Sunday, November 6, 2011

கல்வித்தளம் - அபாயகரமான புரிதல்கள்


சமூகத்தின் மீதான கவனஈர்ப்பும் அக்கறையும் இல்லாமல் மனிதத்தன்மையற்று வாழ்ந்து கொண்டிருக்கும் இளைஞர்களைக் குறித்து இன்றைய சமூக ஆர்வலர்களும் படைப்பாளர்களும் சில உன்னதமான பேராசிரியர்களும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

வணிக வளாகமாக மாறிக்கொண்டிருக்கும் கல்விநிலையங்கள் அனைத்தும் மாணவர்களைத் தனியார் நிறுவனங்களுக்கு எப்படி அடிமையாக வேலை செய்ய வைக்க முடியும் என்ற முனைப்புடன் அல்லும் பகலும் சிந்தித்து அவர்களைக் கவனமாக உற்பத்தி செய்து வருகின்றன. பாடத்திட்டமும் மனனப் பயிற்சியுமே அறிவு எனத் தவறாகப் புரிந்துகொள்ளும் அரசு வேலைசெய்யும் பெற்றோர்களும் தமது பிள்ளைகளைப் பணம் காய்க்கும் மரங்களாக வளர்க்கவே ஆசைப்படுகிறார்கள்.


இது குறித்து கல்வித்தளத்தில் ஆழமாக விவாதிக்க வேண்டியிருக்கிறது. மேலும், அரசுத் தேர்வுகளை நோக்கிப் பயணிக்கும் மாணவர்கள் வெறுமனே தகவல் சேகரிப்பவர்களாக உருமாறுகிறார்கள். இவர்களது வாசிப்பும் வேலை என்பதன் பொருளாதாரத் தேவையை ஒட்டியதாகவே இருக்கிறது. அவ்வாறு தேர்வில் வெற்றியடைந்து பணியில் அமர்ந்தவுடன் தனது வாழ்க்கையைச் சுயம் சார்ந்து தனக்குள்ளேயே ஒடுக்கிக் கொள்கிறார்கள்.

படித்தவர்கள் அனைவரும் தவறு செய்கிறார்கள் எனக் கூக்குரலிடுகிற சமூகம் எதைப் படித்தவர்கள்? என்ன படித்தவர்கள்? எங்கே படித்தவர்கள்? என்ற கேள்வியைத் தமக்குள்ளே விவாதிக்க வேண்டும்.

இதனைத் தொடர்ந்து, அடிப்படைக்கல்வி தாய்மொழியில் கற்பிக்கப்படவேண்டும் என்ற புரிதல் இல்லாத தமிழ்ச்சமூகத்தில் தாய்மொழிக்கல்வியைக் கட்டாயப்படுத்த வேண்டிய நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்றைய உலகமயமாக்கச் சூழலில் பன்மொழியறிவு அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளையில் தாய்மொழியைத் தவிர்த்து எழக்கூடியப் பிறமொழியறிவு சுயசிந்தனையை மழுங்கடிக்கும். ஓருவர் வேலைவாய்ப்புக் கருதி எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். ஆனால், சிந்திப்பது தாய்மொழியில் மட்டுமே முடியும் என்பதை மெனக்கெட்டு மெத்தப் படித்தவர்களே புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். இன்று தமிழகக் கல்விநிலையங்களில் பயிலும் மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிகளையும் அரைகுறையாகவே கற்றுத் தேர்கின்றனர்.

பள்ளியிலிருந்து கல்லூரிக்கு வரும் மாணவர்களின் தமிழ் வாசிப்பும், அவர்கள் தமிழை எழுதும் முறையையும் கவனித்தால் எந்தத் தமிழ் ஆசிரியரும் கண்ணீர் விடாமல் இருக்க முடியாது. இத்தகைய இக்கட்டான சூழலில் சிக்கித்தவிக்கும் மாணவர்களின் செயல்பாடுகள் குறித்த அசலான சில பார்வைகள் ஆழ்ந்த துக்கத்தை ஏற்படுத்துகிறது. கோடிக்கணக்கில் பொறியியல் வல்லுநர்களையும் மருத்துவர்களையும் ஆசிரியர்களையும் அதிகாரிகளையும் உற்பத்தி செய்யும் கல்விநிலையங்களில் மாணவச் சமூகம் கேட்பாரற்றுச் சீர்குலைந்து நிற்கிறது.

கல்லூரியில் நான் கேட்ட சில மாணவ, மாணவியரின் உரையாடல்கள்,

டேய் மச்சி இன்னைக்குப் பஸ்ல ஒரு செம பிகர்ட...வரும்போது நோட் கொடுக்குற சாக்ல பேசி கரெக்ட் பண்ணிடேன்ட.. டேய் மச்சி அவ எறங்கிப் போகும் போது போன் நம்பர் கொடுத்தாட எப்புடுற ... நாங்கதான் பேசி நம்பர் வாங்கிடோம்ல..இனிமே என்ன விடிய விடிய ஒரே கடலதான். மச்சி அப்படி என்னதான்டா பேசுவீங்க.. நாங்க என்ன அமெரிக்கப் பயங்கரவாதத்தையும் ஈழப்போரப்பத்தியுமா பேசப்போறம்... நீ வேற என்னட மச்சி புதுசு புதுசா எதோ பேசுற.. விடு மச்சி இதெல்லாம் சிலபஸ்லயே இல்ல. அதுக்கெல்லாம் எவனாவது இருப்பானுங்க.. ஏதோ மூவர் தூக்குத் தண்டனைய ரத்து பண்ணச் சொல்லி ரோட்டுல கிடந்து மைக்கப் புடுச்சிக்கிட்டுத் தொண்டகிழியக் கத்திக்கிட்டுக் கிடப்பானுங்க.. தண்ணிகூடக் குடிக்கமாட்டாய்ங்க.. அதவுடு மச்சி நம்ம மேட்டருக்கு வா...

டேய் மாப்ள தல என்னமா..பைட் பண்றாரு..பஸ்ட்ஷோவுக்கே போயிட்டேன்ல.. தலனா சும்மாவ. நலல வேலட மச்சி அந்தச் சிடுமூஞ்சி வாத்தியான் கிளாஸ்க்குப் போகல...பங்காளி அந்த வாத்தியான் சிரிக்கவே மாட்றான்டா...எங்கேதான் இத அவனுக்குச் சொல்லிக் கொடுத்தாங்களோ தெரியல மச்சி...

டேய் மாப்ள... இந்த வாத்திங்க தொல்ல தாங்க முடியல..அவுங்களால பாடம் நடத்த முடியலனா இந்த அசைன்மென்ட்ட கொடுத்து உயிர வாங்குறானுங்க...இதுல பவர் பாயின்ட் பிரசன்டேசன் வேற.. நீ ஏன் கவலைப்படுற நமக்காகவே காலேஜ் முன்னாடி பிரவுசிங் சென்டர் வைச்சிருங்காங்க.. நேரபோய் நெட்டுல தட்டு அவ்வளவுதான் சிம்பிள்..இதுக்குப்போய் பீல்பண்றியே மச்சி..அப்ப..நூலகம்...அதெல்லாம் ப்ரீ பீரிடு வரும்போது பாத்துக்கலாம்...

ஏண்டி நேத்து விஜய் டி.வில கல்லூரியின் கத பாத்தியா... அது நாம ஸ்கூல் படிக்கும்போது போட்ட கனாக்காணும் காலங்களோட தொடர்ச்சியாம்...சூப்பரா இருக்குடி..நீயும் பாரேன்... இப்பொல்லாம் நான் மானாட மயிலாட பாக்கமுடியாம மிஸ் பண்றேன் தெரியுமா... காலேஜ்ல வேற நிறைய எழுதச்சொல்றாங்க...கொடுமைக்காரனுங்க..

என்ற உரையாடல்களை இன்றைக்கு இருக்குற எல்லா கல்லூரிகளிலும் எதார்த்தமாகக் கேட்கமுடிகிறது. இன்றைய இளைஞர்களின் ஊடகம் குறித்தப் பார்வை வேறுவகையானதாக இருக்கிறது. தினசரி நாளிதழ்களைக்கூட நுனிப்புல் மேய்ந்துவிட்டுத் தங்களுக்குத் தேவையான விளையாட்டுச் செய்திகளையும் சினிமாச் செய்திகளையும் போகிறபோக்கில் மேலோட்டமாகப் பார்த்துவிட்டுச் செல்கிறார்கள். அவர்களது அவசர உலகம் பெற்றோர்களாலும் ஆசிரியர்களாலும் புரிந்து கொள்ளப்படாததாகவே இருக்கிறது.

சமகாலத்தில் ஊடகம் இல்லாமல் வாழ்ந்துவிட முடியும் என்பது அசாத்தியமான செயல். இன்றைய சூழலில் இளைஞர்களிடையே ஊடகத்தின் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். சினிமா, இணையதளம், அலைபேசி, தொலைக்காட்சி என்ற தகவல் தொடர்பு சாதனங்களுக்குள் தன்னை அமிழ்த்திக் கொண்டு இவற்றைப் பொழுதுபோக்கிற்காகப் பயன்படுத்திவரும் இளைஞர்கள் பெருகிவருகின்றனர். இவை கணிசமான அளவில் மாணவர்களின் மனதில் உளவியல் சிக்கலை ஏற்படுத்துகிறது. இவ்வூடகங்களின் அதிமுக்கியமான நுகர்பொருள் மாணவர்கள் மட்டுமே. ஊடகங்களின் மீதான போதையில் வீழ்ந்து கிடக்கிற மாணவ சமுதாயத்தை மீட்டெடுப்பதற்கான மாற்று வழிகளை யோசிக்க வேண்டும்.


கல்வித் தளத்தில் இதற்கான சில மாற்றுவழிகள்

  • ஊடகங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் தகவல்களைப் பெறுவதற்கான கருவிகள் என்ற புரிதலை ஏற்படுத்த வேண்டும்.
  • நூலகத்தைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தைக் கற்றுத்தர வேண்டும்.
  • கற்பனைத்திறன் வளர்வதற்கும் படைப்பாக்க மனநிலை ஏற்படுவதற்கும் புத்தக வாசிப்பும் தன் சமூகம் சார்ந்த விமர்சனப் பார்வையும் அநீதிகளை எதிர்த்துக் கேள்வி எழுப்ப வேண்டிய மன எழுச்சியும் தேவை என்பதை உணர்த்த வேண்டும்.
  • உலகசினிமா, ஆவணப்படங்கள் மற்றும் குறும்படங்கள் காண்பிக்கப்பட்டு சமூகத்தின் மீதான புரிதலை உணர்த்தி மாற்றுத்திரைக்கான வழிவகைகளை ஏற்படுத்த வேண்டும்.
  • மாணவர்களின் வாசித்தல் திறனைப் பெருக்க நூல் விமர்சனக் கூட்டங்கள் மற்றும் மாணவர்களுக்கான கருத்தரங்குகள் நிகழ்த்தப்பட வேண்டும்.


பண்பாட்டுச் சூழலியல் நோக்கில் தமிழ்க் கவிதைகள் - 01


மனிதனை மையப்படுத்தி ஆராயும் சூழலியல்மானிடச் சூழலியல்” (human ecology) அல்லதுபண்பாட்டுச் சூழலியல்” (cultural ecology) எனப்படுகிறது. அது மனிதனை உள்ளடக்கிய சூழலியல் ஒழுங்கமைப்புகளைப் பற்றி ஆராய்கிறது. இயற்கையின் விளைவுகளையும் தாக்கங்களையும் மனிதன் எவ்வாறு பயன்படுத்திக் கொள்கிறான் என்பதையும் அதுபோல், அவன் எவ்வாறு சமூக நிறுவனத்தாலும் பண்பாட்டு விழுமியங்களாலும் செல்வாக்கிற்கு ஆட்படுகிறான் என்பதையும் முதன்மை நிலைப்படுத்தி பண்பாட்டுச் சூழலியல் ஆராய்கிறது என்கிறார் கான்ராட் பிலிப் கட்டாக் என்ற மேலைநாட்டு கோட்பாட்டாளர். இதனை மையமாகக் கொண்டு தமிழ்க் கவிதைகளை ஆராயும் நோக்கில் இவ்வாய்வுக் கட்டுரை அமைகிறது.

மேலைநாட்டுக் கோட்பாடுகளை வைத்து தமிழ் இலக்கியங்களை ஆராய்வதைவிட, தொல்காப்பியத் திணைக் கோட்பாட்டின் அடிப்படையை மையமாகக் கொண்டே பிற்கால இலக்கிய வடிவங்களை ஆராயலாம் என்கிறார் பணிக்கர். சங்க இலக்கியங்கள் பண்டைத் தமிழர்கள் இயற்கையோடு இயைந்து இனக்குழு வாழ்க்கை வாழ்ந்தனர் என்பதற்கு அடையாளமாகத் திகழ்கிறது. பிறகு, இதே இலக்கியங்களில் இனக்குழு வாழ்க்கை உடைந்து நிலமானியமுறைக்குத் தமிழ்ச் சமூகம் மாறிய நிலைமையும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் குறிஞ்சி, முல்லை ஆகிய இரண்டும் வறண்டு மாறிய நிலப்பகுதியான பாலை எனத் தமிழகம் ஐவகையான நிலப்பிரிவுகளை உள்ளடக்கியது என்கிறது சங்க இலக்கியங்கள். இத்திணைப்பெயர்களும் அந்தந்த நிலத்தின் பூப்பெயர்களைக் கொண்டு வைக்கப்பட்டுள்ளமை இயற்கையின் மீதான தீராக் காதலை வெளிப்படுத்துகிறது. இவ்வகையான இயற்கை நெறிக்காலம் நிலமானிய முறையை அடைந்து நாகரிகம் என்கிற பெயரில் தன்னை அழித்துக் கொள்ளத் தொடங்கியது. சங்க காலத்துத் தமிழ்ப் புலவர்கள் இயற்கையின் வளமையைக் கவிதையாகப் பாடினார். தற்காலத் தமிழ்க் கவிஞர்கள் இயற்கையின் வறுமையைத் தமது கவிதைகளில் பதிவு செய்து வருகின்றனர்.

நான்தான் இந்தப் பூமியின் கடைசிக் கவிஞனாக இருக்கலாம்”(I am Perheps the last poet) என்று எழுதினார் மாயகாவ்ஸ்கி என்ற கவிஞர். இப்படியொரு துக்ககரமான வார்த்தையை எந்தக் கவிஞனும் எந்த மொழியிலும் எழுதிவிடவில்லை. ஒவ்வொரு மொழியிலும் காலத்தின் மாற்றத்திற்கேற்ப கவிஞர்கள் பிறந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களது கவிதைகளே பிற்காலச் சந்ததியினருக்கு விதைகளாக இருக்கின்றன. குறிப்பாகத் தமிழ்க்கவிதை நீண்ட நெடிய பாரம்பரிய வாழ்க்கையைக் கொண்டது. திடகாத்திரமான புலமையும் உரத்தசிந்தனையும் கொண்ட கவிஞர்களால் வளம்பெற்றது.

சகலவிதமான கற்பனா தரிசனத்துடன் உலவிக் கொண்டிருக்கிற கவிஞனுக்கு இயற்கையின் மீது அளவற்ற காதலுண்டு. தனது சுற்றுப்புறம் மாசுபடுகிறபோது கொந்தளித்து, மனக்குமுறல்களை வார்த்தைகளில் வெளிப்படுத்தி மௌனப்புரட்சியை உண்டாக்குபவன் கவிஞன்.

ஐம்பூதங்களில் ஒன்றாகியக் காற்றைக் கடவுளாக நேசித்த பாரதி,

மலைக்காற்று நல்லது

கடற்காற்று மருந்து

வான்காற்று நன்று

ஊர்க்காற்றை மனிதர் பகைவனாக்கி

விடுகின்றனர்

அவர்கள் காற்று தெய்வத்தை நேரே வழிபடுவதில்லை

என்று வருத்தமடைகிறார். சுவாசம் நின்றுவிட்டால் உயிரில்லை. காற்று மாசுபட்டால் உலகமில்லை என்பதை நாம் எப்போது புரிந்து கொள்ளப் போகிறோம். காற்றை நேசியுங்கள் அவன் தெய்வம் என்கிறார் பாரதி.


ஆய்வு தொடரும்......................................