Monday, November 15, 2010

உகர ஊகாரத் திருத்தம்

உகர ஊகாரத் திருத்தம்
புலவர் செ.இராசு,
தமிழ்ப் பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர்.

தமிழ் எழுத்துச் சீர்மை முயற்சிக்கு இப்போது அறுபது வயதாகிறது. 4.09.1993 ‘குமரன்’ இதழில் முருகப்பா அவர்கள் தமிழ் எழுத்துச் சீர்மை பற்றி முதலில் எழுதினார். 23,24.12.1933 - ஆம் ஆண்டு உ.வே.சாமிநாதய்யர் தலைமையில் சென்னையில் நடைபெற்ற தமிழன்பர் மாநாட்டில் எழுத்துச்சீர்மை உடனடியாகச் செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1934 இல் ‘பகுத்தறிவு’ இதழில் சீர்மை பற்றி அறிக்கை வெளியிட்ட தந்தை பெரியார் அவர்கள் 20.01.1935 முதல் ‘குடியரசு’ இதழில் அவற்றைப் பின்பற்றத் தொடங்கினார். 1948 - இல் சுதேசமித்திரன் நாளிதழை சி.ஆர்.சீனிவாசன் அவர்கள் தமிழ் எழுத்துச் சீர்மையுடன் அச்சிட்டார். விடுதலைக்குப் பின்னர் அறிஞர் பலரும் எழுத்துச் சீர்மை பற்றிச் சிந்திக்கத் தொடங்கினர். பற்பல இதழ்களும் சீர்மை பற்றிய பல கட்டுரைகளை வெளியிட்டன.
தந்தை பெரியார் அவர்களின் நூற்றாண்டு விழாவையொட்டி 9.10.1978 முதல் தமிழ் எழுத்துச் சீர்மையைத் தமிழக அரசு அறிவித்தது.
ஐ,ஔ - அய்,அவ்: ண,ற,ன - ணா, றா, னா: ண, ல, ள, ன - ணை, லை, ளை, னை: ண,ற,ன - ணொ,றொ,னொ: ண,ற,ன - ணோ,றோ,னோ ஆகியவை அரசு அறிவித்த சீர்மைகள் (பின் 15.01.1979 இல் ஐ, ஔ திருத்தம் தேவையில்லை என்று அரசு அறிவித்தது.). இத்திருத்த ஆணையால் உயிர்மெய் எழுத்துகளில் உகார,ஊகார உயிர்மெய் நீங்கலாக அனைத்தெழுத்துக்களும் சீர்மையை அடைந்தன.
பதினெட்டு மெய்களுடன் உகரம்,ஊகாரம் சேரும் உயிர்மெய்கள் மட்டும் சீர்மையாக இல்லாமல் ஒழுங்கற்று, பல்வேறு முரண்பாடுகளுடன் வடிவங்களைக் கொண்டுள்ளன.
கு,டு,மு,ரு,ழு,ளு:
ங,சு,பு,யு,வு: - குறில் - 3 பிரிவுகள்
ஞ,ணு,து,நு,லு,று,னு:
கூ:
டூ,மூ,ரூ,ழூ,ளு;
ஙூ,சூ,பூ,யூ,வூ; - நெடில் - 4 பிரிவுகள்
ஞ},ணூ,தூ,நூ,லூ,றூ,னூ
இவை 3,4 பிரிவாக இருந்தாலும் நுட்பமாகப் பார்க்குமிடத்து குறிலும் நெடிலும் தனித்தனியே 12 வேறுபாடுகளைப் பெற்றிருக்கின்றது. குகரம் நெடிலாக மாறும்போது ஏனைய போல் கு என மாறாமல் கூ என உகரம் சேர்த்து எழுதப்படுகிறது. இருப்பினும் நெடிலாக ஒலிக்கிறது. புழந்தமிழாகிய தமிழிலும், வட்டெழுத்திலும் கிரந்தத்திலும் இவ்வளவு முரணான வேறுபாடுகள் இல்லை. இன்றைய தமிழாக உருவெடுத்தபோதுதான் இவ்வேறுபாடுகளைப் பெற்றன.
ஓருயிர் சேர்த்து உயிர்மெய்கள் இவ்வாறு ஒரே சீராக இல்லாமல் வேறுபட்டிருப்பது மொழியியலுக்கு முரண்பாடாக உள்ளன. சின்னஞ்சிறு பிஞ்சுக்குழந்தைகள் இவ்வேறுபட்ட வடிவங்களைக் கற்று மனத்தில் இருத்திக்கொள்ள எவ்வளவு சிரமப்படும் என்பதை உளவியல் நோக்கில் எண்ணிப்பார்க்க வேண்டும். முரண்பாடுகள் நிறைந்த இவ்வரிவடிவங்களை அக்குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கும் தொடக்க வகுப்பு ஆசிரியர்கள் எவ்வளவு சிரமப்படுவார்கள் என்பதைக் கல்வியியல் நோக்கில் காணவேண்டும். சிறார் தலையில் எவ்வளவு பெரிய பாரத்தை ஏறறுகிறோம் என்பதைப் பாருங்கள். இத்தேவையற்ற சிக்கலிலிருந்து சிறார்கள் மீள வேண்டாமா?
தமிழக அரசு கொண்டுவந்த சீர்மைக்கு ………. இகர,ஈகாரத் திருத்தங்களுடன் ஐ,எ,ஏ,உகர,ஊகாரத் திருத்தங்கள் பற்றியும் பல அறிஞர்கள் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். திருத்தம் பெற்று முன்னேறுகின்ற மொழிகளோடு நம் தாய்த்தமிழும் முன்னேற வேண்டாமா? கல்லிலும் செப்பேட்டிலும் ஓலையிலும் எழுதப் பெற்ற முறை தேவைபட்டிருக்கலாம். இன்று மிக வேகமாக முன்னேறிவரும் அறிவியல் முன்னேற்றத்தில் நாமும் இணையவேண்டாமா? தட்டச்சு, மின்தட்டச்சு, அச்சு, தொலையச்சு, குராட்மா அச்சு, கணிப்பொறி,…….. டைப், மோனோ டைப் போன்ற அறிவியல் ஆக்கச் சாதனங்களில் அன்னைத்தமிழ் அரியணை ஏற வேண்டாமா?
காலந்தோறும் தமிழ் எழுத்துக்கள் மாறியே வந்துள்ளன என்பதைக் கல்வெட்டுக்களும் செப்பேடுகளும் காட்டுகின்றன. முன்பு எகர, ஒகர உயிர்க்கும் உயிர்மெய்கட்கும், குற்றியலுகரத்திற்கும் புள்ளியிட்டு எழுதினோம். வருடம், மாதம், தேதிகட்குக் குறியீடுகளையே பயன்படுத்தி வந்தோம். தமிழ் எண்களையே முன்பு பயன்படுத்தினோம். இவைகள் எவ்விதப் போராட்டமும் இல்லாமல் மறைந்தனவே ஏன்? 192 காசுகளை ரூபாய்க்குக் கொண்டிருந்த நாம் 100 புதுக்காசுகளை ஏற்றுக் கொள்ளவில்லையா? வள்ளுவர் எழுதிய எழுத்தில் கம்பர் எழுதவில்லை. தமிழ்ச்சுருக்கெழுத்தில் தமிழ் வரிவடிவம் இல்லை என்பதற்காக அதனை யாரும் நீக்க முனையவில்லையே.
இம்மாறுபட்ட இருவகை உயிர்மெய் வடிவங்களுக்கு மட்டும் தட்டச்சுப் பொறியில் 22 தட்டுக்கள் உள்ளன. அவைகளில் சீர்மை மூலம் 20 தட்டுக்கள் குறைந்து இரண்டே தட்டுக்களில் இவ்வடிவங்களைத் தட்டச்சு செய்யலாம். கு, சு, டு, து, நு, மு, ரு, று, ழு, ளு, லு, னு ஆகியவைகட்குத் தனி வடிவங்கள் உள்ளன. (14). ணு அடிக்க இரண்டு பாகங்களைச் சேர்க்க வேண்டும் (2). ங, பு, யு, வு ஆகியவைகளுக்குக் கீழ்க்கோட்டை அடித்து அதன்மேல் ங, ப, ய, வ - வை அடிக்க வேண்டும். (1) டூ, மூ, ரூ, ழூ ஆகியவற்றிற்குச் சுழியை அடித்துப் பின்னர; டு, மு, ரு, ழு ஆகியவைகளை அடிக்க வேண்டும். (1) கூ, சூ ஆகியவைகட்குத் தனி எழுத்துக்கள் உள்ளன (2). பிற எழுத்துக்களை நெடிலாக்க h என்பதை இறுதியில் சேர்க்க வேண்டும் (1). ங, பு, யு, வு - வை நெடிலாக்க கீழ்வளைவைத் தனியாக அடிக்க வேண்டும் (1). சீர்மை மூலம் இவை அனைத்தையும் இரண்டே எழுத்துக்களில் அடக்கலாம். பிற சீர்மைகளுடன் இந்த 20 வடிவங்கள் குறைந்தால் கையடக்கமான தட்டச்சு வந்துவிடும். வேண்டிய இடங்களுக்கு அவைகளை எளிமையாக எடுத்துச் செல்லலாம்.
மின்னணு தட்டச்சு தமிழில் வந்து மின்சுற்றுக் குறைவதால் இக்கருவிகளை இன்றைய நிலையில் பாதி விலைக்கும் குறைவான விலையில் உருவாக்கலாம். இவ்வாறு பொருளியல் நோக்கிலும் உகர, ஊகார சீர்மை முக்கியமானது என்பதை உணர வேண்டும். இவற்றின் மூலம் தட்டச்சு வேகம் பெரிதும் எளிமையாகும். ……… கருவிகள் மூலம்தான் பொத்துப்போவது நீங்கும். எழுத்துக்கள் அழகுபெறும்.
அச்சகங்களில் சில எழுத்துக்கள் 14 கிலோ வாங்கினால் அதே செய்தியை அச்சடிக்க, தமிழ் எழுத்துக்கள் 28 கிலோ தேவைப்படுகிறது. தவிரவும் பழையமுறை எழுத்துக்களில் மேலும் கீழும் வளைவுகள் செல்லுவதால் இடத்தை அடைக்கிறது. இப்போது 30 வரிகள் அச்சிடும் பக்கத்தில் 36 வரிகள் அச்சிடலாம். அச்சு எழுத்துப்பெட்டிகளில் 34 குறைவதால் கை அதிகம் நீளவேண்டிய தேவையில்லை. அச்சுக்கோர்த்தல் எளிமையாகவும், மிக வேகமாகவும் நடைபெறும். விரைவில் நூல்களை அச்சிடலாம். மிகுந்த சிக்கனம் இதனால் ஏற்பட்டு அச்சுச்செலவும் குறையும்.
இணைப்பில் காட்டியுள்ளவாறு பல அறிஞர்கள் உகர, ஊகாரச் சீர்மைக்கு முப்பதிற்கும் மேற்பட்ட திருத்தங்களைக் கூறியுள்ளனர். நார்மன் பிரௌன் போன்ற மேனாட்டு மொழியியல் அறிஞர்கள் தமிழ் எழுத்துச் சீர்மையை வரவேற்றுள்ளனர்.
இணைப்பில் முதலாவதாக உள்ள {, _ குறியீடுகள் இன்றைய கிரந்த எழுத்துக்களில் உள்ளன. தட்டச்சுக்களிலும் அவை இடம் பெற்றுள்ளன. ராஜீ, ஜீலை போன்ற சொற்கள் மூலம் அனைவருக்கும் தெரிந்த அனைவரும் கையாளுகிற குறியீடுகளாக இருக்கின்றன. எழுத்துத் திருத்தங்களின்போது கூடுமானவரை ஏற்கனவே இருக்கின்ற மக்கள் பழகிய குறியீடுகளைச் சேர்த்து எழுதுவதே இன்றியமையாததாகும். முதல் வகுப்பு மாணவருக்கும் இக்குறியீடுகள் புரியும். கொடுமுடி சண்முகம் அவர்கள் 2000 பொதுமக்களிடம் கருத்தறிந்தபோது 80 விழுக்காட்டினர் இக்குறிகளையே ஆதரித்துள்ளனர். இன்றைய தமிழ் ஆட்சிமொழி விரைவு பெறாததற்குக் கூறப்படும் பல்வேறு காரணங்களில் தமிழ் தட்டச்சுப் பொறிகள் போதுமானதாக இல்லாததும் ஒன்று.
புதிய குறியீடுகளைக் கொண்டுவந்து தட்டச்சுக்களை எல்லாம் மாற்றுவது என்பது இயலாத காரியம். இவற்றை ஏற்றால் பழைய தட்டச்சுப் பொறிகளையே பயன்படுத்தலாம். இக்குறியீடுகள் பெற்ற கிரந்த எழுத்துக்கள் தமிழ்நாட்டில் மட்டுமே வழங்கக் கூடியவை. எந்த வடஇந்திய மொழிகளிலும் பிற திராவிடமொழிகளிலும் அவை இல்லை.
பல லட்சம் புத்தங்கள் வீணாகும் என்று எவரும் பயப்படத் தேவையில்லை. பழையமுறை - புதியமுறை மாற்றத்தை மட்டும் அச்சிட்டு அந்நூல்களில் ஒட்டிவிடலாம். படிப்போர் எளிமையாகப் புரிந்து கொண்டு படிப்பர். புழைய புத்தகங்கள் என்றென்றும் நிலைத்திருக்கக் கூடியவை அல்ல. அவைகளை மறு அச்சு செய்யும்போது புதிய சீர்மை முறையில் அச்சிடலாம்.
முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களை அமைப்பாளராகவும், அமரர் வ.சு.ப.மாணிக்கம் அவர்களைத் தலைவராகவும் கொண்ட தமிழகப் புலவர்குழு தமிழ் எழுத்துச்சீர்மை அவசியம் தேவை எனத் தீர்மானம் நிறைவேற்றி 2.2.1975 - இல் பரிந்துரை செய்யக் குழு ஒன்றையும் அமைத்தது. அக்குழு உகர, ஊகாரத் திருத்தம் அவசியம் தேவை எனக் கூறியுள்ளது. தலைவரவர்களும் அதை ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.
சிலர் உயிர் எழுத்துக்களில் உகர, ஊகாரத்திற்கும் தீவிர மாற்றத்தையும் விரும்புகின்றனர். எழுத்துக்கள் வேண்டாம் குறியீடுகளே போதும் என்பாரும் அகரம் ஒன்றையே பன்னிரு உயிராகவும் குறியீடுகளைச் சேர்த்து எழுதலாம் என்பாரும் உளர். மிகத் தீவிரமான மாற்றம் புதுமொழிபோல் ஆகிக் கற்றவரையும் கல்லாதவராக மாற்றிவிடும். மேற்கண்ட தேவையான திருத்தங்களே உடனடியாகப் போதுமானது. திருத்தத்தை எதிர்ப்போர் தமிழின் எந்த ஒலியும் குறைவதில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். வரிவடிவங்களே செம்மையாக்கப்படுகின்றன என்பதையும் உணர வேண்டும். மொழிப்பற்று என்ற பெயரில் மொழி முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கக்கூடாது.
உலகில் எல்லா மொழிகளும் எழுத்துச் சீர்மையைக் கொண்டு வந்து விட்டன. அண்மையில் உள்ள மலையாளமொழி 500 - க்கும் மேற்பட்ட உருவங்களை 90 ஆகக் குறைத்துவிட்டது. 40000 - க்கும் மேற்பட்ட எழுத்துக்களுடைய சீனமொழி 200 எழுத்துக்களைப்பெற்று ஏறுநடை போடுகிறது. மேலிருந்து கீழ் எழுதப்பெற்ற ஜப்பான் மொழி இடமிருந்து வலமாக எழுதப்படுகிறது.
வேகமாக முன்னேறிவரும் மொழிகளோடு நம் தொன்மைத்தமிழும் ஈடு கொடுத்து முன்னேற தேவை எழுத்துச் சீர்மை! எஞ்சிய உகர, ஊகாரச் சீர்மை அவசியம் உடனடியாக வேண்டும். ‘வளர்ச்சி என்பது மாற்றம்; மாற்றம் இன்மையேல் வளர்ச்சி இல்லை’ இது சமுதாயத்திற்கு மட்டுமல்ல; மொழிக்கும்தான்!

No comments:

Post a Comment