Sunday, November 6, 2011

பண்பாட்டுச் சூழலியல் நோக்கில் தமிழ்க் கவிதைகள் - 01


மனிதனை மையப்படுத்தி ஆராயும் சூழலியல்மானிடச் சூழலியல்” (human ecology) அல்லதுபண்பாட்டுச் சூழலியல்” (cultural ecology) எனப்படுகிறது. அது மனிதனை உள்ளடக்கிய சூழலியல் ஒழுங்கமைப்புகளைப் பற்றி ஆராய்கிறது. இயற்கையின் விளைவுகளையும் தாக்கங்களையும் மனிதன் எவ்வாறு பயன்படுத்திக் கொள்கிறான் என்பதையும் அதுபோல், அவன் எவ்வாறு சமூக நிறுவனத்தாலும் பண்பாட்டு விழுமியங்களாலும் செல்வாக்கிற்கு ஆட்படுகிறான் என்பதையும் முதன்மை நிலைப்படுத்தி பண்பாட்டுச் சூழலியல் ஆராய்கிறது என்கிறார் கான்ராட் பிலிப் கட்டாக் என்ற மேலைநாட்டு கோட்பாட்டாளர். இதனை மையமாகக் கொண்டு தமிழ்க் கவிதைகளை ஆராயும் நோக்கில் இவ்வாய்வுக் கட்டுரை அமைகிறது.

மேலைநாட்டுக் கோட்பாடுகளை வைத்து தமிழ் இலக்கியங்களை ஆராய்வதைவிட, தொல்காப்பியத் திணைக் கோட்பாட்டின் அடிப்படையை மையமாகக் கொண்டே பிற்கால இலக்கிய வடிவங்களை ஆராயலாம் என்கிறார் பணிக்கர். சங்க இலக்கியங்கள் பண்டைத் தமிழர்கள் இயற்கையோடு இயைந்து இனக்குழு வாழ்க்கை வாழ்ந்தனர் என்பதற்கு அடையாளமாகத் திகழ்கிறது. பிறகு, இதே இலக்கியங்களில் இனக்குழு வாழ்க்கை உடைந்து நிலமானியமுறைக்குத் தமிழ்ச் சமூகம் மாறிய நிலைமையும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் குறிஞ்சி, முல்லை ஆகிய இரண்டும் வறண்டு மாறிய நிலப்பகுதியான பாலை எனத் தமிழகம் ஐவகையான நிலப்பிரிவுகளை உள்ளடக்கியது என்கிறது சங்க இலக்கியங்கள். இத்திணைப்பெயர்களும் அந்தந்த நிலத்தின் பூப்பெயர்களைக் கொண்டு வைக்கப்பட்டுள்ளமை இயற்கையின் மீதான தீராக் காதலை வெளிப்படுத்துகிறது. இவ்வகையான இயற்கை நெறிக்காலம் நிலமானிய முறையை அடைந்து நாகரிகம் என்கிற பெயரில் தன்னை அழித்துக் கொள்ளத் தொடங்கியது. சங்க காலத்துத் தமிழ்ப் புலவர்கள் இயற்கையின் வளமையைக் கவிதையாகப் பாடினார். தற்காலத் தமிழ்க் கவிஞர்கள் இயற்கையின் வறுமையைத் தமது கவிதைகளில் பதிவு செய்து வருகின்றனர்.

நான்தான் இந்தப் பூமியின் கடைசிக் கவிஞனாக இருக்கலாம்”(I am Perheps the last poet) என்று எழுதினார் மாயகாவ்ஸ்கி என்ற கவிஞர். இப்படியொரு துக்ககரமான வார்த்தையை எந்தக் கவிஞனும் எந்த மொழியிலும் எழுதிவிடவில்லை. ஒவ்வொரு மொழியிலும் காலத்தின் மாற்றத்திற்கேற்ப கவிஞர்கள் பிறந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களது கவிதைகளே பிற்காலச் சந்ததியினருக்கு விதைகளாக இருக்கின்றன. குறிப்பாகத் தமிழ்க்கவிதை நீண்ட நெடிய பாரம்பரிய வாழ்க்கையைக் கொண்டது. திடகாத்திரமான புலமையும் உரத்தசிந்தனையும் கொண்ட கவிஞர்களால் வளம்பெற்றது.

சகலவிதமான கற்பனா தரிசனத்துடன் உலவிக் கொண்டிருக்கிற கவிஞனுக்கு இயற்கையின் மீது அளவற்ற காதலுண்டு. தனது சுற்றுப்புறம் மாசுபடுகிறபோது கொந்தளித்து, மனக்குமுறல்களை வார்த்தைகளில் வெளிப்படுத்தி மௌனப்புரட்சியை உண்டாக்குபவன் கவிஞன்.

ஐம்பூதங்களில் ஒன்றாகியக் காற்றைக் கடவுளாக நேசித்த பாரதி,

மலைக்காற்று நல்லது

கடற்காற்று மருந்து

வான்காற்று நன்று

ஊர்க்காற்றை மனிதர் பகைவனாக்கி

விடுகின்றனர்

அவர்கள் காற்று தெய்வத்தை நேரே வழிபடுவதில்லை

என்று வருத்தமடைகிறார். சுவாசம் நின்றுவிட்டால் உயிரில்லை. காற்று மாசுபட்டால் உலகமில்லை என்பதை நாம் எப்போது புரிந்து கொள்ளப் போகிறோம். காற்றை நேசியுங்கள் அவன் தெய்வம் என்கிறார் பாரதி.


ஆய்வு தொடரும்......................................

No comments:

Post a Comment