Sunday, December 12, 2010

திருப்பணிமாலை நூல் வெளியீட்டு விழா

அமெரிக்க நாசா விண்வெளிக் கழகத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றுகிற பொள்ளாச்சி நா.கணேசன் அவர்கள் எனது நெறியாளர் முனைவர் கு.ஞானசம்பந்தன் அவர்களிடம் திருப்பணிமாலை என்ற நூலை பற்றி அறிமுகம் செய்து, அந்நூலை ஆய்வு நிகழ்த்தக் கூறினார். மேலும், இவ்வாய்வு நூலாக வெளிவர வேண்டும் எனக் கருதி அதற்காக ஐயாயிரம் பணத்தையும் கொடுத்தனுப்பினார். எனது நெறியாளர் அந்நூலைப் பற்றி வியந்து கூறி என்னையே இந்நூல் பற்றி ஆய்வு செய்யுமாறு கூறினார். நான் திருப்பணிமாலை நூலைப் படித்துப் பார்த்தேன் எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. பிறகு இந்நூலின் வேறு பிரதி எங்காவது கிடைக்குமா என்று மதுரை நகரம் முழுக்கத் தேடி அலைந்தேன். மதுரையில் இருக்கிற மிக அற்புதமான நூலகம் நான்காம் சங்கம் என அழைக்கப்படுகிற செந்தமிழ்க் கல்லூரி நூலகத்தில் திருப்பணிமாலை நூல் கிடைத்தது. இந்நூலகத்தைப் பற்றி உங்களுக்கு நிச்சயமாகக் கூறியாக வேண்டும். மிகப்பழமையான நூலகம் குறைந்தது ஐம்பதாயிரத்திற்கும் மேலான நூல்கள் உள்ளன. மரபு இலக்கியங்கள் தொடங்கி நவீன இலக்கியங்கள் வரை ஏராளமான நூல்கள் பரந்து கிடக்கின்றன. நூலகர் முருகேசன் புன்சிரிப்போடு மாணவர்களுக்குத் தேவையான புத்தகங்களை எடுத்துத் தருவார். இவரைப் போன்ற நூலகர்களைப் பார்ப்பது மிக அரிது. நூலின் பெயர், ஆசிரியர் பெயர் மற்றும் நூல் எண்ணைக் குறிப்பிட்டால் போதுமானது உடனே முருகேசன் நம்மை இருக்கையில் அமர வைத்துவிட்டு நூலைக் கொண்டு வந்து தருவார். வாருங்கள் என் ஆய்வுக்குச் செல்லுவோம். இவ்வாறு திருப்பணிமாலை மூல நூல் பிரதி மிகப் பழமையாக இருந்தது. நூலின் தாளைத் தொட்டால் கிழிந்துவிடும் அளவிற்கு இருந்தது. அப்பிரதியை நகல் எடுத்து ஆய்வுக்குப் பயன்படுத்தினேன். இந்நூலின் மற்றொரு பிரதியை மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் காணமுடிந்தது. ஒரு வழியாக நூலை வாசித்து எனது கள ஆய்வினைத் தொடங்கினேன். ஆய்வு வெற்றிகரமாக முடிந்து எனக்கு இளநிலை ஆய்வுப் பட்டத்தினைப் பெற்றுத் தந்தது.
முனைவர் தொ.பரமசிவன் மற்றும் எனது நெறியாளரின் தூண்டுதலால் இவ்வாய்வேடு புத்தகமாக வெளிவந்தது. இவ்வாய்வேடு நூலாக வெளிவர வா.நேரு அவர்கள், எனது நண்பர்கள், மாணவர்கள் மற்றும் முனைவர் கி.பார்த்திபராஜா ஆகியோர் உறுதுணையாக இருந்தனர். மேலும் எனது கல்லூரி முதல்வர் அருட்தந்தை முனைவர் அ.மரியசூசை அடிகளார் உதவியுடன் இந்நூல் வெளியிடப்பட்டது. வெளியீட்டு விழாவில் கலைமாமணி முனைவர் கு.ஞானசம்பந்தன், முனைவர் புரிசை ச.நடராசன், ஊத்தங்கரை அதியமான் கல்வி நிறுவனங்களின் தாளாளர் திரு.திருமால் முருகன், வா.நேரு, சங்கையா அண்ணன்,எமது கல்லூரிப் பேராசிரியர்கள் போன்றோர் கலந்து கொண்டனர். மாணவர்கள் ஆர்ப்பரித்து மகிழும்படி அவர்களது ஆசியுடன் நூல் வெளியீட்டு விழா நடந்ததில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.