.பரமசிவன் மற்றும் எனது நெறியாளரின் தூண்டுதலால் இவ்வாய்வேடு புத்தகமாக வெளிவந்தது. இவ்வாய்வேடு நூலாக வெளிவர வா.நேரு அவர்கள், எனது நண்பர்கள், மாணவர்கள் மற்றும் முனைவர் கி.பார்த்திபராஜா ஆகியோர் உறுதுணையாக இருந்தனர். மேலும் எனது கல்லூரி முதல்வர் அருட்தந்தை முனைவர் அ.மரியசூசை அடிகளார் உதவியுடன் இந்நூல் வெளியிடப்பட்டது. வெளியீட்டு விழாவில் கலைமாமணி முனைவர் கு.ஞானசம்பந்தன், முனைவர் புரிசை ச.நடராசன், ஊத்தங்கரை அதியமான் கல்வி நிறுவனங்களின் தாளாளர் திரு.திருமால் முருகன், வா.நேரு, சங்கையா அண்ணன்,எமது கல்லூரிப் பேராசிரியர்கள் போன்றோர் கலந்து கொண்டனர். மாணவர்கள் ஆர்ப்பரித்து மகிழும்படி அவர்களது ஆசியுடன் நூல் வெளியீட்டு விழா நடந்ததில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.

Monday, November 15, 2010

உகர ஊகாரத் திருத்தம்

உகர ஊகாரத் திருத்தம்
புலவர் செ.இராசு,
தமிழ்ப் பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர்.

தமிழ் எழுத்துச் சீர்மை முயற்சிக்கு இப்போது அறுபது வயதாகிறது. 4.09.1993 ‘குமரன்’ இதழில் முருகப்பா அவர்கள் தமிழ் எழுத்துச் சீர்மை பற்றி முதலில் எழுதினார். 23,24.12.1933 - ஆம் ஆண்டு உ.வே.சாமிநாதய்யர் தலைமையில் சென்னையில் நடைபெற்ற தமிழன்பர் மாநாட்டில் எழுத்துச்சீர்மை உடனடியாகச் செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1934 இல் ‘பகுத்தறிவு’ இதழில் சீர்மை பற்றி அறிக்கை வெளியிட்ட தந்தை பெரியார் அவர்கள் 20.01.1935 முதல் ‘குடியரசு’ இதழில் அவற்றைப் பின்பற்றத் தொடங்கினார். 1948 - இல் சுதேசமித்திரன் நாளிதழை சி.ஆர்.சீனிவாசன் அவர்கள் தமிழ் எழுத்துச் சீர்மையுடன் அச்சிட்டார். விடுதலைக்குப் பின்னர் அறிஞர் பலரும் எழுத்துச் சீர்மை பற்றிச் சிந்திக்கத் தொடங்கினர். பற்பல இதழ்களும் சீர்மை பற்றிய பல கட்டுரைகளை வெளியிட்டன.
தந்தை பெரியார் அவர்களின் நூற்றாண்டு விழாவையொட்டி 9.10.1978 முதல் தமிழ் எழுத்துச் சீர்மையைத் தமிழக அரசு அறிவித்தது.
ஐ,ஔ - அய்,அவ்: ண,ற,ன - ணா, றா, னா: ண, ல, ள, ன - ணை, லை, ளை, னை: ண,ற,ன - ணொ,றொ,னொ: ண,ற,ன - ணோ,றோ,னோ ஆகியவை அரசு அறிவித்த சீர்மைகள் (பின் 15.01.1979 இல் ஐ, ஔ திருத்தம் தேவையில்லை என்று அரசு அறிவித்தது.). இத்திருத்த ஆணையால் உயிர்மெய் எழுத்துகளில் உகார,ஊகார உயிர்மெய் நீங்கலாக அனைத்தெழுத்துக்களும் சீர்மையை அடைந்தன.
பதினெட்டு மெய்களுடன் உகரம்,ஊகாரம் சேரும் உயிர்மெய்கள் மட்டும் சீர்மையாக இல்லாமல் ஒழுங்கற்று, பல்வேறு முரண்பாடுகளுடன் வடிவங்களைக் கொண்டுள்ளன.
கு,டு,மு,ரு,ழு,ளு:
ங,சு,பு,யு,வு: - குறில் - 3 பிரிவுகள்
ஞ,ணு,து,நு,லு,று,னு:
கூ:
டூ,மூ,ரூ,ழூ,ளு;
ஙூ,சூ,பூ,யூ,வூ; - நெடில் - 4 பிரிவுகள்
ஞ},ணூ,தூ,நூ,லூ,றூ,னூ
இவை 3,4 பிரிவாக இருந்தாலும் நுட்பமாகப் பார்க்குமிடத்து குறிலும் நெடிலும் தனித்தனியே 12 வேறுபாடுகளைப் பெற்றிருக்கின்றது. குகரம் நெடிலாக மாறும்போது ஏனைய போல் கு என மாறாமல் கூ என உகரம் சேர்த்து எழுதப்படுகிறது. இருப்பினும் நெடிலாக ஒலிக்கிறது. புழந்தமிழாகிய தமிழிலும், வட்டெழுத்திலும் கிரந்தத்திலும் இவ்வளவு முரணான வேறுபாடுகள் இல்லை. இன்றைய தமிழாக உருவெடுத்தபோதுதான் இவ்வேறுபாடுகளைப் பெற்றன.
ஓருயிர் சேர்த்து உயிர்மெய்கள் இவ்வாறு ஒரே சீராக இல்லாமல் வேறுபட்டிருப்பது மொழியியலுக்கு முரண்பாடாக உள்ளன. சின்னஞ்சிறு பிஞ்சுக்குழந்தைகள் இவ்வேறுபட்ட வடிவங்களைக் கற்று மனத்தில் இருத்திக்கொள்ள எவ்வளவு சிரமப்படும் என்பதை உளவியல் நோக்கில் எண்ணிப்பார்க்க வேண்டும். முரண்பாடுகள் நிறைந்த இவ்வரிவடிவங்களை அக்குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கும் தொடக்க வகுப்பு ஆசிரியர்கள் எவ்வளவு சிரமப்படுவார்கள் என்பதைக் கல்வியியல் நோக்கில் காணவேண்டும். சிறார் தலையில் எவ்வளவு பெரிய பாரத்தை ஏறறுகிறோம் என்பதைப் பாருங்கள். இத்தேவையற்ற சிக்கலிலிருந்து சிறார்கள் மீள வேண்டாமா?
தமிழக அரசு கொண்டுவந்த சீர்மைக்கு ………. இகர,ஈகாரத் திருத்தங்களுடன் ஐ,எ,ஏ,உகர,ஊகாரத் திருத்தங்கள் பற்றியும் பல அறிஞர்கள் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். திருத்தம் பெற்று முன்னேறுகின்ற மொழிகளோடு நம் தாய்த்தமிழும் முன்னேற வேண்டாமா? கல்லிலும் செப்பேட்டிலும் ஓலையிலும் எழுதப் பெற்ற முறை தேவைபட்டிருக்கலாம். இன்று மிக வேகமாக முன்னேறிவரும் அறிவியல் முன்னேற்றத்தில் நாமும் இணையவேண்டாமா? தட்டச்சு, மின்தட்டச்சு, அச்சு, தொலையச்சு, குராட்மா அச்சு, கணிப்பொறி,…….. டைப், மோனோ டைப் போன்ற அறிவியல் ஆக்கச் சாதனங்களில் அன்னைத்தமிழ் அரியணை ஏற வேண்டாமா?
காலந்தோறும் தமிழ் எழுத்துக்கள் மாறியே வந்துள்ளன என்பதைக் கல்வெட்டுக்களும் செப்பேடுகளும் காட்டுகின்றன. முன்பு எகர, ஒகர உயிர்க்கும் உயிர்மெய்கட்கும், குற்றியலுகரத்திற்கும் புள்ளியிட்டு எழுதினோம். வருடம், மாதம், தேதிகட்குக் குறியீடுகளையே பயன்படுத்தி வந்தோம். தமிழ் எண்களையே முன்பு பயன்படுத்தினோம். இவைகள் எவ்விதப் போராட்டமும் இல்லாமல் மறைந்தனவே ஏன்? 192 காசுகளை ரூபாய்க்குக் கொண்டிருந்த நாம் 100 புதுக்காசுகளை ஏற்றுக் கொள்ளவில்லையா? வள்ளுவர் எழுதிய எழுத்தில் கம்பர் எழுதவில்லை. தமிழ்ச்சுருக்கெழுத்தில் தமிழ் வரிவடிவம் இல்லை என்பதற்காக அதனை யாரும் நீக்க முனையவில்லையே.
இம்மாறுபட்ட இருவகை உயிர்மெய் வடிவங்களுக்கு மட்டும் தட்டச்சுப் பொறியில் 22 தட்டுக்கள் உள்ளன. அவைகளில் சீர்மை மூலம் 20 தட்டுக்கள் குறைந்து இரண்டே தட்டுக்களில் இவ்வடிவங்களைத் தட்டச்சு செய்யலாம். கு, சு, டு, து, நு, மு, ரு, று, ழு, ளு, லு, னு ஆகியவைகட்குத் தனி வடிவங்கள் உள்ளன. (14). ணு அடிக்க இரண்டு பாகங்களைச் சேர்க்க வேண்டும் (2). ங, பு, யு, வு ஆகியவைகளுக்குக் கீழ்க்கோட்டை அடித்து அதன்மேல் ங, ப, ய, வ - வை அடிக்க வேண்டும். (1) டூ, மூ, ரூ, ழூ ஆகியவற்றிற்குச் சுழியை அடித்துப் பின்னர; டு, மு, ரு, ழு ஆகியவைகளை அடிக்க வேண்டும். (1) கூ, சூ ஆகியவைகட்குத் தனி எழுத்துக்கள் உள்ளன (2). பிற எழுத்துக்களை நெடிலாக்க h என்பதை இறுதியில் சேர்க்க வேண்டும் (1). ங, பு, யு, வு - வை நெடிலாக்க கீழ்வளைவைத் தனியாக அடிக்க வேண்டும் (1). சீர்மை மூலம் இவை அனைத்தையும் இரண்டே எழுத்துக்களில் அடக்கலாம். பிற சீர்மைகளுடன் இந்த 20 வடிவங்கள் குறைந்தால் கையடக்கமான தட்டச்சு வந்துவிடும். வேண்டிய இடங்களுக்கு அவைகளை எளிமையாக எடுத்துச் செல்லலாம்.
மின்னணு தட்டச்சு தமிழில் வந்து மின்சுற்றுக் குறைவதால் இக்கருவிகளை இன்றைய நிலையில் பாதி விலைக்கும் குறைவான விலையில் உருவாக்கலாம். இவ்வாறு பொருளியல் நோக்கிலும் உகர, ஊகார சீர்மை முக்கியமானது என்பதை உணர வேண்டும். இவற்றின் மூலம் தட்டச்சு வேகம் பெரிதும் எளிமையாகும். ……… கருவிகள் மூலம்தான் பொத்துப்போவது நீங்கும். எழுத்துக்கள் அழகுபெறும்.
அச்சகங்களில் சில எழுத்துக்கள் 14 கிலோ வாங்கினால் அதே செய்தியை அச்சடிக்க, தமிழ் எழுத்துக்கள் 28 கிலோ தேவைப்படுகிறது. தவிரவும் பழையமுறை எழுத்துக்களில் மேலும் கீழும் வளைவுகள் செல்லுவதால் இடத்தை அடைக்கிறது. இப்போது 30 வரிகள் அச்சிடும் பக்கத்தில் 36 வரிகள் அச்சிடலாம். அச்சு எழுத்துப்பெட்டிகளில் 34 குறைவதால் கை அதிகம் நீளவேண்டிய தேவையில்லை. அச்சுக்கோர்த்தல் எளிமையாகவும், மிக வேகமாகவும் நடைபெறும். விரைவில் நூல்களை அச்சிடலாம். மிகுந்த சிக்கனம் இதனால் ஏற்பட்டு அச்சுச்செலவும் குறையும்.
இணைப்பில் காட்டியுள்ளவாறு பல அறிஞர்கள் உகர, ஊகாரச் சீர்மைக்கு முப்பதிற்கும் மேற்பட்ட திருத்தங்களைக் கூறியுள்ளனர். நார்மன் பிரௌன் போன்ற மேனாட்டு மொழியியல் அறிஞர்கள் தமிழ் எழுத்துச் சீர்மையை வரவேற்றுள்ளனர்.
இணைப்பில் முதலாவதாக உள்ள {, _ குறியீடுகள் இன்றைய கிரந்த எழுத்துக்களில் உள்ளன. தட்டச்சுக்களிலும் அவை இடம் பெற்றுள்ளன. ராஜீ, ஜீலை போன்ற சொற்கள் மூலம் அனைவருக்கும் தெரிந்த அனைவரும் கையாளுகிற குறியீடுகளாக இருக்கின்றன. எழுத்துத் திருத்தங்களின்போது கூடுமானவரை ஏற்கனவே இருக்கின்ற மக்கள் பழகிய குறியீடுகளைச் சேர்த்து எழுதுவதே இன்றியமையாததாகும். முதல் வகுப்பு மாணவருக்கும் இக்குறியீடுகள் புரியும். கொடுமுடி சண்முகம் அவர்கள் 2000 பொதுமக்களிடம் கருத்தறிந்தபோது 80 விழுக்காட்டினர் இக்குறிகளையே ஆதரித்துள்ளனர். இன்றைய தமிழ் ஆட்சிமொழி விரைவு பெறாததற்குக் கூறப்படும் பல்வேறு காரணங்களில் தமிழ் தட்டச்சுப் பொறிகள் போதுமானதாக இல்லாததும் ஒன்று.
புதிய குறியீடுகளைக் கொண்டுவந்து தட்டச்சுக்களை எல்லாம் மாற்றுவது என்பது இயலாத காரியம். இவற்றை ஏற்றால் பழைய தட்டச்சுப் பொறிகளையே பயன்படுத்தலாம். இக்குறியீடுகள் பெற்ற கிரந்த எழுத்துக்கள் தமிழ்நாட்டில் மட்டுமே வழங்கக் கூடியவை. எந்த வடஇந்திய மொழிகளிலும் பிற திராவிடமொழிகளிலும் அவை இல்லை.
பல லட்சம் புத்தங்கள் வீணாகும் என்று எவரும் பயப்படத் தேவையில்லை. பழையமுறை - புதியமுறை மாற்றத்தை மட்டும் அச்சிட்டு அந்நூல்களில் ஒட்டிவிடலாம். படிப்போர் எளிமையாகப் புரிந்து கொண்டு படிப்பர். புழைய புத்தகங்கள் என்றென்றும் நிலைத்திருக்கக் கூடியவை அல்ல. அவைகளை மறு அச்சு செய்யும்போது புதிய சீர்மை முறையில் அச்சிடலாம்.
முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களை அமைப்பாளராகவும், அமரர் வ.சு.ப.மாணிக்கம் அவர்களைத் தலைவராகவும் கொண்ட தமிழகப் புலவர்குழு தமிழ் எழுத்துச்சீர்மை அவசியம் தேவை எனத் தீர்மானம் நிறைவேற்றி 2.2.1975 - இல் பரிந்துரை செய்யக் குழு ஒன்றையும் அமைத்தது. அக்குழு உகர, ஊகாரத் திருத்தம் அவசியம் தேவை எனக் கூறியுள்ளது. தலைவரவர்களும் அதை ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.
சிலர் உயிர் எழுத்துக்களில் உகர, ஊகாரத்திற்கும் தீவிர மாற்றத்தையும் விரும்புகின்றனர். எழுத்துக்கள் வேண்டாம் குறியீடுகளே போதும் என்பாரும் அகரம் ஒன்றையே பன்னிரு உயிராகவும் குறியீடுகளைச் சேர்த்து எழுதலாம் என்பாரும் உளர். மிகத் தீவிரமான மாற்றம் புதுமொழிபோல் ஆகிக் கற்றவரையும் கல்லாதவராக மாற்றிவிடும். மேற்கண்ட தேவையான திருத்தங்களே உடனடியாகப் போதுமானது. திருத்தத்தை எதிர்ப்போர் தமிழின் எந்த ஒலியும் குறைவதில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். வரிவடிவங்களே செம்மையாக்கப்படுகின்றன என்பதையும் உணர வேண்டும். மொழிப்பற்று என்ற பெயரில் மொழி முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கக்கூடாது.
உலகில் எல்லா மொழிகளும் எழுத்துச் சீர்மையைக் கொண்டு வந்து விட்டன. அண்மையில் உள்ள மலையாளமொழி 500 - க்கும் மேற்பட்ட உருவங்களை 90 ஆகக் குறைத்துவிட்டது. 40000 - க்கும் மேற்பட்ட எழுத்துக்களுடைய சீனமொழி 200 எழுத்துக்களைப்பெற்று ஏறுநடை போடுகிறது. மேலிருந்து கீழ் எழுதப்பெற்ற ஜப்பான் மொழி இடமிருந்து வலமாக எழுதப்படுகிறது.
வேகமாக முன்னேறிவரும் மொழிகளோடு நம் தொன்மைத்தமிழும் ஈடு கொடுத்து முன்னேற தேவை எழுத்துச் சீர்மை! எஞ்சிய உகர, ஊகாரச் சீர்மை அவசியம் உடனடியாக வேண்டும். ‘வளர்ச்சி என்பது மாற்றம்; மாற்றம் இன்மையேல் வளர்ச்சி இல்லை’ இது சமுதாயத்திற்கு மட்டுமல்ல; மொழிக்கும்தான்!

Sunday, November 14, 2010

நாயனார் கோயில்

நாயனார் கோயில்
(ஜீவபந்து ஸ்ரீபால்)
சென்னை மயிலாப்பூரிலுள்ள திருவள்ளுவர் கோயிலைப் பலரும் நன்கு அறிவர். அக்கோயில் திருவள்ளுவர் கோயில் என இன்று அழைக்கப்பட்டாலும் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நயினார் கோயில் என்றே வழங்கி வந்தது.
வரலாற்றின் வழியில் ஆராயும் போது அக்கோயில் தோன்றிய காலத்திலிருந்து சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வரை நாயனார்கோவில் என வழங்கி வந்துள்ளது. நாயனார் எனில் நாயகன், தலைவன் எனப் பொருள்படும். நாயனார் என்ற இச்சொல் முதன் முதல் ஜைன சமயத்தவர் போற்றும் தீர்த்தங்கரர்களுக்கும் ஜைன முனிவர்களுக்கும் பட்டப்பெயராகத் தொன்றுதொட்டு வழங்கி வந்துள்ளது. சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் மதுரைக் காண்டத்தின் ஆரம்பத்தில்,
“திங்கள் மூன்றடுக்கிய திருமுக்குடைக் கீழ்ச்
செங்கதிர் ஞாயிற்றுத் திகழொளி சிறந்து
கோதை தாழபிண்டிக் கொழுநிழ லிருந்த
ஆதியில் தோற்றத்து அறிவனை வணங்கி”
என்னும் அருகன் வாழ்த்துக்கு அடியார்க்கு நல்லார் எழுதிய உரையில் அறிவன் கோயில் என்பதற்கு நாயனார் கோவில் என உரை எழுதியுள்ளார். இது போன்றே கழுகுமலையிலுள்ள கல்வெட்டுச் செய்திகளில் ஜைன முனிவர்களைப் பற்றிய குறிப்புகளில் நாயனார் எனப் பொறிக்கப்பட்டுள்ளன. திருவதிகையில் கிடைத்த கல்வெட்டுக்களில் ஜைனக்கோயிலை நால்முக நாயனார் கோயில் என்றும், முனைதீச்சுரம் உடைய நாயனார் என்றும் காணப்படுகிறது. திருப்பரிதிக் குன்றத்துக் கோயில் கல்வெட்டுச் செய்தியில் அக்கோயில் தீர்த்தங்கரரை நாயனார் என்றே பொறிக்கப் பெற்றுள்ளது. நன்னூலுக்கு உரை எழுதிய மயிலைநாதர் தமது உரையில் அவிநாயனார் என்னும் ஜைன அறவோரை அறிமுகப்படுத்தி உள்ளதைப் புலவர் உலகம் நன்கு அறியும். சில பண்டையக் கல்வெட்டுச் செய்திகளில் தீர்த்தங்கரர்களையும், முனிவர்களையும் நயினார் என்றும் குறிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக விழுப்புரம் தாலுக்காவிலுள்ள கோலியனூர் ஜைனக் கோயில் ஒன்றில் ஸ்வஸ்தி ஸ்ரீநயினார் தேவர் பெருமானார் ஸ்ரீகோவில் என்றும், கோலியாபுரநல்லூர் நயினார் அருமொழி நாயகர் கோயில் என்றும் காணப்படுகின்றன. இவ்வரலாற்றின் அடிப்படையிலேயே திருக்குறளாசிரியருக்கும் நாயனார் என்றும், தேவர் என்றும் பட்டங்கள் அமைந்துள்ளன. தேவர் என்ற பட்டத்தைப் பற்றிய வரலாறு பலருக்கும் நன்கு தெரியும். ஜைன சமயத்தைத் தோற்றுவித்த முதல் தீர்த்தங்கரருக்கு விருஷப தேவர் (இடப தேவர்) எனப் பட்டம் வழங்கி வந்துள்ளது போன்று ஜைன முனிவர் பலருக்கும் தேவர் பட்டம் வழங்கி வந்துள்ளன என்பதை அறிகின்றோம்.
இவ்வரலாற்றை ஆதாரமாகக் கொண்டு மயிலாப்பூரில் அமைந்துள்ள திருக்குறளாசிரியரின் திருக்குறள் வரலாற்றை ஆராய்வோம்.
“மறமேமுனிந்து மயிலாபுரி நின்று மன்னுயிர்கட்
கறமே பொழியும் அருட்கொண்டலே யதரஞ்சிவந்த
நிறமே கரியவொண் மாணிக்கமே நெடுநாளொழித்துப்
புறமே திரிந்த பிழையடியேனைப் பொறுத்தருளே”.
எனத் திருநூற்றந்தாதி ஆசிரியர் மயிலாபுரியில் கோயில் கொண்டிருந்த நேமிநாத தீர்த்தங்கரரைப் போற்றியுள்ளார். இது போன்று வேறு பல தோத்திரப் பாக்களாலும், மயிலாப்பூரில் கிடைத்துள்ள ஜைன தீர்த்தங்கரர்களின் உருவச்சிலைகளாலும், கல்வெட்டுச் செய்திகளாலும் பண்டைய காலத்தில் ஜைன சமயத்தின் உறைவிடமாய் மயிலாப்பூர் விளங்கிற்றென்பது தெளிவாகிறது. இத்தகு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மயிலாப்பூரில் நன்னூல் உரையாசிரியர் மயிலைநாதர், அவிரோதிநாதர், நேமிநாதம் இயற்றிய குணவீர பண்டிதர் போன்ற பல்கலைச் செல்வர்களாகிய ஜைன அறவோர்கள் வாழ்ந்து வந்தனர் என்பதையும் ஆராய்ச்சி அறிஞர்கள் அறிவர். மயிலாப்பூரில் வாழ்ந்த ஜைனப் பெருமக்கள் நேமிநாதரை வழிபட்டதைப் போன்றே தெய்வப் புலவராம் திருக்குறளாசிரியரின் திருவடிச் சின்னங்களைப் பொறித்து வைத்து வழிபாடியற்றி வந்தனர்.
நமது பாரத நாட்டின் வரலாற்றை ஆராயின் ஜைன சமயத்தவரே முதன் முதல் தீர்த்தங்கரர்களையும், ஆச்சாரியர்களையும், முனிவர்களையும் வழிபட அம்மகான்களின் திருவடிச் சின்னங்களை அமைத்து வழிபட்டு வந்துள்ளது நன்கு விளங்கும். குறிப்பாக இமயமலையில் கைலாசகிரியிலும் வங்காளத்தைச் சார்ந்த சம்மேதசிகர மலையிலும், சம்பாபுரி, பாவாபுரி, கிர்னார் போன்ற பல மலைகளிலும் தீர்த்தங்கரர்களின் திருவடிகள் பொறிக்கப் பெற்றுள்ளன. தமிழகத்தில் பொன்னூர் மலையில் திருக்குறளாசிரியர் குந்தகுந்தாச்சாரியார் திருவடிகளையும், இப்பெருமான் பிறந்த திருத்தலமாகிய குந்தகுந்தா மலையிலுள்ள (குண்டக்கல் பக்கத்தில் உள்ள குந்தகுந்தாபுரத்தில் குந்தகுந்தர் பற்றியக் கல்வெட்டுச் செய்திகளை இன்றும் காணலாம்) திருவடிகளையும், திருப்பறம்பூர் அகளங்கதேவர் திருவடிகளையும், ஜின காஞ்சியில் வாமனமுனிவர் திருவடிகளையும், விழுக்கம் குணசாகரர் திருவடிகளையும் காணலாம்.
கி.மு. 3–ம் நூற்றாண்டில் தென்னகம் விஜயம் செய்த பத்திரபாகு சுவாமிகளின் திருவடிகளும், மௌரிய சக்கரவர்த்தி சந்திரகுப்த மன்னரின் திருவடிகளும் சிரவண பெல்குலாவில் அழகாகப் பொறிக்கப் பெற்றுள்ளன. இவ்வழக்காற்றின் துறையிலேயே மயிலையிலும் திருக்குறள் ஆசிரியரின் சிறப்புப் பெயர்களாகிய திருவுள்ள நாயனார் அல்லது திருவுள்ள தேவர் எனப் போற்றி அவர் திருவடிகளை ஜைன பெருமக்கள் வணங்கி வந்தனர். இவ்வழிபாட்டில் ஏனைய சமயத்தவரும் கலந்து கொள்வார்கள். அவர்கள் இக்கோயிலைக் குறிப்பிடும் பொதெல்லாம் தமிழகத்து ஜைனப் பெருமக்களின் பட்டப்பெயராகிய நயினார் என்பதைக் கொண்டு நயினார் கோயில் என அன்புடன் அழைத்துப் போற்றுவார்கள். அவ்வழக்கம் இன்றும் அப்பகுதியில் வழங்குவதைக் காணலாம். சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் “திருவள்ளுவர் கோயில் எது?” என்று கேட்டால் அக்கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் வசிக்கும் மக்கள் ஒன்றும் விளங்காமல் விழிப்பார்கள். நயினார் கோயில் எனில் “அதோ” எனச் சுட்டிக் காட்டுவார்கள்.
கி.பி. 17-ம்நூற்றாண்டுவரை மயிலாப்பூரில் பெரும்பாலும் ஜைன சமயத்தவரே வாழ்ந்து வந்தமையால் அவர்களின் பட்டப் பெயராகிய நயினார் என்னும் சிறப்புப் பெயரைக் கொண்டு அவ்வாறு அழைத்து வந்தனர். மயிலையில் ஜைனர்கள் மலிந்திருந்தனர் என்பதைப் பண்டைய நூலாகிய தோத்திரத் திரட்டில் “மயிலாப்பூர் பத்து” என்னும் பதிகத்தில்,
“ஒளிதரு தண்ணிழல் குலவியோ ரோசனையுயரமோ ரோசனையில்
களிதரு நாண்மலரணியும் சோகுடையரி குலநாயகரூர்
விளிதரு மூடமும் வினையும் விடாமயல் வீடருநால் வகையிற்
றெளிதரு சாவகர் செழுமனையேமலி திருமயிலாபுரியே”
எனவரும் தோத்திரப் பாவின் கடைசி வரியால் விளங்குகிறது. இதனால் மயிலாப்பூரில் சாவகர்கள்(நயினார்கள்) சிறப்பாகவும் செழிப்பாகவும் வாழ்ந்திருந்தனர் என்பதையும் அறிகின்றோம். “அந்“நயினார்” பட்டம் தமிழகத்தில் வாழும் ஜைனர்களிடம் இன்றும் சிறப்பாக வழங்கி வருகிறது. ஜைன சமயத்தினின்றும் வேறு சமயம் புகுந்தவர்களும் தங்கள் பண்டைய நயினார் பட்டத்தைத் துறக்கவில்லை என்ற உண்மையை இன்றும் காணலாம். குறிப்பாக நீறுபூசி வேளாளர்களும், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, செஞ்சி, ஆரணி பகுதிகளில் காப்பலூர், கலசப்பாக்கம் கிராமங்களில் வசிக்கும் பல வேளாளர்களும் பண்டைய நயினார் பட்டத்தையே வைத்துக் கொண்டுள்ளார்கள். தென்னாட்டு முஸ்லீம்களில் பெரும்பாலோருக்கும் நயினார் பட்டம் வழங்குகிறது. அவர்களும் ஜைனர்களாயிருந்து மாறியவர்கள் என்பதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. திருநெல்வேலி ஜில்லாவில் ஆழ்வார் திருநகர், ஸ்ரீவைகுண்டம், தென்காசி போன்ற பகுதிகளில் உள்ள சைவ சமயத்து வேளாளர்கள் தங்கள் பெயருக்குப் பின்னால் நயினார் பிள்ளை எனத் தங்கள் பண்டைய சமயப் பெயரை விடாது அமைத்துக் கொண்டுள்ளார்கள். மேலும் தமிழகத்தின் பல பாகங்களில் நயினார் குளம், நயினார் மண்டபம், நயினார் மேடு, நயினார் குப்பம் என வழங்குவதைக் காணலாம். அவைகள் யாவும் ஜைனர்கள் வாழ்ந்த இடங்களே ஆகும்.
இத்தகு சான்றுகளால் மயிலாப்பூரில் வாழ்ந்து வந்த நயினார்கள் வழிபாடியற்றிய திருக்குறளாசிரியர் நாயனார் கோயிலே இன்று திருவள்ளுவர் கோயில் என அழைக்கப்படுகிறது என்பதில் சிறிதும் ஐயமில்லை.
அத்திருவடிகள் எங்கே?
பண்டைய கால முதல் திருக்குறளாசிரியரின் திருவடிகளை வணங்கி வந்த நயினார்கள்(ஜைனர்கள்) மயிலாப்பூரில் பிற்காலத்தில் அருகிவிட்டார்கள். அங்குள்ள கோயில்களும் சின்னங்களும் மறைக்கப்பட்டும் மாற்றப்பட்டும் அழிக்கப்பட்டும் போயின. இது மறுக்கவியலாத வரலாற்று உண்மை! இந்நிலையில் சுமார் 100 அல்லது 120 ஆண்டுகளுக்கு முன்னர் திருக்குறளாசிரியருக்கு உருவச்சிலை வைப்பதாகக் கூறித் தாடி மீசை சடையுடன் கூடிய உருவச்சிலையைச் செய்து வந்து திருக்குறளாசிரியர் திருவடிச் சின்னங்களுக்குப் பின்னே மூலவராக அமைத்தார்கள். அதற்குச் சில ஆண்டுகளுக்குப் பின்னர் அத்திருவடிச்சின்னத்தைப் பெயர்த்தெடுத்து மறைத்து விட்டார்கள்.
இவ்வடாத செயலைக் கண்ட அங்குள்ள பொதுமக்கள் அர்ச்சகரையும், அவ்வாறு செய்ததற்குக் காரணமாய் இருந்தவர்களையும் எதிர்த்துக் கிளர்ச்சி செய்ய ஆரம்பித்தார்கள். இவ்வெதிர்ப்பின் வேகத்தை அறிந்த அர்ச்சகர்கள் அச்சின்னத்தைச் சிதைத்து சில மாறுதல்களுடன் உள்கோவிலை விட்டு வெளியே மண்டபத்தில் வைத்தார்கள். இவ்வாறு சில காலம் அம்மண்டபத்திலேயே இருந்தது என்றாலும் அவ்வர்ச்சகர்கள் அத்திருவடிகள் அங்கிருப்பதில் வெறுப்பே கொண்டிருந்தனர். அதற்குக் காரணம் அங்கு வருபவர்கள் அத்திருவடிகளையும் தொழுது வந்தார்கள். அதனால் சில ஆண்டுகள் கழித்து அச்சின்னத்தை அக்கோயிலின் மதிற்சுவரில் வைத்து மூடி விட்டார்கள். அதனையறிந்த பொதுமக்கள் எதிர்க்கவே புதைத்த இடத்திலேயே திறந்து வைத்து விட்டார்கள். இக்கிளர்ச்சிகளெல்லாம் ஜைனர் அல்லாத அப்பகுதிப் பொதுமக்களாலேயே நடந்தது. ஏனெனில் அவர்கள் பல காலமாக அத்தேவர் திருவடிகளைத் தொழுது வந்த உரிமையாலும் அன்பாலும் ஆகும். ஜைன சமயத்தவர் வழிபடும் சின்னம் என்பதற்காகவும் திருக்குறளாசிரியரின் சிறப்புப் பெயராகிய திருவுள்ளநாயனார் என்னும் பெயர் மாறித் திருவள்ளுவர் என வழங்குவதை நிலை நிறுத்தவுமே இச்சதிச் செயல் நடந்ததெனில் மிகையாகாது.
இவ்வரலாற்றைச் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் அந்நயினார் கோயிலின் எதிர் வீடுகளில் வசித்து வந்த வயது முதிர்ந்தோரின் வாயிலாகக் கேட்டறிந்தேன். இச்செய்தியைத் தமிழ்ப் பெரியார் திரு.வி.க அவர்களிடத்தும் பேராசிரியர் எ.சக்கரவர்த்தி நயினார் அவர்களிடத்தும் நான் தெரிவித்தேன். அப்பெரியார்கள் இருவரும் வியப்புற்று அங்குச் சென்று கோயிலின் எதிர்வீட்டு வாயிற்படியில் நின்றிருந்த முதியோரை விசாரித்து உண்மையை அறிந்தார்கள். பின்னர் 1945-ஆம் ஆண்டில் திருக்குறளாசிரியரின் திருவடிகளைப் படமாக வரைந்து “ப்ளாக்” செய்து ஒரு பிரசுரம் வெளியிட்டேன். 1947-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ம் நாள் மயிலாப்பூர் குயப்பேட்டை வீரப்பெருமாள் தெருவில் மயிலைத் திருவள்ளுவர் கழகத்தின் ஆண்டுவிழா நடைபெற்றது. அவ்விழாவில் தமிழ்ப் பெரியார் திரு.வி.க அவர்களின் வற்புறுத்துதலின் பேரில் யான் தலைமை வகித்தேன். எனது தலைமையுரையில் அக்கோயிலின் வரலாற்றைப் பேசுமாறு தமிழ்ப் பெரியார் பணித்தார்கள். அவ்வாறே மேலே குறிப்பிட்ட வரலாற்றை விளக்கிப் பேசினேன். இதனைக் கேட்ட அறிஞர் பெருமக்களும், பொதுமக்களும் வியப்புற்றனர். அது மட்டுமல்ல! பண்டைக்கால மதக்காழ்ப்பின் போக்கினை எண்ணி எண்ணித் திகைத்து விட்டார்கள். கூட்டம் முடிவடைந்ததும் அவ்விழாவில் சொற்பொழிவாற்றிய அறிஞர் பெருமக்களான தமிழ்ப் பெரியார் திரு.வி.க அவர்கள், பன்மொழிப்புலவர் டி.பி.மீனாட்சி சுந்தரனார் அவர்கள், தமிழறிஞர் ரெவரெண்ட் அருள் தங்கையா அவர்கள், எஸ்.லஷ்மிதரன் பாரதியார் பி.ஏ.,பி.எல். அவர்கள், திரு.கே.அன்பழகன் எம்.ஏ. அவர்கள் ஆகிய அறிஞர்களும், புலவர்களும் திருவள்ளுவர் கோயிலுக்குச் சென்று பார்வையிட்டார்கள். யான் பொதுக்கூட்டத்தில் விளக்கியவாறே மதிற்சுவரில் வைத்துள்ள திருவடிச் சின்னத்தைக் கண்டு முற்றும் உண்மை உண்மை என உள்ளம் பூரிக்கப் பேசிக் கொண்டார்கள். அது மட்டுமல்ல அங்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அவ்வீதி மக்களில் ஒரு வயது முதிர்ந்த அம்மையாரை நோக்கி இது என்ன கோயில் எனக் கேட்டார்கள். உடனே அக்கிழவி, நயினார் கோயில் எனப் பகர்ந்தார். எதிர்பாராத இவ்விடையைக் கேட்டதும் புலவர்களும், பொது மக்களும் கைகொட்டி மகிழ்ந்தார்கள். அவர்கள் அனைவரும் என்னை நோக்கித் தாங்கள் கூறியவாறு நயினார் கோயில் என்பது மறுக்கவியலாத வரலாற்று உண்மை எனப் பாராட்டினர். திருக்குறளாசிரியர் தேவர் திருவடிச் சின்னத்தை அகற்றித் திருவள்ளுவர் உருவச் சிலையெனக் கற்பனையாகச் சில ஆண்டுகளுக்கு முன் அமைத்தும் தொன்றுதொட்டுவரும் நயினார் கோயில் என்ற பெயரும் தேவர் திருவடிச்சின்னமும் அம்மக்கள் உள்ளத்தினின்றும் அகலாது நின்று நிலவுகிறது என்றும் வியந்து பேசினார்கள். இத்தகு அகச்சான்றுகளாலும் புறச்சான்றுகளாலும் உண்மை கண்ட நாம் பண்டைய வரலாற்றுச் சின்னத்தை நிலைநாட்ட முற்பட வேண்டும். இதனால் நமது ஆசிரியர்களாகிய அறவோர்கள்பால் நாம் கொண்டிருக்கும் மதிப்பையும், பக்தியையும் உலகோர் கண்டு வியப்பர். உயர்ந்தோர் திருவடிகளை வணங்கும் நமது பண்பும் எந்நாளும் அழியாது வழி வழி வளரும்.
ஆகவே, நமது பாரத அரசியலரால் வெளியிடப்பட்டதும், நமது சென்னை அரசியலாரைக் கலந்து வரையாததுமாகிய திருக்குறளாசிரியரின் திருவுருவப் படத்தைப் பெரும்பாலான தமிழறிஞர்கள் ஏற்காததும் பலரும் அறிந்ததே. “மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்த தொழித்து விடின்” எனத் திருக்குறளாசிரியர் எவைகளை வேண்டா என வெறுத்தாரோ அவைகளையே அவர் தலையில் வைத்துச் சுமத்தியது போன்ற உணர்ச்சியே நமது உள்ளத்தில் உருவாகிறது.
இந்நிலையில் தமிழ் மக்கள் பலரும் சமய, சாதி அரசியல் கட்சி நோக்கங்களை மறந்து, “ஒன்றாக நல்லது கொல்லாமை” என்னும் அருட்கொடியைத் தாங்கி நிற்கும் நமது தேவர் பெருமானைப் பண்டைய காலச் சான்றோர்கள் வழி நின்று அவ் அறவோரின் திருவடிகளையே சிலையாகச் செய்து வாழ்த்தி வணங்குவோமாக.

Tuesday, September 28, 2010

இளமையின் பயணம்

இளமையின் பயணம்
பயணம் மனிதனை விசித்திரமான ஓர் உலகத்திற்குள் அழைத்துச் செல்கிறது. அப்போது ஐந்து வயதிருக்கும் மஞ்சப்பையில் சிலேட்டுக் குச்சிகளோடு கையில் முட்டாய்ப் பொட்டலத்துடன் அப்பாவின் விரல் பிடித்து எண்ணெய் படிந்த மூஞ்சியுடன் மாணவன் என்கிற அடையாளத்தோடு முதல் வகுப்பில் நுழைந்த தருணங்கள் வாழ்க்கையோட்டத்தில் மின்மினிப் பூச்சியைப் போல ஒளி எழுப்பிவிட்டு மறைந்து விடுகிறது.

தலைக்கு மேல் கை உயர்த்தி காதினைத் தொடாதவர்களையும் மாணவர்களாகச் சேர்த்துக்கொள்ள இன்றையத் தனியார் பள்ளிகள் அனுமதிக்கின்றன. இவ்வாறு வழியறியாமல் தொடங்கிய மாணவ வாழ்க்கைப் பயணம் எல்லையற்று நீண்டு கொண்டே செல்கிறது. சிரிக்கிறபோது சிரித்து அழுகிறபோது அழுது விளையாடுகிறபோது விளையாடி ரசித்த நினைவுகள் விழிகளின் ஓரத்தில் நீர்த்திவலைகளாகத் திரண்டு நிற்கின்றன. அது எப்போது வேண்டுமானாலும் கண்ணீராக உருமாறி உதிர்ந்து விடக்கூடும்.
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் கல்லூரிப் பருவம் மறக்க முடியாததாக இருந்திருக்கின்றது. அடர்ந்த காட்டுக்குள் இயங்கும் மூங்கில் இசையைப்போல நிசப்தமாக அலைந்து கொண்டிருக்கும் காலமது. சிலர் விதைக்கப்பட்டுத் தொலைந்து போயிருக்கிறார்கள். எத்தனையோ பேர் விதைக்கப்படாமலும் முளைவிட்டிருக்கிறார்கள். இது பதின் பருவத்து நியதியாகக் கூட இருக்கலாம்.

எதற்காக இந்தக் கௌரவப் பயணம் என்ற கேள்வி ஆழ்மனதில் உதித்திருக்குமா? இதற்கான விடைகளை அறிந்து கொள்வதற்கு முன்பே மூன்றாண்டுகள் முடிவடைந்து விடுகின்றன. இந்த விரைவுப் பயணத்தின் நினைவுகளை மட்டும் இதுவரை யாராலும் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஒவ்வொரு மாணவனின் இலட்சியங்களையும் கனவுகளையும் கல்லூரியில் உள்ள மரங்கள் மௌனமாகக் கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. இந்த மரங்கள் தன் வாழ்நாளில் எத்தனை மாணவர்களைச் சந்தித்திருக்கக் கூடும். மரங்களுக்கு மட்டும் பேசும் வாய்ப்பு இருந்தால் மாணவச் சமுதாயம் திக்கு முக்காடிப் போயிருக்கும். மாணவர்கள் தங்களுடைய நட்பையும் காதலையும் ஆசிரியர் மீதான கோபத்தையும் வாழ்வின் மீதான எதிர்ப்பையும் மரங்களின் கீழிருந்துதான் விவாதித்திருக்க முடியும்.


இந்தக் கல்விமுறை அவர்களுக்குப் பணம் சம்பாதிக்கும் வெறியையும் வழிமுறைகளையும் மட்டும்தான் கற்றுத் தருகின்றன. சகமனிதர்களை நேசிக்கவும் கற்றுத் தர வேண்டும். தோல்வியில் துவண்டு விழாமல் எந்தத்துறையிலும் என்னால் வெற்றிபெற முடியும் என்ற தன்னம்பிக்கையுணர்வோடு வாழ்வதற்கு உதவுவதே கல்வி என்பதை உள்ளூரப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு மாணவனிடமும் தன்னையறியாமல் ஏதோ ஒரு விதமான திறமை ஒளிந்துகொண்டுதான் இருக்கிறது. வாழ்க்கை என்பதே தேடலை நோக்கிய ஒற்றை வழிப்பயணம்தான். அந்தத் திறமையைத் தேடிக் கண்டடைய முயற்சிக்க வேண்டும்.

இன்றைய ஊடகங்கள் இளைஞர்களைத் தன்வயப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. ஊடகங்களாகிய நுகர்வோர்களுக்கான வியாபாரிகள் மாணவர்களே என்பதை இளையசமுதாயம் என்றைக்கு உணர்ந்து கொள்ளப் போகிறது. குறிப்பாக மாணவர்கள் ஊடகங்களின் தாக்கத்தால் வாசிப்புப் பழக்கத்தையும் இழந்திருக்கின்றனர். முடிந்தால் புத்தகம் படிப்பதன் அவசியத்தை மாணவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள் என்பார் ஆபிரகாம் லிங்கன். ஆனால், நாம் புத்தகம் வாசிப்பதையே குறைத்துக் கொண்டு வருகிறோம். கல்லூரியில் படிக்கிறபோது நூலகத்தைச் சரியாகப் பயன்படுத்தியவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

மார்க்சியம் என்கிற கருத்தியலை உலகிற்கு அறிமுகம் செய்த தோழர் கார்ல் மார்க்சின் பென்சில் கோடு இல்லாத நூல்களே நூலகத்தில் இல்லை என்று அவரின் வாசிப்புப் பழக்கத்தைப் பற்றிக் குறிப்பிடுவர். அத்தகைய ஒருவரால்தான் உலகமே வியந்து பாராட்டக்கூடிய மூலதனம்(டாஸ்கேபிடல்) என்ற பொருளாதார கோட்பாட்டு நூலை எழுதமுடிந்திருக்கிறது. புத்தகம் படிக்கிற பழக்கமும் அனுபவமும் மனித மனத்தைப் பக்குவப்படுத்தும் என்பது அனுபவசாலிகளின் கருத்தாகும்.

பொருளாதாரச் சிக்கலோடு கல்லூரிக்குள் நுழைகிற மாணவர்கள் உலகத்திலேயே நாம்தான் துன்பத்தின் உச்சியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று கருதுகிறார்கள். இது தவறான எண்ணம். தோல்வி மட்டுமே மனிதனைச் செம்மைப்படுத்துகிறது. ஒரு வெற்றிக்குப் பின்னால் யாராவது ஒரு ஆணோ, பெண்ணோ மறைந்திருப்பார்கள். ஆனால், ஒரு தோல்விக்குப் பின்னால் ஆயிரம் அனுபவங்கள் மனித நினைவுகளில் ஊசலாடிக் கொண்டிருக்கும். எல்லா தனிமனிதர்களும், வாழ்வின் மீதான கோபத்தையும் துயரங்களையும் சுமந்து கொண்டுதான் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.

எத்தனையோ இளைஞர்கள் கல்லூரிக்குள் நுழைகிற வாய்ப்புக் கிடைக்காமல் கல்வியை இழந்து கூலித் தொழிலாளர்களாகத் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர். வாய்ப்புக் கிடைத்தும் தவற விடுகிற அவலம் தினந்தினம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

மாணவப்பருவத்தில் நல்ல நண்பர்களுக்கும் உரிய இடமுண்டு. உங்களுடைய வளர்ச்சிக்கு எவன் தூண்டு கோலாக இருந்து அதில் கிடைக்கும் வெற்றியில் மகிழ்ச்சியடைகிறானோ அவனே உண்மையான நண்பன். எதிர்பார்த்துப் பழகுவது நட்பல்ல. இன்றைய மாணவர்கள் காதல், அன்பு, நட்பு, பாசம் என்கிற வார்த்தை ஜாலங்களுக்குள் இருக்கிற உணர்வுகளைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியாமல் குழம்பித் தவிக்கிறார்கள்.

வீட்டில் சரியான அன்பு கிடைக்காத போதுதான் மாணவ, மாணவிகள் வெளியில் அன்புக்காக ஏங்குவார்கள். ஒரு ஆணோ, பெண்ணோ உதவி செய்ய முன் வந்தால் அதைத் தவறாகப் புரிந்து கொள்ளும் பழக்கம் காலங்காலமாக நம்மிடையே இருந்து வருகிறது. தாய், தந்தை, சகோதர, சகோதரிகளுடன் உண்மையாகப் பழகுகிறபோது, அவர்களுடைய அன்பு உங்களுக்கு மிகப் பெரியதாகத் தோன்றும். அவர்களை விட்டுப் பிரிய நேரிடுகிறபோது மற்றவருடைய எதார்த்தத்திற்கு மீறிய அன்பு காதலாகத்தான் தெரியும். கல்லூரியில் படிக்கிறபோது ஆண், பெண் மீது வரக்கூடிய ஈர்ப்பு (இனக்கவர்ச்சி) இயல்பானதுதான்.

மனம் பக்குவமடையாத காலமது. அதைத் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது. ஆண், பெண் சேர்ந்து பொது இடத்திலோ தனியிடத்திலோ இயல்பாகப் பேசிக் கொண்டிருந்தாலே தவறாகப் புரிந்து கொள்ளும் சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை மறந்து விடக்கூடாது. அவர்கள் சகோதர, சகோதரிகளாகவோ நல்ல நண்பர்களாகவோ இருக்கலாம். ஆனால் நம் மனம் புனைவுகளைத் தேடிச் செல்கிறது. இருபாலரையும் உண்மையாக நேசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் தவறில்லை. படிக்கிற காலகட்டத்தில் நிறைய நூல்களைப் படித்து உலகறிவையும் நல்ல அனுபவங்களையும் சேமிக்க வேண்டும்.

ஒவ்வொரு மாணவனும் தனது கடமையை உணர்ந்தும் குடும்பச் சூழ்நிலையைப் புரிந்து கொண்டும் படிக்கிறபோது தன்னைச் சுற்றி நடக்கும் தேவையில்லாத விசயங்களில் மனம் கவனத்தைச் செலுத்தாது. பந்தயக் குதிரையைப் போல இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருக்க முடியும் என்ற புரிதல் வேண்டும். தனக்கான திசையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியாமல் இவர்கள் எதை நோக்கிப் பயணிக்கிறார்கள் என்பது புதிராகத்தான் இருக்கிறது.


ஆரோக்கியமான சமுதாயம் உருவாவதற்கு சமூகத்தின் மீதான பேரன்பும் மனித நேசித்தலைச் சுவாசமாகக் கொண்ட மாணவர்களும் தேவை. இன்றைய சூழ்நிலையில் படித்தவர்கள்தான் எல்லாத் தவறுகளையும் செய்கிறார்கள், சாதி, மதம் பார்க்கிறார்கள் சக மனிதர்களை நேசிக்க மறுக்கிறார்கள் என்ற கருத்தும் நிலவி வருகிறது. படித்தவன் சூதுவாதும் பண்ணினால் போவான் போவான் ஐயோவென்று போவான் என்பான் பாரதி. தற்போது படித்துக் கொண்டிருக்கிற நீங்கள்தான் பின்பு படித்தவர்களாகப் போகிறீர்கள் என்பதை உணர்ந்து அக்குற்றச்சாட்டை மாற்ற முயற்சியுங்கள். ஒப்பில்லாத மாணவச் சமுதாயம் உலகத்திற்கு ஒரு புதுமையாக இருக்கட்டும்.

வாழ்த்துக்கள்.

“இளவேனிற் காலத்தில்
நூறு நூறு மலர்கள்
இலையுதிர் காலத்தில்
அறுவடை நிலா
கோடை காலத்தில்
நறுமணத் தென்றல்
குளிர் காலத்தில்
வெண்பனி தொடரும்
உன் மனதில் உதவாக்கரை விசயங்கள்
கொட்டிக் கிடக்கவில்லையென்றால்
எல்லாப் பருவங்களும்
நல்ல பருவங்களே, உனக்கு!

- ஜென் கவிதை.

Saturday, September 11, 2010

மிகச்சிறந்த மலையாளத் திரைப்படங்கள்

எழுத்தாளர் ஜெயமோகனால் பரிந்துரைக்கப்பட்ட மலையாளத் திரைப்படங்கள்

மலையாள சினிமாவைப்பற்றிய கட்டுரைக்கு எதிர்வினையாக வந்த கடிதங்களில் ஏராளமானவரக்ள் நல்ல மலையாள படங்களின் பட்டியலைக் கேட்டு எழுதியிருந்தார்கள்.

இப்போது
மோசர் பேயர் மற்றும் ஷைனா வீடியோஸ் [சென்னை] போன்ற நிறுவனங்கள் மலையாளப் படங்களை எல்லாமே குறுவட்டில் கொண்டு வந்திருப்பதனால் படங்களை வாங்குவதும் பார்ப்பதும் எளிது. ஆகவே என் சொந்த ரசனையின்படி ஒரு பட்டியலை அளிக்கிறேன். தரமான பொழுதுப்போக்குத்தன்மை, சமூக விமரிசனத்தன்மை உணர்ச்சிகரத்தன்மை ஆகியவற்றை நான் அளவுகோலாகக் கொண்டிருக்கிறேன்.
இவற்றை திரும்பிப் பார்க்கும்போது மலையாளப்படங்களில் முக்கியமான திரைக்கதை எழுத்தாளர்களின் பங்களிப்பு பிரமிக்கச் செய்வதாக இருப்பதைக் காண்கிறேன். முக்கியமாக எம்.டி.வாசுதேவன் நாயர். மலையால திரையுலகின் முதல் நாயகன் அவரே. அரை நூற்றாண்டுக்காலமாக அவர் மலையாளத்தில் மிக வலுவான கதைகளை உருவாக்கிக் கொண்டே இருந்திருக்கிறார். அவை காலம்கடந்தும் ரசனையில் வாழ்கின்றன. மலையாள திரை ரசனையையே அவர் வடிவமைத்தார் என்று சொல்லலாம்.

மலையாள சினிமா என்பது கேரள இடதுசாரி இயக்கத்தின் உருவாக்கம் என்று தயங்காமல் சொல்லலாம். கம்யூனிஸ்டுகள் சினிமாவை கையில் எடுத்துக் கொண்டதனாலேயே திரை ரசனை வளர்ந்தது. இயக்குநர்கள் பி.பாஸ்கரன், எழுத்தாளர் தகழி, பஷீ£ர், தோப்பில் பாஸி, ஷெரீ·ப், உறூப், டி தாமோதரன்,இசையமைப்பாளர் எம்.பி.ஸ்ரீனிவாசன், தேவராஜன்,பாபுராஜ், பாடலாசிரியர்கள் வயலார் ராமவர்மா போன்ற ஆரம்பகால திரைப் படைப்பாளிகள் அனைவருமே இடதுசாரிகள்தான். எம்.டி.வாசுதேவன் நாயரும் இடதுசாரி இயக்கத்திலிருந்து வந்தவரே.

இடதுசாரி இயக்கம் ஐம்பதுகளில் கிராமங்களிலேயே ரசனையையும் வாசிப்பையும் உருவாக்கியது. கிராமப்புற நூலகங்கள் பல்லாயிரக்கணக்கில் தொடங்கபப்ட்டன. அங்கே கலைக்குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டன. அவை பயில்முறை நாடகங்களை உருவாக்கின. அந்நாடகங்களில் பெரிய படைப்பாளிகள் பங்கு கொண்டார்கள். டி.தாமோதரன்,ஷெரீ·ப், உறூப்,பி.பாஸ்கரன், வயலார், தேவராஜன் எல்லாமே அங்கிருந்து சினிமாவுக்கு வந்தவர்களே. இவ்வாரு கேரள மக்களின் ரசனையில் ஏற்பட்ட ஒரு பெரும் மாற்ரமே எழுபதுகளில் சினிமாவில் வளர்ச்சிகொண்டது.

மலையாள சினிமாவின் தொடக்கம் முதல் உறூப், தகழி, பஷீர் போன்ற எழுத்தாளர்கள் எழுதியிருக்கிறார்கள். ஆனால்தொண்ணூறுகளுக்குப் பின் திரையில் சாதனை படைத்த எழுத்தாளர்கள் எவரும் இல்லை. இலக்கியம் அறிந்த திரை எழுத்தாளர் என்ற இடம் ஸ்ரீனிவாசன், லோகித் தாஸ¤க்குப் பின்னர் காலியாகவே இருக்கிறது.
***

ராமுகாரியட்
செம்மீன் [தகழி]
முடியனாய புத்ரன்

பி.பாஸ்கரன்
ராரிச்சன் எந்ந பௌரன்
மூலதனம் [டி.தாமோதரன்]
கள்ளிசெல்லம்மா [ஜி.விவேகானந்தன்]
நீலக்குயில் [ உறூப்]
உம்மாச்சு [உறூப்]
இருட்டின்றே ஆத்மாவு [எம்.டி.வாசுதேவன்நாயர்]

கெ.எஸ்.சேதுமாதவன்
அடிமகள் [தகழி]
சட்டக்காரி [பம்மன்]
துலாபாரம் [கெ.பி.கொட்டாரக்கரா]
ஓடயில்நிந்நு [பி.கேசவதேவ்]
அனுபவங்ஙள் பாளிச்சகள் [தகழி]
நட்சத்ரங்ஙளே காவல் [பி.பத்மராஜன்]
ஒருபெண்ணின்றே கத[என்.மோகனன்]
கரகாணாக்கடல் [முட்டத்து வர்க்கி]
தேவி[பி சுரேந்திரன்]
நீலத்தாமர [எம்.டி.வாசுதேவன்நாயர்]
வாரிக்குழி [எம்.டி.வாசுதேவன்நாயர்]
அசுரவித்து [எம்.டி.வாசுதேவன்நாயர்]
ஓப்போள் [எம்.டி.வாசுதேவன்நாயர்]
முறப்பெண்ணு [[எம்.டி.வாசுதேவன்நாயர்]]

என்.என் பிஷாரடி
நிணமணிஞ்ஞ கால்பாடுகள் [பாறப்புறத்து]

.வின்செண்ட்
அஸ்வமேதம் [தோப்பில் பாசி]

திரிவேணி
பார்கவிநிலையம் [பஷீர்]
யட்சி [மலையாற்றூர் ராமகிருஷ்ணன்]

ஹரிஹரன்
அமிர்தம்கமய[எம்.டி.வாசுதேவன்நாயர்]
ஒரு வடக்கன் வீரகதா[எம்.டி.வாசுதேவன்நாயர்]
பஞ்சாக்னி [எம்.டி.வாசுதேவன்நாயர்]
நகக்ஷதங்ஙள் [எம்.டி.வாசுதேவன்நாயர்]
எந்நு ஸ்வந்தம் ஜானகிக்குட்டி எம்.டி.வாசுதேவன்நாயர்]
பரிணயம்[எம்.டி.வாசுதேவன்நாயர்]

பி.என் மேனோன்
குட்டியேடத்தி [எம்.டி.வாசுதேவன்நாயர்]
ஓளவும் தீரமும் [எம்.டி.வாசுதேவன்நாயர்]
காயத்ரி [சி.ராதாகிருஷணன்]

எம்.டி.வாசுதேவன் நாயர்
நிர்மால்யம்
மஞ்š
கடவு

பவித்ரன்
உத்தரம் [எம்.டி.வாசுதேவன்நாயர்]
உப்பு

தோப்பில்பாஸி
சரசய்யா
நிங்கள் என்னெ கம்யூனிஸ்டாக்கி

.வி.சசி
உத்சவம் [ஷெரீ·ப்]
இனியும் புழ ஒழுகும்
ஆறாட்டு
திருஷ்ண
ஈநாடு[டி.தாமோதரன்]
ஆரூடம்[எம்.டி.வாசுதேவன்நாயர்]
ஆவநாழி[டி.தாமோதரன்]
மிருகய[லோகித்தாஸ்]
கரும்பின் பூவின் அக்கரே [பி.பத்மராஜன்]
இதா இவிடவரே [பி.பத்மராஜன்]
அவளுடே ராவுகள் [ஷெரீ·ப்]
ஆள்கூட்டத்தில்தனியே [எம்.டி.வாசுதேவன்நாயர்]
அபிநந்தனம் [ஷெரீ·ப்]
ஈற்றா[ஷெரீ·ப்]
இடவழியிலே பூச்ச மிண்டாபூச்ச [எம்.டி.வாசுதேவன்நாயர்]
சதனம் [எம்.டி.வாசுதேவன்நாயர்]
சுகுருதம்[எம்.டி.வாசுதேவன்நாயர்]
தேவாசுரம்[ரஞ்சித்]

பரதன்
பிரயாணம் [பி.பத்மராஜன்]
லோறி[[பி.பத்மராஜன்]
சாட்ட[பி.ஆர் நாதன்]
ஓர்மைக்காய் [ஜான் போல்]
தகர [பி.பத்மராஜன்]
ரதிநிர்வேதம் [பி.பத்மராஜன்]
காதோடுகாதோரம்[ ஜான் போல்]
சாமரம்[ஜான்போல்]
ஒரு மின்னாமினுங்ஙின்றே நுறுங்ஙு வெட்டம் [ ஜான் போல்]
வெங்கலம்[லோகித்தாஸ்]
வைசாலி [எம்.டி.வாசுதேவன்நாயர்]
தாழ்வாரம் [எம்.டி.வாசுதேவன்நாயர்]
அமரம் [எம்.டி.வாசுதேவன்நாயர்]

பி.பத்மராஜன்
தேசாடனபட்சி கரயாறில்ல
தூவானத்தும்பிகள்
கள்ளன் பவித்ரன்
ஒரிடத்தொரு பயில்வான்

அபரன்
அரப்பட்ட கெட்டிய கிராமத்தில்
நமுக்கு பார்க்கான் முந்திரி தோப்புகள்
நொம்பரத்திப்பூவு
பெருவழியம்பலம்
மூநாம்பக்கம்

மோகன்
சாலினி என்றெ கூட்டுகாரி [பி.பத்மராஜன்]
இடவேள [பி.பத்மராஜன்]
முகம்
தீர்த்தம்
விடபறயும் மும்பே

ஜோஷி
தினராத்ரங்ஙள் [ஜான் போல்]
நிறக்கூட்டு [ஜான் போல்]
சியாம [ஜான் போல்]கௌரவர் [லோகித் தாஸ்]

கெ.ஜி.ஜார்ஜ்
உள்கடல்
யவனிக
ஆதாமிண்டே வாரியெல்லு
இரகள்
மேள
ஈகண்ணிகூடி
மற்றொராள்

அடூர் கோபாலகிருஷ்ணன்
சுயம்வரம்
எலிப்பத்தாயம்
கொடியேற்றம்
முகாமுகம்
மதிலுகள்

நெடுமுடிவேணு
பூரம்

பாசில்
மஞ்ஞில் விரிஞ்ஞ பூக்கள்
என்றே மாமாட்டிக்குட்டியம்மைக்கு
மணிச்சித்ரத்தாழ்

அரவிந்தன்
ஒரிடத்து
சிதம்பரம்
தம்பு

சிபி மலையில்
தனியாவர்த்தனம் [லோகித தாஸ்]
கிரீடம் [லோகித தாஸ்]
செங்கோல்[லோகித தாஸ்]
கமலதளம்[லோகித தாஸ்]
பரதம்[லோகித தாஸ்]
சதயம் [எம்.டி.வாசுதேவன்நாயர்]

சத்யன் அந்திக்காடு
டி.பி.பாலகோபாலன் எம்.ஏ [ஸ்ரீனிவாசன்]
ஸ்ரீதரன்றே ஒநாம் திருமுறிவு [ஸ்ரீனிவாசன்]
பொன்முட்டயிடுந்ந தாறாவு [ஸ்ரீனிவாசன்]
சந்தேசம் [ஸ்ரீனிவாசன்]
மழவில்காவடி[ஸ்ரீனிவாசன்]
வரவேல்பு[ஸ்ரீனிவாசன்]
சன்மனசுள்ளவர்க்கு சமாதானம்[ஸ்ரீனிவாசன்]
மிதுனம்[ஸ்ரீனிவாசன்]

ஷாஜி என் கருண்
பிறவி

லெனின் ராஜேந்திரன்
மீனமாசத்திலே சூரியன்
வேனல்
சுவாதிதிருநாள்

யு.கெ.குமாரன்
இனியும் மரிச்சிட்டில்லாத்த நம்மள்
அதிதி

பி..பக்கர்
சாப்ப
மணிமுழக்கம்

அஜயன்
பெருந்தச்சன்[எம்.டி.வாசுதேவன்நாயர்]

பாலுமகேந்திரா
ஓளங்ஙள்
யாத்ரா

பாலசந்திரமேனோன்
மணியன்பிள்ள அதவா மணியன் பிள்ள
அச்சுவேட்டன்றே வீடு

லோகித் தாஸ்
பூதக்கண்ணாடி
சூத்ரதாரன்

டி.வி,சந்திரன்
டானி

கமல்
கைக்குடந்ந நிலாவு
பெருவண்ணாபுரத்தே விஸேஷங்கள்
மிழிநீர்பூவுகள்
கிருஷ்ணகுடியில் ஒருபிரணைய காலத்து
தூவல் கொட்டாரம்[லோகித் தாஸ்]

ஸ்ரீனிவாசன்
வடக்குநோக்கி யந்த்ரம்
சிந்தாவிஷ்டயாய சியாமளா

கெ.சுகுமாரன்
பாதமுத்ர

சியாமபிரசாத்
அக்னிசாட்சி

ஜெயராஜ்
வித்யாரம்பம் [ஸ்ரீனிவசன்]
குடும்பசமேதம்
தேசாடனம் [மாடம்பு குஞ்சுகுட்டன்]
களியாட்டம்[மாடம்பு குஞ்சுகுட்டன்]

Monday, August 30, 2010

திணை மயக்கம் - மீள்பார்வை

திணை மயக்கம் - மீள்பார்வை

தொல்காப்பிய பொருளதிகாரம் தமிழ் இலக்கியக் கொள்கைகளையும் அதன் பிற சிறப்புக்கூறுகளையும் ஆராய்ந்து அறிவதற்கு ஒரு சிறந்த இலக்கண நூலாகத் திகழ்கிறது. உலகில் உள்ள எல்லா மொழிகளிலும் அம்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள மக்களின் நாகரிகத்தைக் காட்டும் பொருள் இலக்கணம் இல்லை. அந்த பொருள் இலக்கணத்தைக் கொண்டிருப்பது தமிழ்மொழியின் தனிச்சிறப்பாகும். பொருளதிகாரத்தின் ஒன்பது இயல்களுள் முதலாவதாகப் பகுக்கப்பட்ட அகத்திணையியலில் நூற்பாக்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ள திணைமயக்கம் பற்றி ஆராயும் நோக்கில் இக்கட்டுரை அமைகிறது.

திணையும் - பொருளும்
திணை என்பதனை இளம்பூரணர் பொருள் மற்றும் இடம் என அர்த்தப்படுத்துகிறார். நச்சினார்க்கினியர் திணை என்பதை ஒழுக்கம் என்கிறார். மேலும், தமிழ்ச்சான்றோர்கள் திணையினை அகத்திணை,புறத்திணை என்று இருவகையாகப் பிரித்துக் காட்டுவர். அகப்பொருள் பற்றிய இலக்கணத்தை வரையறுத்துக் கூறும் தொல்காப்பியர்.
“ கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்
முற்படக் கிளந்த எழுதிணை என்ப”
(தொல்.அகத்.நூ.947)
என்கிறார். கைக்கிளை, நடுவண் ஐந்திணை, பெருந்திணை என்பனவற்றுள் நடுவண் ஐந்திணையை மட்டும் மூன்று பொருள்களாகப் பிரித்துக்காட்டுவர். தொல்காப்பியர் உலகிலுள்ள பொருள்களை முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்று வகைப்படுத்தி,
“ முதல்கரு உரிப்பொருள் என்ற மூன்றே
நுவலுங்காலை முறை சிறந்தனவே
பாடலுட் பயின்றவை நாடுங்காலை”
(தொல்.அகத்.நூ.949)
என இலக்கணப்படுத்துகிறார்.

திணைமயக்கம்
திணைமயக்கம் என்பது ஒரு திணைக்குரிய முதல், கரு, உரிப்பொருள் மூன்றும் தமக்குரிய திணையில் மட்டும் வருவதல்லாமல் பிற திணையிலும் மயங்கி வருவதாகும்.
தொல்காப்பியர் பொருளதிகார அகத்திணையியலில் திணைமயக்கம் பற்றி,
“திணைமயக் குறுதலுங் கடிநிலை இலவே
நிலன் மயங்குதல் இல்லென மொழிப
புலனன் குணர்ந்த புலமையோரே”
(தொல்.அகத்.நூ.958)
“எந்நிலம் மருங்கிற் பூவும் புள்ளும்
அந்நிலம் பொழுதொடு வாராயினும்
வந்த நிலத்தின் பயத்தவாகும்”
(தொல்.அகத்.நூ.965)
“உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே”
(தொல்.அகத்.நூ.959)
என்னும் மூன்று சூத்திரங்களின் வழி குறிப்பிடுகிறார். திணைமயக்கம் பற்றி உரையாசிரியர்களுக்குள்ளும் (பிற சான்றோர்களிடமும்) கருத்து வேறுபாடுகள் நிகழ்ந்திருக்கின்றன.

இளம்பூரணர்

திணைமயக்கம் பற்றி இளம்பூரணர், ஒரு திணைக்குரிய முதற்பொருள், மற்றொரு திணைக்குரிய முதற்பொருளுடன் மயங்கிவரும் என்றும் ஆனால் நிலம் வேறொருதிணையில் மயங்காது என்றும் முதற்பொருளில் காலம் மயங்கும் என்றும் குறிப்பிடுவார்.
உரிப்பொருள் தவிர்த்து முதற்பொருளும் கருப்பொருளும் பிற திணைகளோடு மயங்கிவரும் என்பார். விதிவிலக்காகப் பெரும்பான்மை மயங்காமையும் வரும் எனச் சுட்டுவார்.
முதற்பொருளில் காலம் மயங்கும் எனவும் கருப்பொருளில் பூவும் புள்ளுமாகிய பறவையும் பிற திணையில் மயங்கியும் மயங்காமையும் வரும் என்றும் இவ்வாறு கருப்பொருள் மயங்கிவருவது திணைமயக்கம் அன்று என்று ஆனால், உரிப்பொருள் மயங்கி வருதல் இல்லை. உரிப்பொருள் மயங்கிவருதல் கலி முதலாகிய சான்றோர் செய்யுள்களில் கண்டுகொள்க என இளம்பூரணர் குறிப்பிடுவது சற்று முரணாக உள்ளது.
“ ஒண்செங் கழுநீர் கண்போல் ஆயிதழ்
ஊ போகிய சூழ்செய் மாலையன்
பக்கம் சேர்த்திய செச்சைக் கண்ணியன்
குயமண் டாகம் செஞ்சாந்து நீவி”
(அகநானூறு.பாடல்.48)
என்ற பாடலில் மருதநிலத்திற்குக் கருப்பொருளாகிய கழுநீரும், குறிஞ்சிக்குரிய வெட்சிப்பூவை அணிந்த தலைவன் என்று பதிவு செய்யப்பட்டுள்ளதால் கருப்பொருள் மயங்கிவந்துள்ளதை அறியலாம்.

நச்சினார்க்கினியர்

ஒரு நிலத்தின்கண் இரண்டு உரிப்பொருள் மயங்கிவரும் என்றும் நிலம் இரண்டு மயங்காது காலம் இரண்டும் மயங்கிவரும் என்று குறிப்பிடுவார்.
‘திணை மயக்குறுதல் கடிநிலை இலவே’ என்பதில் திணை என்பது மூன்று பொருளையும் குறித்தே வரும் என்பதால் முதல், கரு, உரிப்பொருள் பிற நிலத்திலும் மயங்கி வரும் என்பார்.
எழுதிணை நிகழ்ச்சியாகிய நால்வகை நிலத்தும் பயின்று வந்த பூவும், பறவையும் தத்தமக்கு உரியனவாகக் கூறிய நிலத்தொடும் காலத்தொடும் நடவாமற் பிற நிலத்தொடுங் காலத்தொடும் நடப்பினும் அவை வந்தநிலத்திற்குக் கருப்பொருளாம்.வினைசெய் இடத்தின் நிலத்தின் என்பதனால் நிலத்தின் பயத்தவாமெனப் பொழுதினையும் நிலமென்றே கூறுகிறார்.
உரிப்பொருள் அல்லன என்பதை உரிப்பொருள் என்று சொல்லப்பெறும் ஐந்திணையும், உரிப்பொருள் அல்லாத கைக்கிளையும் பெருந்திணையும் நான்கு நிலத்தும் மயங்கிவரும் என்றும் இந்நிலத்தின் இவ்வொழுக்கம் என வரையறுப்பது நாடகவழக்கின் பாற்படும் என்பார். மேலும், உரிப்பொருளாக மாறிவந்த பாலையும் நால்வகை நிலத்தின் கண்ணும் மயங்கிவரும் என்றும் கூறுவார். இன்றும் பிற சான்றோர் செய்யுள்களுள் உரிப்பொருள் மயங்கியும் காலம் மயங்கியும் வரும் என்பார். நச்சினார்க்கினியர் உரை வகுக்கிறபோது சூத்திரத்திற்குப் பொருத்தமான சங்கப்பாடல்களையே உதாரணப்படுத்துகிறார்.
“ மாமேலே னென்று மடல்புணையா நீந்துவேன்
தேமொழி மாத ருறாஅ துறீஇய
காமக் கடலகப் பட்டு”
(கலித்தொகை.செய்.136)
என்ற நெய்தல் நிலப்பாடலில் பெருந்திணைக்குரிய மடலேறுதல் என்ற ஒழுக்கமுறைமை பயின்று வந்துள்ளதை அறியலாம்.

நம்பியகப்பொருள்

தொல்காப்பியப் பொருளதிகாரத்தை மூலநூலாகக் கொண்டு பிற்காலத்து எழுந்த இலக்கண நூல்கள் சிலவற்றுள் நம்பியகப்பொருள் ஒன்று. நம்பியகப்பொருள் இயற்கைப்புணர்ச்சியில் தொடங்கி திணைமயக்கத்தில் முடிவடைகிறது. இவ்விலக்கண நூல்,
“முத்திறப் பொருளும் தத்தம் திணையொடு
மரபின் வாராது மயங்கலும் உரிய”
(நம்பியகப்பொருள்.பொது.நூ.251)
என முதல்,கரு,உரிப்பொருள் மூன்றும் தன்நிலத்தில் திணையோடு கூடிய இலக்கண முறைப்படி வாராமல் பிறதிணையோடு மயங்கியும் வரும் என்று திணைமயக்கம் பற்றிக் குறிப்பிடுகிறது.
“அஃது என்னையெனின் பெரும்பொருளகத்து உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே என்பதனாலும் உரிப்பொருள் சூத்திரத்துள் தேருங்காலை என்று குறிப்பிடுவதால் உரிப்பொருளும் மயங்கும்” என நம்பியகப்பொருள் குறிப்பிடுகிறது.
இந்நூலில் திணைமயக்கம் பற்றிய நூற்பாவிற்குச் சான்றாக உரிப்பொருள் மயங்கி வந்த பாடல்கள் நிறைய தரப்படுகின்றன.

திணைமயக்கம் பற்றிய பிற கருத்துகள்

உரிப்பொருள் என்பது ஐந்து திணைகளுக்கும் உரிமையான பொருள் ஆகும். முதற்பொருளைக் காட்டிலும் கருப்பொருள் சிறந்தது. கருப்பொருளைக் காட்டிலும் உரிப்பொருள் சிறந்ததென்பதை,
“முதல்கரு உரிப்பொருள் என்ற மூன்றே
நுவலுங்காலை முறைசிறந் தனவே
பாடலுட் பயின்றவை நாடுங்காலை”
(தொல்.அகத்.நூ.949)
என்ற அகத்திணையியல் நூற்பா தௌ்ளத் தெளிவாகப் புலப்படுத்துகிறது.
“அன்றில் ஒரு தரம் கத்தும்பொழுது பொறாள் என் ஒரு வல்லியே” என்ற வரிகளின் மூலமாகப் பறவைகளுக்கும் உரிப்பொருள் உண்டு என உணரமுடிகிறது. பெண் அன்றில் ஒருமுறை கத்தியும் ஆண் அன்றில் வரவில்லை என்றால் இறந்துபடும் எனப் பாலைத்திணையின் பிரிதல் ஒழுக்கத்தினைச் சுட்டுவதால் உரிப்பொருளின் முக்கியத்துவத்தை உணரமுடிகிறது. ஆகவே, உரிப்பொருளைக் கொண்டே அத்திணையினை நன்றாகப் புரிந்து கொள்ளமுடியும் என்ற கருத்து நிலவுகிறது.
“முதலொடு புணர்ந்த யாழோர் மேன
தவலருஞ் சிறப்பின் ஐந்நிலம் பெறுமே”
(தொல்.கள.நூ.1052)
என்ற களவியல் நூற்பாவிற்கு உரைவகுத்த உரையாசிரியர்கள் பெருத்த வேறுபாடுகளுடன் உரை எழுதியுள்ளனர். இந்நூற்பாவிற்கான நேருரை, நிலமும் பொழுதுமாகிய முதற்பொருளோடு பொருந்திய களவு மணம், கெடுதல் இல்லாத சிறப்புடைய ஐந்து நிலங்களிலும் பயின்று வரும் என்பதாகும். எனவே,யாழோர் மேன,குறிஞ்சி,களவுமணம் என்பது ஒரு பொருளைத் தந்து நிற்கும்.
குறிஞ்சிக்குரிய புணர்தல் மற்ற நான்கு நிலங்களிலும் நிகழும். இளம்பூரணர் அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கில் ‘காமக்கூட்டம்’ என்றதனால் எல்லா நிலத்தும் காமக்கூட்டம் நிகழப்பெறும் எனத் தெளிவாகப் பதிவு செய்கிறார்.
திணைமயக்கத்தில் முதற்பொருளாகிய நிலம் மட்டும் மயங்காது மற்ற பொழுது, கரு, உரி ஆகிய மூன்றும் எந்த நிலத்துக்கும் மயங்கும் ‘நிலனொருங்கு மயங்குதல் இன்றென மொழிப’ என்ற நூற்பாவில் ‘மொழிப’ எனப் பிறர் மேல் வைத்துச் சொன்னதன் காரணமாக நிலங்கள் மயங்குவது உண்டு என்பது தொல்காப்பிய கருத்துமாகும்.
“நாடா கொன்றோ காடா கொன்றோ
ஆவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர; ஆடவர்;
அவ்வழி நல்லை வாழிய நிலனே”
(புறநானூறு.பாடல்.187 )
என்ற புறநானூற்றுப் பாடல் நாடும், காடும், குழியும், மேடும் ஆக நடந்து நடந்து சென்று அந்நிலம் மயங்கி மாற்றமடைந்த தன்மையை ஔவையார் தனது பயண அனுபவத்தின் வழி கவிதையாக வெளிப்படுத்துகிறார். ஆகவே, உரிப்பொருள் முழுவதுமாக மயங்கும், கருப்பொருள் பெரும்பான்மையும் நிலம் சிறுபான்மையும் மயங்கும் என அறிந்து கொள்ள முடிகிறது.
“இலக்கியத்தில் தலையாய கவிதை தோன்றும் பொழுது சிலநேரங்களில் இலக்கணக் கட்டுபாடுகளை மீறியும் கவிதைகள் வெளிவரலாயிற்று. இதனை, நன்கு தெரிந்த தமிழர், தன் மரபை மாற்றிக்கொள்ளத் துணிந்து, அங்ஙனமே மாற்றிக்கொண்டான். மரபு என்பதே சான்றோர் செய்த ஒன்றுதானோ அவர்களாகப் பார்த்து அதைமாற்றினால் அதனால் நேரும் இழுக்கு ஒன்றும் இல்லையன்றோ”
“கவிதை ஆக்கும் கலைஞனை விடச் சிறந்தோர் யார் இருக்க இயலும் கவிதையை ஆக்கவும் அழிக்கவும்? எனவே, நாளாவட்டத்தில் ஒரு திணைப்பொருளை மற்றொரு திணையில் கூறும் இயல்பு தோன்றியவுடன் ‘திணை மயக்கம்’ என்ற ஒன்றை மனிதன் வகுத்தான் எனவும் இம்முறையில் இலக்கணமும் ‘உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே’ என்று வரையறை செய்தது” என அ.ச.ஞானசம்பந்தன் குறிப்பிடுவார். ஐந்திணை ஒழுக்கம் சிறப்புரிமை பெற்ற நிலத்தில் நிகழ்வதே சிறப்பு. இதனையே, இளம்பூரணரும் எல்லா நிலத்தும் எல்லா ஒழுக்கமும் நிகழுமாயினும் இந்நிலத்து இவ்வொழுக்கமே நிகழும் எனக்கூறுவது சிறப்பு என்கிறார்.
மூன்று பொருள்களும் பிறநிலத்து மயங்கி வருதலும் உண்டு இதனால் குற்றமில்லை. புலனெறி வழக்கின்படி ஒழுக்கம் சிறப்பு நிலையில் இருந்து பொதுநிலைக்கு வருதல் சிறப்பு கருதியே ஆகும். எனவே, நிலம் நிலையானது. பொழுது பொதுவானது. ஒழுக்கம் இயங்கும் தன்மையுடையது. கருப்பொருளும் நிலம் பொழுதுக்கேற்ப இயைந்து வருவதும் சிறப்பாகும் என்று காப்பியர் நெறி என்னும் நூல் விளக்கும்.


நிறைவுரை

திணைபற்றியும் திணைமயக்கம் பற்றியும் உரையாசிரியர்கள் பலர் கருத்து வேறுபாடுடன் உரை எழுதியுள்ளனர். தொல்காப்பியர் சூத்திரம் மட்டுமே எழுதி வைத்தாரொழிய உரை எழுதவில்லை. தொல்காப்பியர் வாழ்ந்த காலகட்டத்தில் உரைகள் தேவையில்லாமல் இருந்திருக்கலாம். ஒரு தலைமுறை மாற்றம் ஏற்படுகிறபோது இலக்கிய வடிவங்களும் கருத்தியலும் சிந்தனையும் மாறுவதுபோல் உரை எழுதும் வழக்கமும் பிற்காலத்தில் ஏற்பட்டிருக்கலாம். பிற்காலத்துத் தோன்றிய உரையாசிரியர்கள் தங்கள் காலத்து வழக்குகளை மையமாகக் கொண்டு உரை வகுத்திருக்கின்றனர்.
ஒரு நிலத்தில் உள்ள சிறப்புப்பொருளாகிய உரிப்பொருள் மயங்குவது மரபாகாது என்று இளம்பூரணரும் சிறுபான்மை மயங்குவதால் குற்றமில்லை என நச்சினார்க்கினியரும் குறிப்பிடுவர். இளம்பூரணர், நச்சினார்க்கினியர் மட்டுமல்லாது பிற உரையாசிரியர்கள் திணைமயக்கம் பற்றி வெளிப்படுத்தியக் கருத்துக்களை ஆய்விற்கு உட்படுத்த வேண்டும்.
தொல்காப்பியர் ‘இலக்கியம் கண்டதற்கு இலக்கணம்’ எனக் குறிப்பிடுகிறார். இக்கருத்தியல் அவர் காலத்தில் நிலவிய இலக்கியங்களுக்கா? அல்லது பிற்காலத்துத் தோன்றிய இலக்கியங்களுக்கா? என்ற கேள்வி எழுகிறது. ஏனென்றால் பெரும்பான்மையான சங்கப்பாடல்களில் முதல், கரு, உரிப்பொருள்கள் பிறநிலத்து மயங்கிவந்து இலக்கணப் பிறழ்ச்சியுடன் காணப்படுகின்றன. தொல்காப்பிய இலக்கண, இலக்கியக் கொள்கைகளைச் சங்கப்பாடல்களுடன் ஒப்பிடும்போது சில பாடல்கள் பொருந்தியும், பொருந்தாமையும் அமைந்திருக்கின்றன. இவ்வாறு, இலக்கண, இலக்கியக் கொள்கைகளுக்குக் கட்டுக்கடங்காத பாடல்கள் ஆய்வுக்குரியதாக இருக்கின்றன.
தொல்காப்பியத்திற்குப் பிறகு தோன்றிய பிற்காலத்து இலக்கண நூல்கள் திணைமயக்கம் என்ற இலக்கணப் பிறழ்வினைப் பெருவாரியான நூற்பாக்களில் பதிவு செய்யவில்லை. ஆகவே, திணைமயக்கம் என்ற கருத்தியல் விவாதத்திற்கும் ஆய்வுக்குரியதுமாகும்.