Saturday, August 9, 2014

தொல்காப்பிய எழுத்ததிகாரக் கட்டமைப்பில் மொழிமரபு


தொல்காப்பிய எழுத்ததிகாரக் கட்டமைப்பில் மொழிமரபு
பி.பாலசுப்பிரமணியன்
உதவிப் பேராசிரியர்
தமிழ்த்துறை
தூய நெஞ்சக் கல்லூரி(தன்னாட்சி)
திருப்பத்தூர்.

உலக மொழிகளுள் இலக்கியக் கோட்பாட்டை மையமாகக் கொண்டு படைக்கப்பட்ட இலக்கண நூல்கள் மிகக் குறைவு. அவ்வகையில் மொழியமைப்பையும் இலக்கிய அமைப்பையும் நோக்கமாகக் கொண்டு காத்திரமாகப் படைக்கப்பட்ட நூல் தொல்காப்பியம். யாழ்ப்பாணப் புலவர் சி.வை.தாமோதரம் பிள்ளையால் பதிப்பிக்கப்பட்ட காலந்தொடங்கி தொல்காப்பியம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. கோட்பாட்டாய்வுகள் பெருகிவரும் இன்றைய சூழலில் தொல்காப்பியத்தை மறுவாசிப்பிற்கு உட்படுத்த வேண்டிய தேவையிருக்கிறது. அதனடிப்படையில் இக்கட்டுரை தொல்காப்பியத்தின் இரண்டாவது இயலான மொழி மரபு குறித்து ஆராய்கிறது.

தொல்காப்பியம் – எழுத்ததிகாரம் – கட்டமைப்பு
தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் எனப் பகுக்கப்பட்டிருந்தாலும் அதனுள்ளே அணியும் யாப்பும் அடங்கியிருக்கின்றன எனலாம். பிற்கால இலக்கண வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்த இந்நூலில் நிகண்டுகள், அகராதிகள் மற்றும் சிற்றிலக்கியத்திற்கான கூறுகளும் நிரவிக் கிடக்கின்றன. தொல்காப்பியம், வீரசோழியம், நேமிநாதம், நன்னூல், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்து வீரியம், சுவாமிநாதம் போன்ற எட்டு நூல்களும் எழுத்ததிகாரத்தைச் சிறப்பாக ஆராய்வன என்கிறார் செ.வை.சண்முகம்.

தொல்காப்பியர் எழுத்ததிகாரத்தை எழுத்தியல், பிறப்பியல், புணரியல் என மூன்று வகையாகப் பிரித்துக் காட்டுவார்.

தொல்காப்பியம் - எழுத்ததிகாரம்



 
எழுத்தியல்                          பிறப்பியல்                              புணரியல்

நூன் மரபு    மொழி மரபு        

தொகை மரபு  உருபியல்   உயிர் மயங்கியல்  புள்ளி மயங்கியல்    குற்றியலுகரப் புணரியல்
தொல்காப்பியர் நூன் மரபு, மொழி மரபுச் செய்திகளை எழுத்தியலாகவும் பிறப்பியலைத் தனி இயலாகவும் தொகை மரபு, உருபியல், உயிர் மயங்கியல், புள்ளி மயங்கியல், குற்றியலுகரப் புணரியலை புணரியல் எனவும் பிரித்து மொழியமைப்பைத் திறம்பட விளக்குகிறார். தொல்காப்பியத்தையொட்டி எழுந்த இடைக்காலத்து இலக்கண நூல்கள் இவற்றிலிருந்து சிறிதளவு மாறுபடுகின்றன.
தமிழ் இலக்கணங்களில் எழுத்ததிகாரம் ஐந்து வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது என்பதைக் கீழ்க்கண்டபடித் தொகுத்துச் சொல்லலாம் என்கிறார் செ.வை.சண்முகம்.
வ.எண்
நூல்கள்
பிரிவின் தொகை
தலைப்புகள்
1.
தொல்காப்பியம்
3
எழுத்தியல், பிறப்பியல், புணரியல்
2.
வீரசோழியம், நேமிநாதம்
1

எழுத்ததிகாரம்
3.
அவிநயம்
2
எழுத்தியல், புணரியல்
4.
நன்னூல், இலக்கண விளக்கம், முத்து வீரியம், சுவாமி நாதம்
3

எழுத்தியல், பதவியல், புணரியல்
5.
தொன்னூல் விளக்கம்
3
பிறப்பியல், எழுத்தியல், புணரியல்

தொல்காப்பிய எழுத்ததிகாரத்தைப் பிற்கால இலக்கண நூல்களுடன் ஒப்பிட்டு ஆராய்வது குறிப்பிடத்தக்கதாகும். இலக்கணங்களை மொழியியல் நோக்கில் ஆராயும் போக்கு குறைந்து கொண்டே வருகிறது எனலாம். குறிப்பாக, இலக்கணங்களை எழுத்தெண்ணி ஆழமாகக் கற்கும் நிலைமைத் தமிழ்ச் சூழலில் இல்லையென்றே கூறலாம்.


மொழி மரபு – விளக்கம்
தொல்காப்பிய எழுத்ததிகாரத்தில் உள்ள ஒன்பது இயல்களுள் இரண்டாவதாகக் கூறப்படுவது மொழிமரபு. மரபு என்பது முன்னோர் சொன்ன வழியே தொன்றுதொட்டு வருவதாகும். ஆக, முன்னோர் கருத்துக்களை மிகுதியாக எடுத்தாண்டிருக்கும் இயல்களை மரபு என வழங்கலாமா? என்ற கேள்வி எழலாம். நூன்மரபில் கூறப்பட்ட எழுத்திலக்கணம் தனிநின்ற எழுத்துக்களுக்கேயாகும். மொழியிடை நின்ற எழுத்துக்களுக்கான இலக்கணம் மொழிமரபில் இடம் பெறுகின்றது. தொல்காப்பியா் மொழி என்பதை சொல் என்ற பொருளில் கையாண்டிருக்கிறார். நன்னூலார் கூறும் எழுத்திலக்கண பகுதிகளுள் முதல், ஈறு, இடைநிலை, போலி என நான்கும் விளக்கம் பெறுகின்றன. “மொழிகளுக்கு எழுத்தான் வரும் மரபு உணா்த்தினமையால் மொழி மரபு எனப்பட்டது. தனிநின்ற எழுத்திற்கு அன்றி மொழியிடை நின்ற எழுத்திற்கும் என உணா்க” என்பார் இளம்பூரணர்.
      “மொழிகளுக்கு எழுத்தான் வரும் மரபு உணா்த்துகின்றமையின் மொழிமரபு எனக் காரணப்பெயா்த்தாயிற்று” என்று மொழிமரபையொட்டியே நச்சினார்க்கினியார் கூறுவார்.
      “பிறப்பியலை மொழிமரபினை அடுத்து வைக்க எனில் மொழிமரபில் எழுத்துக்களின் இயல்பினையே கூறினார். ஆகலானும் புணர்ச்சியில் எழுத்துக்கள் திரிதற்கும் காரணம் அவ்விலக்கணத்தின் பிறப்பிடத்து இயல்பே ஆகலானும் எழுத்துக்கள் திரிந்து புணரும் புணர் இலக்கணம் கூறுதன் முன்னர் எழுத்துக்களின் பிறப்பு உணர்த்தல் வேண்டற்பாலது ஆகலானும் மொழிமரபினையடுத்துப் பிறப்பியலை நிறுத்தினார் என்க” என்பார் வேங்கடராஜீலு.
      மொழி மரபினையடுத்து பிறப்பியலைக் கட்டமைத்ததற்கான காரணத்தை உரையாசிரியர்கள் வெவ்வேறு கோணத்தில் ஆராய்ந்திருக்கின்றனர். மொழி மரபு குறித்த உரையாசிரியர்களின் கருத்தியல்கள் ஆராய்ச்சிக்குரியதாகும்.
மொழிமரபு இயலில் கூறப்படும் செய்திகள்
1.   குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் ஆகிய சார்பெழுத்துக்கள்.
2.   அளபெடை
3.   எழுத்துக்களின் இயக்கம் (மொழியாக்கம், சொல் வகை)
4.   போலி
5.   குறுக்கங்கள்
6.   மொழிமுதல் எழுத்துக்கள்
7.   மொழியிறுதி எழுத்துக்கள்
போன்றவை மொழியிடை வைத்து எண்ணத்தக்கவாதலின் இவற்றை மொழிமரபு என்று கூறலாம்.
பிற இயல்களுடன் தொடா்பு
      தொல்காப்பியர் இயல்கட்குப் பெயரிட்ட வகையும், அமைத்தமுறையும், சிந்திக்கற்பாலன. நூன்மரபில் முதல் எழுத்துக்களை விளக்குகிறார். சார்பெழுத்துக்கள் தனியே வாராமல் மொழியினைச் சார்ந்து வருவனவாகலின் அவற்றை மொழிமரபில் விளக்குகிறார்.
      இதனை “இவை மொழிக்கட்படுத்துக் காட்ட வேண்டுதலின், ஈண்டுவையாது மொழிமரபில் வைத்தார்” என்று சிவஞானமுனிவா் குறிப்பிடுகிறார்.
      மொழிமரபு மொழியோடும் தொடா்புடையது. எழுத்தோடும் தொடா்புடையது. எனவே, எழுத்தோரன்னவாகிய சார்பெழுத்துக்களின் விரிவு நூன்மரபின் இறுதியினைச் சார்ந்தது. மொழிமரபின் தொடக்கத்தில் கூறப்படுகிறது. நூன்மரபின் இறுதியில் சுட்டு,வினா ஆகியவற்றை விளக்குவதற்கும், மொழிமரபிற்கும் அவற்றிற்குமுள்ள தொடர்பு தான் காரணம் என, ”இக்குறிகளையும் முன்குறிலென்றும், நெடிலென்றும் கூறிய வழியே கூறுகவெனின், இவை சொல்நிலைமையிற்பெறும் குறியாகலின் ஆண்டுவையாது, மொழிமரபினைச் சாரவைத்தார் என்க”. என்று இளம்பூரணர் தமது உரைமூலம் விளக்குவார்.
மொழிமரபு புணரியலோடும் தொடர்புடையது. மொழியின்கண் வரும் எழுத்துக்கள் அனைத்தையும் விளக்கிய பின்னரே புணர்ச்சிபற்றி கூறல் வேண்டும். நூன்மரபிலும், மொழிமரபிலும் 33 எழுத்துக்களையும் விளக்கிய பின்னர் அவற்றின் பிறப்புணர்த்த வேண்டும். எனவே மொழிமரபின் பின்னர் பிறப்பியல் அமைக்கப்பட்டது. சிவஞான முனிவா் “பிறப்பியலை நூன்மரபினைச் சார வைக்க எனின் அற்றன்று. மொழிமரபிற் கூறும் விதி எல்லாம் நூன்மரபிற்கு வழிபு. அஃது அதன்பின்னர் வைத்துப் பிறப்பியல் அவற்றின் பின் வைக்கப்பட்டது” என்பர். இதனை “நூன்மரபின் பின்னே வைக்க வெனின் சார்பிற்றோற்றத் தெழுத்தும் தனிமெய்யும் மொழிமரபினிடை உணர்த்தி உணர்த்த வேண்டுதலின் மொழிமரபின் பின்னதாயிற்று” என இளம்பூரணரும் காரணங் காட்டுவா். எழுத்துக்களின் எண்ணும் அவற்றின் பிறப்பிடமும் அறிந்த பின்னரே அவற்றாலாகும் புணர்ச்சி பற்றி அறிய வேண்டுமாதலின் பிறப்பியலின் பின் புணரியல்கள் அமைக்கப்பட்டன. மொழிமரபின் இறுதியில் மொழிமுதல், இறுதிபற்றிக் கூறுவதும், அடுத்துவரும் புணரியல்களில் கூறப்படும் புணர்ச்சிகட்கு வேண்டப்படுவனவான முதல் இறுதிகளைக் கருத்தில் கொண்டே எனலாம்.
மொழிமரபில் சார்பெழுத்துப் பற்றிய சூத்திரங்களும் (34-40) அளபெடை பற்றிய சூத்திரங்களும் (41,42) ஆகிய முதல் 9 சூத்திரங்கள் பிரச்சனைக்கு உரியதான சூத்திரங்களாகும். உரையாசிரியர்கள் இருவரும் “இத்துணையும் நூன்மரபின் ஒழிபு” என்று 42-ஆம் சூத்திர உரையில் குறித்துள்ளனர். அந்தக் குறிப்பின் மூலமாக இவை தனி எழுத்தினை விவரிப்பதாகக் கருதலாம்.
சார்பெழுத்துக்கள்
      சார்பெழுத்துக்கள் ஒவ்வொன்றும் தனிமொழிக்கண்ணும், தொடர்மொழிக்கண்ணும் வரும் இடங்கள் சுட்டப்படுகின்றன. குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் ஆகியன மூன்றனை மட்டும் சார்ந்து வருவனவாகக் குறிப்பிட்டாலும், அளபெடை, மகரக்குறுக்கம், ஐகார, ஔகாரக் குறுக்கங்கள் முதலியவற்றின் மாத்திரை மிகுதலும், குறைதலும் அவற்றின் சார்பும்,
      “குன்றிசை மொழிவயின் நின்றிசை நிறைக்கும்
      நெட்டெழுத் திம்பர் ஒத்தகுற் றெழுத்தே”.
      “னகாரை முன்னர் மகாரம் குறுகும்”
      “ஒரள பாகும் இடனுமா ருண்டே
      தேருங் காலை  மொழிவயி னான“.
ஆகிய நூற்பாக்களில் பேசப்படுகின்றன. நன்னூலார் சார்பெழுத்துக்களை விரிவாக்கி கூற இவையே இடமளித்தன எனக் கருதுவதற்கு இடமுண்டு என்பர். ஒலிமாறுபாட்டினையெல்லாம் தொகுத்துச் சார்பெழுத்துக்களாக நன்னூலார் கூறியிருந்தால், தொல்காப்பியர் சுட்டும் எகர குறுக்கத்தையும் சேர்த்திருக்க வேண்டும். அவ்வாறின்றி சார்பு பத்து (10) என்பது,
      “உயிர்மெய்
      அளபெடை யிரண்டாய்த் மறுகுறுக்கம் சார்பாம்”.
என்பதைப் பின்பற்றியதாகலாம் என்பாரும் உண்டு.
சிவஞானமுனிவர் கூற்று
1.   சிவஞானமுனிவர் நூன்மரபின் வழியே மொழிமரபு என விதந்து, “குற்றியலுகரம் நிற்றல் வேண்டும்” என்பது முதல் “உருவினும் இசையானும்” என்னும் சூத்திரம் வரைக்கும் – “அவைதாம்” என்பதன் ஒழிபு.
2.   “குன்றிசை“, ஐஔ” இரண்டும் “நீட்டம்” என்பதன் ஒழிபு.
3.   “நெட்டெழுத்தேழே” என்பது அவற்றுள் “அஇஉஎ“, “ஆஈஊஏ“ என்பனவற்றின் ஒழிபு.
4.   மொழியாக்கம் அதிகாரப்பட்டமையின் ஓரெழுத்தொருமொழி என்பதும் உடன் கூறினார்.
5.   “மெய்யினியக்கம்” என்பது “னகர இறுவாய்” என்பதன் ஒழிபு.
6.   “தம்மியல் நினப்பின்” என்பது முதல் “மகரத்தொடர்மொழி“ என்னும் நூற்பா வரைக்கும் “மயக்கச்சூத்திர ஒழிபு“ எனக்காண்க என்று தம் தொல்காப்பியச் சூத்திர விருத்தியின் இறுதியில் கூறினார் எனலாம்.
மொழிநிலை
      ”ஓரெழுத்தொரு மொழி ஈரெழுத் தொருமொழி
      இரண்டிறந் திசைக்குந் தொடர்மொழி உளப்பட
      மூன்றே மொழிநிலை தோன்றிய நெறியே”
என்னும் நூற்பாவில், ஓரெழுத்தொருமொழி,டு ஈரெழுத்தொருமொழி. இரண்டிறந் திசைக்கும் தொடர்மொழி என மூவகைப் படுத்துவது குறித்து கருத்து வேறுபாடுகள் உள. ஒருமை, பன்மை, இருமை என்பதைத் தொல்காப்பியர் வடமொழி நோக்கிப் பகுத்தார் என்னும் சங்கர நமச்சிவாயர் கருத்தினை, ”வடமொழியில் உள்ள பாகுபாடு சொற்களுக்கும் பொருள்களுக்குமே அன்றிச் சொல்லிடை நின்ற எழுத்துக்களுக்கு அன்று. எனவே, தொல்காப்பியர் வடமொழியைப் பின்பற்றினார் என்பது பொருந்தாது”. என வேங்கடராஜுலு மறுப்பார். “ஓரெழுத்தொருமொழியும், தொடர்மொழியும் என்னாது ஈரெழுத்தொருமொழியும் ஓதினார் சில பல எனும் தமிழ்வழக்கு நோக்கி” என்பார் நச்சினார்க்கினியர். ஈரெழுத்தொருமொழி, ஈரெழுத்துமொழியும் என்றாங்குப் பின்னர் எடுத்தாளுதற் பொருட்டும், இரண்டிணைந்து நிற்பனவற்றைத் தொடரென்று என்னாது இரண்டிற்கு மேற்பட்டனவற்றைத் தொடர் என வழங்கும் தமிழ் வழக்கு நோக்கியும் மூவகைப்படுத்திக் கூறினார் தொல்காப்பியர் என வெள்ளை வாரணர் குறிப்பிடுவார். அந்நெறி பண்டையோர் வகுத்த நெறியை யொட்டியதாம் என்பர் இலக்கணவியலாளர்கள்.
போலிகள்
      போலிகளில்,அஇ> >அய், அஉ>ஔ என்ற மொழிமுதற் போலிகளும், ய்>இ என்னும் மொழி இறுதிப் போலியும்
“அகர இகர ஐகார மாகும்”.
      “அகர உகர ஔகார மாகும்“.
      “இகர யஞர இறுதி விரவும்”
      “அகரத் திம்பர் யகரப் புள்ளியும்
      ஐஎன் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்”.
ஆகிய நூற்பாக்களில் கூறப்படுகின்றன. தொல்காப்பியர் கூறிய போலிகளோடு நன்னூலார் ச,ஞ,ய முன்னர் அகரம் ஐகாரமாகும் என்ற போலியையும், சேய்ந்நலூர்> சேய்ஞ்ஞலூர் என வரும் போலியையும்,
      “அஐ முதலிடை யொக்குஞ் சஞயமுன்”.
      “ஐகான் யவ்வழி நவ்வொடு சில்வழி
      ஞஃகா னுறழு மென்மரு முளரே“.
என்னும் நூற்பாக்களில் குறிப்பர். காலப்போக்கில் காணப்படும் சொற்களுக்கேற்ப நன்னூலார் புதிய நோக்கில் இலக்கணம் படைத்துள்ளார்.
மகரத் தொடர் மொழி
      அஃறிணைச் சொற்களில் னகரமும் மகரமும் மயங்குமெனவும் அவ்வாறு மயங்காதன ஒன்பது சொற்கள் என்பதை,
      “மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த
      னகரத் தொடர்மொழி ஒன்பஃ தென்ப
      புகரறக் கிளந்த அஃறிணை மேன”.
எனும் நூற்பாக்களில் கூறுவர். தொகைகூறியவர் அவை யாவை என விளக்கம் தரவில்லை. இளம்பூரணா் உகின், செகின், விழன், பயின், அழன்,புழன், குயின், கடான், வாயான் எனக் கூறியதோடமையாது, “இவற்றுள் திரிபுடையன களைக” என ஐயப்படுவாராயினர். எகின், செகின், விழன், பயின், குயின், அழன், புழன், கடன், வயான் என நச்சினார்க்கினியா் குறிப்பிடுவர்.
      இவர்கள் குறிப்பிடுவனவன்றிப் பலியன், வலியன், அலவன், கழவன், கலுழன் எனப்பல சொற்கள் உளவாதலின் மயிலைநாதர் இதனை மறுப்பார். தொல்காப்பியர் இவ்வரையறையைப் பின் புள்ளி மயங்கியலில் பயன்படுத்திலர். குயின், எயின், எகின், அழன், புழன் போன்றவற்றைத் தவிரப் பிற சொற்களைக் கூறிற்றிலர். ஆதலால் சொற்களைப் பற்றி முடிவுகொள்ள இயலவில்லை எனினும் இக்கூறுகளினின்று நிலன், கலன் போன்ற னகரவீற்றுச் சொற்களே பழமை வாய்ந்தவை என்றும் அவையே, பிற்காலத்து மகரவீற்றுச் சொற்களாக நிலம், கலம் என ஆயினவென்றும் உணரலாம். நன்னூலார் இக்கருத்துகளுக்கு மாறாக, நிலம், கலம் போன்ற மகரவீற்றுச் சொற்களே பழமை வாய்ந்தவை என்றும் அவையே பின்னர் னகரவீற்றுச் சொற்களாகத் திரிந்தன எனப் பொருள்கொள்ளுமாறும் என்பதை,
“மகர இறுதி அஃறிணைப் பெயரின்
      னகரமோ டுறழா நடப்பன உளவே.”
என்ற நூற்பாவின் வழிக் குறிப்பிட்டுள்ளார்.
மொழிமுதல் எழுத்துக்கள்
      மொழி முதலாகத் தமிழில் எல்லா உயிர் எழுத்துகளும் இடம் பெறும் என்றும் மெய்யெழுத்துக்கள் உயிரோடு கூடித்தான் நிற்கும் என்பதைத் தொல்காப்பியர்,
      “பன்னீ ருயிரும் மொழிமுதலாகும்”
      “உயிர்மெய் அல்லன மொழிமுத லாகா”
என்னும் நூற்பாக்களில் கூறுகிறார். இலக்கணங்கள் கூறும் மொழி முதல் நிற்கும் எழுத்துக்களை, பின்வரும் அட்டவணை மூலம் மிகத் தெளிவாகக் காணலாம்.
மொழிமுதல் நிற்கும் எழுத்துக்கள்
குறிப்பு
எழுத்து
தொல்காப்பியம்
வீரசோழியம்
நன்னூல்
முத்துவீரியம்

உயிர்
12
12
12
12

12



அ,இ,ஔ தவிர்ந்த ஒன்பது எழுத்துக்கள்
9
12
12
12

12
12
12
12

12
12
12
12

12
12
12
12

12
12
12
12
உ,ஊ,ஒ.ஓ தவிர்ந்த எட்டு எழுத்துக்கள்
8
8
8
8
“ஆ”வோடு சோ்ந்த ஒன்று
1
6
6
6
ஆ,எ,ஓ வோடு சோ்ந்த மூன்று
3
4
4
4
“நுந்தை” எனும் சொல்லால்வரும்
கு,உ
1
-
-
-
ஙனம் எனும் சொல்லில் வரும்
-
-
1
-
மொழியிறுதி எழுத்துக்கள்
      “ஔ“ தவிர ஏனைய உயிரெழுத்துக்களை மொழியிறுதி எழுத்துக்களாகத் தொல்காப்பியர் குறிப்பிடுவார். சில உயிர்கள் சில மெய்களோடு மட்டுமே கூட்டியும், சில மொழிகட்கு மட்டுமே உரித்தாயும் மொழியிறுதியாக வருமென்பதனை,
      “கவவோ டியையின் ஔவு மாகும்”
      “எ என வருமுயிர் மெய்யீறாகாது”
      “ஒவ்வும் மற்றே நவ்வலங் கடையே”
      “ஏஓ எனும் உயிர் ஞகாரத் தில்லை”
      “உஊ காரம் நவவொடு நவிலா”
      உச்ச காரம் இருமொழிக்குரித்தே”
      “உப்ப காரம் ஒன்றென மொழிப
      இருவயின் நிலையும் பொருட்டா கும்மே”
ஆகிய நூற்பாக்களில் காட்டுவார். இறுதி மெய்களாக ஞணநமன யரல வழள ஆகிய பதினொன்றைக் கூறுவா். “வ”கரம் நான்கு சொற்களிலும், “ந”கரம் இருசொற்களிலும், “ஒ” ஒருசொல்லினும் வருமெனக் குறிப்பர்.
தொல்காப்பியர் மாறுபடும் இடங்களை நோக்கின், நன்னூலார் ஔகாரத்தை நீக்காமல் சேர்த்துள்ளார். குற்றியலுகரத்தையும் அத்துடன் சேர்த்து “நாலாறுமீறே“ என்றார். தொல்காப்பியர் விதந்து கூறுவனவற்றைக் கூறாது ஒழிந்தார்.
மொழியியலாளர்
      மொழியியலாளர் மொழிமரபில் கூறப்படும் சார்பெழுத்துக்களை மாற்றொலிகளிலோ(Allophones), வகையொலிகளிலோ(Variations) அடக்குவர். மொழி முதல், இடை, இறுதி எழுத்துக்கள் அமையும் முறையினை ஒலிமரபு(Phonemic Pattern) என்பர். எழுத்துக்கள் ஒன்றோடொன்று தொடர்வதை ஒலித்தொடர்ச்சி(Sequence of Phonemes) எனக் குறிப்பர். இடைநிலை மெய்மயக்கத்தை(Consonantal Cluster) மெய்க்கூடு எனச் சுட்டுவர்.
மதிப்பீடு
      தொல்காப்பியர் நூன்மரபில் ஒழிந்த கருத்துக்களை மொழிமரபில் விளக்கியுள்ளார். மொழி மரபு முழுமையும் சொல்லில் வரும் எழுத்துக்களின் தொடர்நிலை உறவு குறித்து விவரிக்கிறது. முதலில் எழுத்துக்களை விளக்கி அதன் பின்னர் மொழிகளை இவ்வியலில் மிகச் சிறப்பாக இயற்றியது அவரின் இலக்கணத் திறமையே காரணம் எனலாம்.
      தொல்காப்பியர் மரபு என்ற சொல்லாடலைக் கையாள வேண்டிய காரணம் யாது? அவர் காலத்து மொழி வழக்குகள் குறித்துப் பதிவு செய்யாமல் முன்னோர் காலத்து மொழி வழக்குகளைப் பின்பற்றி இலக்கணத்தைக் கட்டமைத்திருக்கிறாரா? என்பது ஆய்வுக்குரியதாகும். பிற்காலத்து எழுந்த இலக்கண நூல்கள் மொழி மரபை எழுத்தியலுக்குள் அடக்கியிருக்கின்றன. தொல்காப்பியர் மொழி மரபு இயலில் கூறியுள்ள செய்திகளை நன்னூலார் எழுத்தியலிலும் பதவியலிலும் குறிப்பிடுகிறார். ஆக, தமிழ் இலக்கண நூல்களில் உள்ள எழுத்ததிகாரக் கட்டமைப்பை மேலாய்வு, மறுவாசிப்பு செய்வதன் மூலம் மொழியமைப்பின் வளர்ச்சியை அறிந்து கொள்ள இயலும்.
………………………………………………………………………………………..

2 comments:

  1. What are the different types of slots, casinos and slots?
    With each 1xbet app slot, players can play 전주 출장마사지 for free money, and win money 천안 출장안마 without 익산 출장샵 depositing any 아산 출장샵 of their own money, and win some money with no risk. However, casinos have a

    ReplyDelete